Published : 23 May 2019 06:13 PM
Last Updated : 23 May 2019 06:13 PM

தேனி, ராமநாதபுரம் தொகுதிகளில் என்னதான் நடக்கிறது? புகார் அளிக்க திமுக முடிவு

நாடெங்கும் மக்களவைத் தொகுதி முடிவுகள் வேகமாக அறிவிக்கப்பட, தமிழகத்தில் தேனி மற்றும் ராமநாதபுரம் தொகுதியில் மட்டும் வாக்கு எண்ணிக்கை தாமதப்படுத்தப்படுவதால் தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளிக்க உள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் அதிமுக முன்னிலை பெற்றுள்ளது. அது ஓபிஎஸ் மகன் ரவிந்திரநாத் போட்டியிடும் தேனி தொகுதி ஆகும். மற்ற அனைத்துத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.

பின் தங்கியிருந்த சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் 5 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றுவிட்டார். தேனியில் காலையிலிருந்து அதிமுக முன்னிலையில் இருந்தாலும் வாக்கு எண்ணிக்கை ஏனோ மெதுவாக தாமதப்படுத்தப்பட்டு எண்ணப்படுவதாகவும், செய்தியாளர்களுக்கும் மற்ற கட்சியினருக்கும் உரிய தகவல் தரவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.

இதேபோன்று ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள முஸ்லீக் லீக் வேட்பாளர் நவாஸ் கனி 60 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் முன்னிலையில் இருந்தாலும் இங்கும் வாக்கு எண்ணிக்கை தாமதப்படுத்தப்பட்டு வருவதாகவும், யாருக்கும் உரிய விளக்கமும் அளிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தலுக்கு முன் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கோவை, தேனி, கரூர், ராமநாதபுரம் ஆகிய 4 தொகுதிகளில் கட்சியினர் அதிக கவனம் வைக்கவேண்டும் என்று எச்சரித்திருந்தார். இவை அத்தனையும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் ஆகும்.

கோவையில் சிபிஎம் வேட்பாளர் நடராஜன் நெருங்க முடியாத அளவு முன்னிலை பெற்றுவிட்டார். கரூரிலும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்று விட்டார். ஆனால் தேனி, ராமநாதபுரத்தில் முடிவுகள் வெளியாவதில் மிகுந்த தாமதம் ஏற்படுவதால் இதுகுறித்து தமிழக தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் முறையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x