மாண்டலின் ஸ்ரீநிவாஸ் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

மாண்டலின் ஸ்ரீநிவாஸ் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல்
Updated on
1 min read

பிரபல இசைக்கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் மறைவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "பிரபல கர்நாடக இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் உடல்நலக் குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.

மாண்டலின் என்ற இசைக் கருவியை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்திய பெருமைக்குரியவர் மாண்டலின் ஸ்ரீநிவாஸ். இசைக் குடும்பத்தில் பிறந்த மாண்டலின் ஸ்ரீநிவாஸ் தன்னுடைய மாண்டலின் இசைக் கருவி மூலம் பாடல்களை ஒலிக்கச் செய்து, இசை ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர்.

மத்திய அரசின் "பத்மஸ்ரீ", "சங்கீத ரத்னா" உள்பட பல விருதுகளைப் பெற்றவர் மாண்டலின் ஸ்ரீநிவாஸ்.

மாண்டலின் ஸ்ரீநிவாஸ் மறைவு கர்நாடக இசைத் துறைக்கு மிகப் பெரிய இழப்பாகும். இவர் விட்டுச் சென்ற இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பலனளிக்காமல் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் சென்னையில் வெள்ளிக்கிழமை காலை இறந்தார். அவருக்கு வயது 45.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in