Published : 02 May 2019 06:23 PM
Last Updated : 02 May 2019 06:23 PM

சென்னை சினிமா படப்பிடிப்பு அரங்கில் பெரும் தீ: லட்சக்கணக்கான ரூபாய் செட்டிங் நாசம்

சென்னை மீனம்பாக்கத்தில் தனியார் ஆலையில் சினிமா ஷூட்டிங் நடக்கும் இடத்தில் நடந்த தீவிபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள செட்டிங் அரங்குகள் எரிந்துப்போனது.

சென்னை மீனம்பாக்கம் அருகே பின்னி மில் செயல்பட்டு வந்தது. அது மூடப்பட்டதால் சினிமா படபிடிப்புகாக அங்கு அரங்குகள் அமைக்கப்பட்டு சினிமா ஷூட்டிங் நடந்து வந்தது. பிரபல நடிகர்கள் நடித்த பல திரைப்படங்கள் இங்கு படமாகியுள்ளது. பல ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த இடத்தில் ஆங்காங்கே அரங்குகள் அமைக்கப்பட்டு படபிடிப்பு நடப்பது வழக்கம்.

50-க்கும் மேற்பட்ட அரங்குகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளது, நிரந்தர அரங்கமும் அங்கு உண்டு. அவ்வப்போது படங்களுக்கு ஏற்ப அரசுங்குகளும் அமைக்கப்படுவதுண்டு. இந்நிலையில் அங்கு பிரபல நடிகர் நடிக்கும் புதிய படத்திற்கான படப்பிடிப்பு அரங்கு அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.

இதற்காக பல லட்சம் ரூபாய் செலவில், வீடுகள், வங்கி, தேவாலயம் உள்ளிட்டவற்றுடன் சிறிய ஊர்ப்போன்ற தோற்றத்துடன் 50-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், இன்று பிற்பகலில் அங்கு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. 

அரங்கு அமைக்கும் பணியில் வெல்டிங் வேலையின்போது கிளம்பிய தீப்பொறி பரவி தீப்பிடித்ததாக தெரிகிறது. அரங்குகள் பெரும்பாலும் தற்காலிக அரங்குகள் என்பதால் மரம், அட்டை, தக்கை, பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு அமைக்கப்படும். இவைகள் எளிதில் தீப்பிடிக்கும் வாய்ப்பு உள்ளதால் தீ மளமளவென பரவியது.

இது பற்றி தகவல் அறிந்ததும் கிண்டி, சானிடோரியம் பகுதியிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டனர். ஆனாலும் தீயை கட்டுபடுத்த முடியவில்லை, இதையடுத்து நீர் தேவைக்காக சென்னை குடிநீர் வாரிய தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு தீயணைக்கும் முயற்சி நடந்தது.

தீ விபத்தில்  50-க்கும் மேற்பட்ட சினிமா அரங்குகள் தீப்பிடித்து எரிந்தது. தீயில் எரியும் அரங்கு பொருட்கள் காரணமாக அந்தப் பகுதியே புகை மண்டலமாக மாறியது. பொதுமக்கள், செய்தியாளர்கள் யாரையும் போலீஸார் உள்ளே அனுமதிக்கவில்லை.

தீயணைப்பு வீரர்கள் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் செலவில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகள், ஜெனரேட்டர் ஆகியவை எரிந்து நாசமாகின.

இன்று அந்தப்பகுதியில் எங்குமே சினிமா, சீரியல் படப்பிடிப்பு நடைபெறவில்லை அதனால் யாருக்கும் உயிர் சேதமோ காயமோ ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.

மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக முதல்கட்டத்தகவல் தெரியவந்துள்ளது.  தீவிபத்து குறித்து மீனம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையின் பிரதான இடத்தில் இவ்வாறு சினிமா சூட்டிங்கிற்காக செட்டிங் அமைக்க இடம் தரும்போது பாதுகாப்பு கருதி தீயணைப்புத்துறை சோதனை நடத்தப்பட்டு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு சான்றிதழ் எதுவும் அளிக்கப்பட்டதா? என்பது குறித்த பதிலில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x