

தமிழக அரசு முழுவதும் பழுதாகி நிற்கிறது, டெல்லியிலிருந்து ஜெனரேட்டரை இயக்கிக்கூட இதை ஸ்டார்ட் செய்ய முடியாது என கமல்ஹாசன் கிண்டலடித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதிமய்யம் நிறுவனர் கமல் கூறியதாவது:
தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறப்படுகிறதே?
அப்படி ஒரு சந்தேகம் எழத்தான் செய்கிறது. தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படவேண்டும் என்பது அனைவரின் எதிர்ப்பார்ப்பும்கூட, அப்படி பார்க்கும்போது அவர்கள் அனைத்து அரசியல் கட்சிகளை அழைத்து பேசி இருக்கவேண்டும்.
ஆனால் வேட்பாளர்களுக்கு மட்டுமே கூறியுள்ளனர். அதேப்போன்று மறுதேர்தல் வைத்துள்ள இடங்களில் அந்த ஸ்ட்ராங் ரூமை திறக்கக்கூடாது என்பது எங்கள் வலியுறுத்தல். ஸ்ட்ராங் ரூமை திறந்துவிட்டால் அதன்பெயர் ஸ்ட்ராங்ரூம் அல்ல.
ராஜாஜி அரசு மருத்துவமனையில் மின்தடையால் நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வந்துள்ளதே?
இது மிக கேவலமான விஷயம், இன்று சினிமா தியேட்டரில், ஷாப்பிங் மாலில், சிறுவணிகர்கடைகளில் அநேக இடங்களில் மின்சாரம் இல்லை என்றால் ஜெனரேட்டர் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் நோயாளிகள் உயிர்காக்கும் இடத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஜெனரேட்டர் இல்லாதது பெரும் பிழையாக கருதுகிறேன்.
இல்லை ஜெனரேட்டர் இருந்தது செயல்படவில்லை என்கிறார்களே?
ஆமாம் ஜெனரேட்டர் இருந்துதான் செயல்படவில்லை, இங்கு எல்லாம் இருந்தும் செயல்படவில்லை என்பதுதானே பிரச்சினையே. அரசே பழுதுப்பட்டிருக்கு என்பதுதான் எங்கள் கூற்று.
ஒவ்வொரு விஷயமும் பிரச்சினை வரும்போதுதான் நாம் பேசுகிறோமா?
அதற்காகத்தான் மொத்தமாக அரசே பழுதுபட்டிருக்கிறது, செயல்படவில்லை என்று சொல்கிறேன் நான். இதை ஜெனரேட்டர் வைத்து எல்லாம் திரும்ப ஸ்டார்ட் செய்ய முடியாது. இதை டெல்லியிலிருந்து ஜெனரேட்டர் வைத்தும் ஸ்டார்ட் செய்ய முடியாது.
இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்தார்.