Published : 23 May 2019 02:05 PM
Last Updated : 23 May 2019 02:05 PM

தமிழகத்தில் காலூன்றாத பாஜக: நட்சத்திர வேட்பாளர்களை களமிறக்கியும் 5 தொகுதிகளிலும் தோல்வி முகம்

தமிழகத்தில் பாஜக போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் தோல்வி முகம் கண்டுள்ளது.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்று (மே 23) காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஆரம்பம் முதலே தேசிய அளவில் பாஜக முன்னிலை வகித்தது.

இந்நிலையில், பிற்பகல் 1 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 339 தொகுதிகளில் முன்னிலை வகித்தது. மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், ஹரியாணா, டெல்லி, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதனால், மீண்டும் பாஜக ஆட்சியமைக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தில் பாஜக போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் சரிவைச் சந்தித்துள்ளது. 5 தொகுதிகளிலும் கட்சி அளவில் செல்வாக்கு பெற்றவர்களும், உயர்மட்டப் பொறுப்புகளில் உள்ளவர்களும் களமிறக்கப்பட்டும் அவர்கள் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.

பிற்பகல் 1 மணி நிலவரப்படி, கோவை தொகுதியில் பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஒரு லட்சத்து 6,157 வாக்குகள் பெற்றார். ஆனால் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி.ஆர். நடராஜன் ஒரு லட்சத்து 53,154 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். சி.பி.ராதாகிருஷ்ணன் 1998, 1999 பொதுத் தேர்தல்களில் கோவை தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.

கன்னியாகுமரியில் 2014 தேர்தலில் வெற்றி பெற்று மத்திய இணையமைச்சராக இருந்த பொன். ராதாகிருஷ்ணன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரை விட 1 லட்சத்து 10,221 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

ராமநாதபுரத்திலும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் (திமுக கூட்டணி) வேட்பாளர் நவாஸ் கனியை விட 36,991 வாக்குகள் குறைவாகப் பெற்று பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

சிவகங்கையில் பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா 66,487 வாக்குகள் பெற்றுள்ளார். ஆனால், காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் ஒரு லட்சத்து 59,648 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார்.

கடும் போட்டி நிலவிய தூத்துக்குடியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இதுவரை 80,215 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். ஆனால், திமுக வேட்பாளர் கனிமொழி, 2 லட்சத்து 18,377 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

பிற்பகல் நிலவரப்படி பாஜக 2.44% வாக்குகளைப் பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x