

இலங்கையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதி ஒருவர் சென்னை வந்து சென்றதாக கிடைத்த தகவலை அடுத்து தமிழகம் முழுவதும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பில் 253 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கையில் தற்கொலைப்படை தாக்கு தல் நடத்திய தீவிரவாதிகளுக்கு தலைவ ராக செயல்பட்ட ஜஹ்ரான் ஹாசிமின் கூட்டாளி ஹஸன். இவர் தற்கொலைப் படை தீவிரவாதிகளில் ஒருவராக இருக் கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஹஸன் உயிரோடு இருக்கிறாரா அல்லது தற்கொலை படை தாக்குதலில் இவரும் உயிரிழந்து விட்டாரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
சென்னை வந்து சென்ற தீவிரவாதி
இலங்கையில் தாக்குதல் நடப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு ஹஸன் சென்னை வந்து சென்றதற்கான தடயங்களை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சேகரித்துள்ளனர். சென்னை வந்த ஹஸன், இங்கு சிலரை சந்தித்து பேசி இருக்கிறார். அந்த நபர்கள் யார் என்பது குறித்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கை குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் தமிழகத்தில் தங்கி இருக்கலாம் என என்ஐஏ அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். அவர்களால் தமிழகம் மற்றும் இந்தியா வின் பிற மாநிலங்களிலும் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது. இதனால் அவர்களை பிடிப்பதற்காக சென்னை, கோவை, ராமநாதபுரம், அதிராமபட்டிணம், ராமேசுவரம், தஞ் சாவூர், கும்பகோணம், நெல்லை உட்பட தமிழகம் முழுவதும் என்ஐஏ அதி காரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.
ராமநாதபுரத்தில் முகாம்
இதனிடையே கேரளாவைச் சேர்ந்த 3 பேரை என்ஐஏ கைது செய்துள்ளது. அவர்களில் ரியாஸ், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த ஒரு வருடன் அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டுள்ளதாகவும், அதனால் இலங்கை குண்டு வெடிப்பில் தொடர் புடையவர்கள் ராமநாதபுரம் மாவட் டத்தில் தங்கியிருக்கலாம் அல்லது இங்குள்ளவர்களுக்கு ஐஎஸ் அமைப் புடன் தொடர்பு இருக்கலாம் என என்ஐஏ அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
அதன்பேரில், 4 பேர் கொண்ட என்ஐஏ அதிகாரிகள் குழு கடந்த 2 நாட்களாக ராமநாதபுரத்தில் தங்கி விசாரணை செய்து வருகின்றனர். இவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தின் சில இடங்களில் சந்தேகத்துக்குரியவர்கள் குறித்தும் விசாரிக்கின்றனர்.
தொடர் சர்ச்சையில் ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தின் சில பகுதிகள் தீவிரவாத இயக்கங்களின் கூடாரமாக மாறுவதற்கான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. 4 ஆண்டு களுக்கு முன்பு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு சிரியா உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு தாக்குதல்களை நடத்தியபோது, ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் 15 இளைஞர்கள் ஐஎஸ் அமைப்பின் டி-சர்ட் அணிந்து, அதை முகநூலில் வெளியிட்டனர். மத்திய, மாநில உளவுத் துறையினர் மற்றும் போலீஸார் விசா ரணை செய்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
ஓராண்டுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, தேவிபட்டினம், தொண்டியைச் சேர்ந்தவர்கள் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் அதிராமபட்டிணத் தைச் சேர்ந்த 10 இளைஞர்கள் தனி ‘வாட்ஸ் அப்’ குழு அமைத்து, சிறையில் உள்ள முஸ்லிம் தீவிரவாதிகளை மீட்பதற்காக நிதி திரட்டும் கூட்டம் கீழக்கரையில் நடத்த திட்டமிட்டது ராமநாதபுரம் தனிப்பிரிவு போலீஸாருக்கு தெரியவந்தது. அதையடுத்து அந்த 10 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூருவில் முன்னாள் ராணுவ வீரரும், லாரி ஓட்டுநருமான ஒருவர் ராமநாதபுரத்தில் 19 தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக அங்குள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த வாரம் போன் மூலம் தகவல் தெரிவித்தார். பெங்களூரு போலீஸார் அவரைக் கைது செய்து, விசாரணை செய்தபோது அது உண்மை இல்லை எனத் தெரிய வந்தது.
அன்றைய தினம் இரவுதான் பாம்பன் சாலை பாலத்தில் குண்டு வைத்துள்ளதாக ராமநாதபுரம் போலீஸாருக்கு போன் மூலம் மிரட்டல் வந்தது. அதன்பின் வெடிகுண்டு நிபுணர்கள் பாம்பன் ரயில் பாலம், சாலை பாலத்தை சோதனை நடத்தியபோது, அதுவும் உண்மை இல்லை என தெரியவந்தது.
இதுபோன்று சம்பவங்களால் ராம நாதபுரம் மாவட்டத்தில் தீவிரவாத இயக்கங்களின் செயல்பாடுகள் இருப் பதற்கான அறிகுறிகள் உள்ளதா என என்ஐஏ மற்றும் மத்திய உளவுப் பிரிவினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கையைச் சேர்ந்தவர் சென்னையில் கைது; மேலும் 2 பேரிடம் தொடர்ந்து விசாரணை
சென்னை மண்ணடியைச் சேர்ந்த ஒருவரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர் கொடுத்த தகவலின்பேரில் சென்னை பூந்தமல்லி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த 3 பேரிடம் என்ஐஏ மற்றும் கியூ பிரிவு அதிகாரிகள் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர். இவர்களில் ஒருவரான துனுகா ரோஷன் என்பவர் கடந்த ஓராண்டாக பாஸ்போர்ட் உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இன்றி சென்னையில் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது.
மேலும், இலங்கையில் அவர் மீது கொலை வழக்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை என்ஐஏ அதிகாரிகள் பூந்தமல்லி போலீஸாரிடம் ஒப்படைத்தனர். போலீஸார் அவரை கைது செய்தனர். மற்ற இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. துனுகா ரோஷன் இலங்கையில் இருந்து கள்ளத்தோணியில் ராமேசுவரம் வழியாக தமிழகம் வந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.