300 பூத்களில் பூஜ்ஜியம்; எங்கள் ஏஜெண்டுகள் கூடவா ஓட்டு போட்டிருக்கமாட்டார்கள்? - தினகரன் கேள்வி

300 பூத்களில் பூஜ்ஜியம்; எங்கள் ஏஜெண்டுகள் கூடவா ஓட்டு போட்டிருக்கமாட்டார்கள்? - தினகரன் கேள்வி
Updated on
1 min read

''300 பூத்களில் எங்களுக்கு பூஜ்ஜியம் ஓட்டுகளே விழுந்தன. அதாவது ஒரு ஓட்டு கூட விழவில்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அப்படியென்றால், எங்கள் பூத் ஏஜெண்டுகள்கூடவா, எங்களுக்கு ஓட்டு போட்டிருக்கமாட்டார்கள்?’’ என்று டிடிவி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''மக்களின் தீர்ப்புக்குத் தலைவணங்குகிறேன் என்று தேர்தல் முடிவு நாளன்றே ட்விட்டரில் தெரிவித்திருந்தேன். அதையேதான் இப்போதும் சொல்லுகிறேன்.

மாபெரும் வெற்றி பெறுவோம் என்றுதான் எதிர்பார்த்தோம். ஆனால் இந்த வாக்குகளுக்கு என்ன காரணம் என்பது போகப்போகத் தெரியவரும். தமிழகம் முழுவதும் பல பூத்களில், எங்களுக்கு பூஜ்ஜியம் ஓட்டுகள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதாவது 300க்கும் மேற்பட்ட பூத்களில் எங்களுக்கு ஒரு ஓட்டு கூட விழவில்லையாம். மக்கள், அமமுகவுக்கு ஓட்டுப்போடவில்லை என்றே வைத்துக்கொள்வோம். எங்கள் கட்சியினரே கூட ஓட்டுப்போடவில்லை என்று எடுத்துக்கொள்வோம். ஒவ்வொரு பூத்துக்கும் ஏஜெண்டாக உள்ள நான்கைந்து பேர் கூடவா ஓட்டுப்போடவில்லை.

நான் ஓட்டுப் போட்ட பூத்தில், எங்கள் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட ஓட்டுகள் இருக்கின்றன. ஆனால் 300க்கும் மேற்பட்ட பூத்களில் அமமுக பூஜ்ஜியம் என்கிற அறிவிப்பைத்தான் பார்த்தேன். இதற்கான பதிலையும் விளக்கத்தையும் தேர்தல் ஆணையம்தான் சொல்லவேண்டும்.

22 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் அதிமுக 9 தொகுதிகளில்தான் ஜெயித்திருக்கிறது. கிட்டத்தட்ட ஆட்சி நீடிப்பதற்கு இந்த அளவு எண்ணிக்கைதான் தேவை. இப்போதும் சொல்கிறேன். இந்த ஆட்சி ஊசலாட்டத்தில்தான் இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் கவிழும் என்பதை உறுதியாகச் சொல்லிக்கொள்கிறேன். என்ன நடக்கிறது என்பதைக் காத்திருந்து பாருங்கள்.

‘ஸ்லீப்பர் செல்’ இப்போது வெளியே வரமாட்டார்கள். சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்போதுதான், ‘ஸ்லீப்பர் செல்’ வெளியே தெரிவார்கள். கொஞ்சம் பொறுத்திருங்கள்.

எங்களுடன் பாஜக இணைந்தால், தமிழகத்தில் வெற்றி கிடைத்திருக்கும் என்று சுப்பிரமணியன் சுவாமி சொல்லியிருக்கிறார். அவர் என்னுடைய நண்பர். இது அவரின் தனிப்பட்ட கருத்து. நாங்கள் கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். பாஜகவுடன் எப்போதும் உறவில்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

கடந்த முறை தேர்தலில் பூஜ்ஜியம் வாங்கிய திமுக, இப்போது 37 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. எங்களை விட கமல்ஹாசனும் சீமானும் அதிக வாக்குகள் வாங்கியுள்ளனர் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இப்போது வரை நாங்கள் வலுவாகத்தான் இருக்கிறோம். இன்னும் எங்கள் கட்சியை வலுப்படுத்துவோம். வெற்றி பெறுவோம். எல்லாத் தேர்தல்களிலும் மக்கள் ஒரேமாதிரியாக வாக்களிப்பதில்லை''.

இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in