Published : 29 May 2019 12:00 AM
Last Updated : 29 May 2019 12:00 AM

ஊரக வேலை திட்டத்தில் பணி வழங்காததால் பிழைப்புக்காக கிராமங்களை விட்டு நகரங்களில் குடியேறும் மக்கள்: கூடுதல் நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் முறையாக வேலை வழங்காததால் கிராமப்புறங்களில் இருந்து வேலைக்காக மக்கள் நகரங்களில் குடியேறி வருகின்றனர். எனவே, இத்திட்டத்தில் முறைகேடுகளைக் களைந்து, கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

இந்தியா முழுவதும் கடந்த 2005-ம் ஆண்டு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டது. விவசாயப் பணிகள் இல்லாத காலங்களில் கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்தில், நாள் கூலியாக ரூ.224 வழங்கப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக ஊரக வேலை உறுதி திட்டப் பணிகளில் இயந்திரங்களை பயன்படுத்தி முறைகேடுகள் நடப்பதாகவும், சரிவர வேலை வழங்குவதில்லை எனவும் கூறி, பல்வேறு அரசு அலுவலகங்களில் கிராமத் தொழிலாளர்கள் மனு அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து, அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க தூத்துக்குடி மாவட்டத் தலைவர் கு.ரவீந்திரன் கூறியதாவது: இத்திட்டத்தின்படி அடையாள அட்டை வைத்துள்ள குடும்பத்துக்கு 100 நாட்கள் வேலை வழங்க வேண்டும். அப்படி வேலை வழங்காத நாட்களுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும். ஆனால், அதிகாரிகள் இவ்வாறு வழங்குவதில்லை. இது சட்டவிரோதமாகும்.

முறைகேடு

இத்திட்டத்தில் இயந்திரங்கள் பயன்படுத்த அனுமதி இல்லை. ஆனால், சில இடங்களில் ஜேசிபி உள்ளிட்ட இயந்திரங்களை பயன்படுத்தி முறைகேடு நடந்து வருகிறது. மத்திய அரசிடமிருந்து நிதி வரவில்லையென எனக் கூறி, தற்போது, 5 சதவீத பணியாளர்களுக்குகூட வேலை வழங்குவதில்லை. மத்திய அரசு இத்திட்டத்துக்கான நிதியை குறைக்காமல் வழங்க வேண்டும். முழுமையான கூலி ரூ.224 வழங்க வேண்டும். இத்திட்டத்தில் முறைகேடுகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் கே.பி.பெருமாள் கூறும்போது, ‘‘100 நாள் திட்டத்தில் வேலை இல்லாததால் மக்கள் கிராமங்களில் இருந்து வேலைக்காக நகரங்களில் குடியேறி வருகின்றனர். இத்திட்டத்தை முடக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட்டு, முறையாக செயல்படுத்த வேண்டும்’’ என்றார்.

ஜூனில் சீராகும்

ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘இத்திட்டத்தில் அனைத்தும் ஆன்லைன் முறையில் மேற்கொள்வதால் தவறுகள் நடப்பதற்கு வாய்ப்பில்லை. மேலும், ஜூன் 1-ம் தேதி முதல் புதிய நிர்வாக ஒப்புதல் கிடைத்து விடும். அதுவரை இருக்கும் நிதியைக் கொண்டு சமாளிக்க வேண்டும் என்பதால் சில இடங்களில் இருப்புத் தொகைக்கு ஏற்ப வேலை வழங்கப்படுகிறது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x