Published : 24 May 2019 05:47 PM
Last Updated : 24 May 2019 05:47 PM

சனாதன சக்திகளின் கைகளில் சிக்கிக்கொண்ட தேசத்தைப் பாதுகாக்க நாடாளுமன்றத்தில் பணியாற்றுவோம்: திருமாவளவன்

எனக்கெதிராக சாதி-மதவெறி சக்திகள் திட்டமிட்டுப் பரப்பிய அவதூறுகளையெல்லாம் வாக்காளர்கள் முறியடித்துள்ளனர் என, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தொல்.திருமாவளவன் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை எண்ணிக்கையில் வெற்றி பெற்று மீண்டும் நரேந்திர மோடி மத்தியில் ஆட்சியமைக்கவிருக்கிறார். இப்படியொருநிலை நடந்துவிடக் கூடாதே என்பதுதான் அனைத்து ஜனநாயக சக்திகளின் பெரும் கவலையாக இருந்தது.

எனினும், வகுப்புவாத சக்திகளை எதிர்த்துச் செயல்படும் எதிர்க்கட்சிகள் யாவும் தேசிய அளவில் ஒருங்கிணைந்து தேர்தலைச் சந்திப்பதற்கான சூழல் அமையாததால் பாஜகவுக்கு எதிரான வாக்கு வங்கி மானாவாரியாகச் சிதறிவிட்டது. இந்த நிலைமைதான், மதத்தின் பெயரால் அரசியல் ஆதாயம் தேடும் பாஜக தலைமையிலான சங் பரிவார் கும்பலுக்கு அரும்பெரும் வாய்ப்பாக அமைந்து மாபெரும் வெற்றிக்கு வழிவகுத்துவிட்டது. 

எனினும், வட இந்திய மாநிலங்களில் நிகழ்ந்தைப்போல அல்லாமல் கர்நாடகாவைத் தவிர தென்னிந்திய மாநிலங்களில் பாஜகவால் ஆதாயம் பெற இயலவில்லை. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் படுதோல்வியைச் சந்தித்துள்ளன. குறிப்பாக, தமிழ்நாட்டில் பாஜக- அதிமுக கூட்டணிக்கு தமிழக மக்கள் வலுவாகப் பாடம் புகட்டியுள்ளனர்.

மக்களை ஏய்ப்பதற்கென இறுதி வேளையில் அவர்களின் கூட்டணி எவ்வகையிலும் பொருந்தாக் கூட்டணி என்பதை வெகுவாக உணர்த்தியுள்ளனர்.  அத்துடன், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மகத்தான வெற்றியை வழங்கியுள்ளனர். இந்த மண் பெரியாரின் பேருழைப்பால் பக்குவப்பட்ட சமூக நீதி மண்.

எனவே, இங்கே சாதி-மதவெறி சக்திகளுக்கும் அவர்களுக்குத் துணை நிற்கும் எவருக்கும் இடமில்லை என்பதை இத்தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளன.

பணமதிப்பு அழிப்பு, நீட், ஹைட்ரோகார்பன், ஸ்டெர்லைட் ஆலை போன்றவற்றை எதிர்த்து மோடிக்கு எதிராக திமுக தலைமையில் கூட்டணிக் கட்சிகள் தொடர்ச்சியாகப் போராடியதன் விளைவாக இங்கே மோடி எதிர்ப்பு அலை படிப்படியாகக் கட்டமைக்கபட்டது.

மேலும், இஸ்லாமியர், கிறிஸ்தவர் ஆகிய சிறுபான்மையினரின் மோடி எதிர்ப்பும் இங்கே வலுவாக வேரூன்றியிருந்தது. இத்தகைய சூழல்தான் பாஜக - அதிமுக கூட்டணியைக் குப்புற வீழ்த்தியுள்ளது. 

சிதம்பரம் மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரையில், அனைத்துத் தரப்பு வாக்காளர்களுக்கும் எனக்களித்த வெற்றியின் மூலம், எனக்கெதிராக சாதி-மதவெறி சக்திகள் திட்டமிட்டு பரப்பிய அவதூறுகளையெல்லாம் முறியடித்துள்ளனர்.

எனவே, இந்த வெற்றியை சிதம்பரம் மக்களவைத் தொகுதி மக்கள் யாவருக்கும் காணிக்கையாக்குகிறேன்.

அத்துடன், புதுச்சேரி உட்பட தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணிக்கு வரலாறு காணாத வகையில் பெருவெற்றியை வழங்கிய பொதுமக்களுக்கும் திமுக கூட்டணியின் வெற்றிக்குப் பாடுபட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் யாவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மீண்டும் சனாதன சக்திகளின் கைகளில் சிக்கிக்கொண்ட இந்த தேசத்தையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் சனநாயகத்தையும் பாதுகாத்திடும் வகையில் விடுதலைச் சிறுத்தைகள் நாடாளுமன்றத்தில் பணியாற்றுவோம் என வெற்றிச் சூளுரையாக உறுதியளிக்கிறேன்" என, தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x