Published : 09 May 2019 12:00 AM
Last Updated : 09 May 2019 12:00 AM

உளவுத்துறை அறிக்கையால் கட்சி மேலிடம் நடவடிக்கை: திருப்பரங்குன்றத்தில் குவியும் அதிமுகவினர்; தேர்தல் பணியில் திடீர் வேகம்

திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் பணி குறித்த உளவுத்துறை அறிக்கையால் 3 நாட் களாக ஏராளமான அதிமுகவினர் தொகுதிக்குள் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

மாற்றுக்கட்சியினர் வியக்கும் அளவுக்குத் தேர்தல் பணியிலும் வேகம் காட்டி வருகின்றனர். திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வரும் 19-ம் தேதி நடக்கவுள்ளது. இத்தொகுதியில் அதிமுக, திமுக, அமமுக கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.

திமுக.வினர் உள்ளூர் நிர்வாகிகளுடன் 15 வெளி மாவட்ட கட்சியினர் இணைந்து தேர்தல் பணியாற்றி வருகின்றனர். திமுக துணைப்பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் பா.சரவணன் முதற்கட்ட சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கே.எஸ்.அழகிரி, வைகோ, முத்தரசன் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்துள்ளனர். இன்று திருநாவுக்கரசர் பிரச்சாரம் செய்கிறார். அமமுகவினர் அதிகளவில் வெளி மாவட்ட நிர்வாகிகளை வைத்து தேர்தல் பணியாற்றி வருகின்றனர். அதிமுக.வில் அமைச்சர்கள் சி.சீனிவாசன், செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், பாஸ்கரன் மற்றும் 16 மாவட்டச் செயலாளர்கள் தலைமையிலான நிர்வாகிகள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மே 6-ல் முதல்வர் கே.பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். நேற்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்தார். அதிமுக தேர்தல் பணி குறித்து உளவுத் துறையினர் அறிக்கை அனுப்பியுள்ளனர். இதுகுறித்து உளவுப்பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், மற்ற கட்சிகளைப்போல் அதிமுக.வும் தேர்தல் பணியாற்றுகிறது. எனினும், ஆளுங்கட்சிக்கு ஏற்ற வேகம் இதுவரை இல்லை. இதே நிலை நீடித்தால் எதிர்க்கட்சிகள் உற்சாகமடைந்துவிடும். கள நிலவரத்தைத்தான் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளோம்’ என்றார்.

இந்த அறிக்கை தொடர்பாக அதிமுக மேலிடத் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். மதுரையில் முதல்வர் தங்கியிருந்தபோதும் விவாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த கட்சியினர் அதிகமாக குவிந்து வருகின்றனர். தற்போது காலை, மாலை என இரு வேளைகளிலும் வார்டுகளில் தொடர்ந்து வலம் வருகின்றனர். தேர்தல் பணியாற்றும் பகுதியிலேயே தங்கியிருக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மேற்பார்வையிட்டு வருகின்றனர்.

50 வாக்குகளுக்கு ஒருவர், ஒரு வாக்குச்சாவடிக்கு 20 நிர்வாகிகள் என நியமித்துள்ளனர். இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளனர். ஒவ்வொரு வாக்காளரும் யாருக்கு ஆதரவாக உள்ளனர் என்பதைத் துல்லியமாகக் கணித்து பட்டியல் அளிக்குமாறு அதிமுக.வினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டச் செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏ.க்கள் என பலரும் வீடு,வீடாகச் சென்று தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு வாக்குக் கேட்டு வருகின்றனர். அதிகளவில் குவியும் அதிமுக.வினர், தேர்தல் பணியில் காட்டும் வேகம் மாற்றுக் கட்சியினரை மலைக்க வைத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x