Last Updated : 26 May, 2019 12:00 AM

 

Published : 26 May 2019 12:00 AM
Last Updated : 26 May 2019 12:00 AM

கன்னியாகுமரி காப்பகத்தில் மனவளர்ச்சி குன்றியவர் மீது தாக்குதல்: உரிமையாளர் மீது போலீஸார் வழக்குப் பதிவு

குமரியில் மனவளர்ச்சி குன்றியோர் காப்பகத்தில் மாற்றுத்திறனாளி இளைஞரை, இரக்கமின்றி கம்பாலும், கையாலும் உரிமையாளர் அடித்து உதைக்கும் வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இளைஞரை ஒருவரை கையாலும், பிரம்பாலும் ஒருவர் ஆவேசத்துடன் தாக்குவதும், கீழே விழுந்த பின்னரும் காலால் மிதிபடும் அந்த இளைஞர் எழ முடியாமல் தவிப்பதுமாக, 1 நிமிடம் 15 விநாடிகள் ஓடும் வீடியோ சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலானது. இதுபற்றி, அதிகாரிகள் முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இச்சம்பவம் குறித்து சைல்டு லைன் சேவைக்கும் புகார்கள் குவிந்தன.

விசாரணையில் உறுதி

இதைத்தொடர்ந்து, குமரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேல் தலைமையில், மாற்றுத்திறனாளிகள் நலக் குழுவினர் விசாரணை நடத்தினர். அப்போது இளைஞரைத் தாக்கும் சம்பவம் நடந்த இடம், நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனியில் `அன்பின் சிகரம்’ என்ற பெயரில் செயல்பட்டு வரும் மனவளர்ச்சி குன்றியோர் தனியார் சிறப்பு பள்ளி என தெரியவந்தது. அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், சம்பவம் உண்மை என்பது தெரியவந்தது.

விசாரணையில் தாக்கப்பட்ட மாற்றுத்திறனாளி இளைஞருக்கு 21 வயதாகிறது. தான் என்ன செய்கிறோம் என்பதை உணராமல் காப்பக வளாகத்தில் அவர் நடமாடியதால், ஆத்திரமடைந்த காப்பக உரிமையாளர் கிருஷ்ணமணி, அந்த இளைஞரைத் தாக்கி உள்ளார். கிருஷ்ணமணியை மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

போலீஸ் வழக்குப் பதிவு

குமரி மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் கதிர்வேல் கூறியதாவது: புகாருக்குள்ளான `அன்பின் சிகரம்’ காப்பகத்தில் விசாரித்ததில், அதன் உரிமையாளர் கிருஷ்ணமணி தொடக்கத்தில் மறுத்தார். பின்னர், ஆதாரத்துடன் விசாரணை நடத்தியபோது புகாரை ஒப்புக்கொண்டுள்ளார்.

அந்தக் காப்பகத்தில் 22 மாற்றுத் திறனாளிகள் தங்கி படித்துள்ளனர். தற்போது, 12 பேர் மட்டுமே உள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவரை பெற்றோர் அழைத்துச் சென்றுவிட்டனர். கிருஷ்ணமணி மீது சுசீந்திரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குமரி மாவட்டத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றிய 8 காப்பகங்களையும் கண்காணித்து வருகிறோம் என்றார்.

விதிமுறைகள் என்ன?

குமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் குமுதா கூறியதாவது: குமரி மாவட்டத்தில் ஒரு அரசு குழந்தைகள் நல காப்பகம் உட்பட 74 காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 2,700 குழந்தைகள் தங்கியுள்ளனர். இவற்றில் 60 சதவீதம் பெண் குழந்தைகள்.

காப்பகங்களில் 25 குழந்தைகளுக்கு 7 பணியாளர்கள் இருக்க வேண்டும். காப்பகங்களின் உண்மைத் தன்மையை அறிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். அவற்றின் பதிவுகளை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். காப்பகத்தில் வேலை செய்யும் பணியாளர்கள் போலீஸாரின் நற்சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 7 குழந்தைகளுக்கு ஒரு கழிப்பிடம், 10 குழந்தைகளுக்கு ஒரு குளியலறை இடவசதிகள் வேண்டும்.

மேலும், அனைத்து குழந்தைகளுக்கும் ஆதார், வங்கி கணக்கு போன்றவை இருக்கவேண்டும். உணவு, குடிநீர் விநியோகம் குறித்து சோதனை செய்து சான்றுகளை குழந்தைகள் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். உணவு மாதிரியை தினமும் எடுத்து வைக்கவேண்டும். காப்பகத்துக்கு வரும் வெளிநபர்கள் குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும். குழந்தைகளை உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ துன்புறுத்தக்கூடாது. இது நிரூபிக்கப்பட்டால் காப்பகம் நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x