

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, பெரியகுளம் தொகுதியில் தலா ஒரு வாக்குச்சாவடியில் இன்று காலை மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் நீண்டவரிசையில் நின்று ஆர்வமாக ஜனநாயகக் கடமை ஆற்றி வருகின்றனர்.
மாதிரி ஓட்டுப்பதிவில் பதிவான வாக்குகளை அழிக்காததால் பெரியகுளம் தொகுதி வடுகபட்டி, ஆண்டிபட்டி தொகுதி பாலசமுத்திரம் வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு அறிவிக்கப்பட்டது. இதன்படி இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது.
வடுகபட்டியைப் பொறுத்தளவில் 702 ஆண், 703 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 1405வாக்குகள் உள்ளன. காலையில் மாதிரி ஓட்டுப்பதிவு முடிந்ததும் வாக்காளர்கள் வாக்களிக்க வரிசையில் காத்திருந்தனர். ஆனால் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது. எனவே 15 நிமிடம் தாமதமாக வாக்குப்பதிவு துவங்கியது.
10வது வார்டைச் சேர்ந்த பத்ரகாளியம்மன் கோயில் தெரு, ஜெயந்திகாலனி, 9வது வார்டைச் சேர்ந்த காளியம்மன், மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த வாக்காளர்கள் வாக்களித்தனர்.
காலை 9 மணிநிலவரப்படி 11.3 சதவீத வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை அளித்திருந்தனர். தொடர்ந்து நீண்டவரிசையில் பொதுமக்கள் காத்திருந்து தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
இதே போல் ஆண்டிபட்டி தொகுதி பாலசமுத்திரம் கலைமகள் சரஸ்வதி பள்ளியில் மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இங்கு 644ஆண்கள், 611பெண்கள் என மொத்தம் 1255ஓட்டுக்கள் உள்ளன. பொதுமக்கள் வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.