

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:
''வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை மறுநாள் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் குறிப்பிடக்கூடிய அளவில் மழை இல்லை. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களில் வெப்பம் அதிகரித்து அனல் காற்று வீசும். பொதுமக்கள் 11 மணி முதல் மாலை 4 மணி வரை பாதுகாப்பாகப் பயணிக்கவும். பயணங்களைத் தவிர்த்துக் கொள்ளவும்.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ். குறைந்தபட்ச வெப்பநிலையாக 29 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.