விஷத்தை விதைக்கிறார்; கமலின் நாக்கை அறுக்கத்தான் போகிறார்கள்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காட்டம்

விஷத்தை விதைக்கிறார்; கமலின் நாக்கை அறுக்கத்தான் போகிறார்கள்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காட்டம்
Updated on
1 min read

கமல்ஹாசனின் நாக்கை அறுக்கத்தான் போகிறார்கள் என, பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், அரவக்குறிச்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய கமல்ஹாசன், "சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே.

நான் காந்தியின் மானசீக கொள்ளுப் பேரன். அந்தக் கொலைக்கு நான் இன்று கேள்வி கேட்க வந்திருக்கிறேன். இது சமரச இந்தியாவாக, சமமான இந்தியாவாக, மூவர்ணக் கொடியே இருக்கும் இந்தியாவாக இருக்க வேண்டும் என்பதுதான் நல்ல இந்தியர்களின் ஆசை. நான் நல்ல இந்தியன் என மார்தட்டிச் சொல்வேன்" என கமல்ஹாசன் பேசினார்.

கமல்ஹாசனின் இந்தப் பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசியச் செயலாளர் எச்.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று (திங்கள்கிழமை) தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தீவிரவாதிகளுக்கு மதமெல்லாம் கிடையாது. இந்து, இஸ்லாம், கிறிஸ்தவன் என அவர்களுக்கு மதம் கிடையாது. அவர்களை தீவிரவாதி என்றுதான் சொல்ல வேண்டும். இந்துதான் முதல் தீவிரவாதி என, சிறுபான்மையினர் வாக்குகளைப் பெறுவதற்காக நடிக்கும் கமல்ஹாசனின் நாக்கை ஒருகாலத்தில் அறுக்கத்தான் போகிறார்கள்.

அந்நிய சக்திகளின் ஆதிக்கத்தில், யாரையோ திருப்திப்படுத்துவதற்காக கமல்ஹாசன் பேசுகிறார். ஏன் இப்படி வார்த்தைகளை உளறிக் கொட்டுகிறார்? விதைக்கிறார்? அவர் விதைக்கும் ஒவ்வொரு வார்த்தையும் விஷமாக இருக்கிறது" என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in