Published : 03 May 2019 07:30 am

Updated : 03 May 2019 07:30 am

 

Published : 03 May 2019 07:30 AM
Last Updated : 03 May 2019 07:30 AM

பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக அமைச்சர் சண்முகத்திடம் அதிருப்தி எம்எல்ஏக்கள் தூது?

தினகரனுக்கு ஆதரவாக செயல்படும் அதிமுக எம்எல்ஏக்கள் அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன் மற்றும் கள்ளக்குறிச்சி பிரபு ஆகியோருக்கு, ‘தங்களை ஏன் பதவி நீக்கம் செய்யக்கூடாது?' என்று கேட்டு சட்டப்பேரவைத் தலைவர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதையடுத்து தமிழக அரசியல் மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

ஊடகங்களில் வெளியான தகுதிநீக்க நோட்டீஸ் தொடர்பாக பேட்டியளித்த கள்ளக்குறிச்சி பிரபுவும், விருத்தாசலம் கலைச் செல்வனும், “தாங்கள் அதிமுக உறுப்பினர்களாக நீடித்து வருவதாகவும், அமமுகவில் பொறுப்பில் ஏதுமில்லை, அதிமுக கொறடா உத்தரவுப்படியே செயல் படுவோம்” எனக் கூறி வந்தனர்.


3 எம்எல்ஏக்களும் நோட்டீஸ் தங்களை வந்தடையவில்லை என கூறிவந்த நிலையில், நேற்று முன்தினம் சபாநாயகரிடம் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது உறுதியானது. இதுபற்றி கள்ளக் குறிச்சி பிரபு மற்றும் விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகியோரை தொடர்பு கொண்டபோது, அவர்கள் பதில் அளிக்கவில்லை. நேற்று முன்தினம் முதல் கலைச்செல்வன் மற்றும் பிரபு ஆகிய இருவரும் தொலைபேசியில் பேசுவதைத் தவிர்த்து வருகின்றனர்.

எம்எல்ஏக்கள் பிரபு, கலைச் செல்வன் இருவரும் சென்னையில் தங்கியிருந்த போதிலும் தினகரனின் தொடர்பில் இருந்து சற்று விலகியிருப்பதாகவும், தற்போதைய சூழலில் தகுதி நீக்க நடவடிக்கையை தடுக்க சட்டத் துறை அமைச்சர் சண்முகத்தை அவர்கள் நாடியிருப்பதாகவும் அதிமுகவின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உட்கட்சி அதிருப்தியால் மாறினர்

விழுப்புரம் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், உளுந்தூர் பேட்டை எம்எல்ஏவுமான குமரகுரு மீதிருந்த அதிருப்தியினால் பிரபுவும், கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், அமைச்சருமான சம்பத் மீதான அதிருப்தியினால் கலைச்செல்வ னும், தினகரன் பக்கம் சென்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவர்கள் இருவரும், விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், சட்டத்துறை அமைச்சருமான சண்முகம் மூலமாக சமரச முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜனவரியில் பேச்சுவார்த்தை

இதனிடையே கடந்த ஜனவரி மாதம் அமைச்சர் சண்முகத்தின் சார்பில் கட்சி நிர்வாகிகள், பிரபு வின் தந்தையும், தியாகதுருகம் அதிமுக ஒன்றிய செயலாளருமான ஐயப்பனை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். “இன்னும் 2 ஆண்டுகள் இருக்கும்போது, எதற்கு தேவையில்லாமல், உங்கள் மகன் இப்படி செயல்படுகிறார், அவருக்கு நீங்கள் புத்திமதி சொல்லக் கூடாதா?'' என்ற தொனி யில் இந்தப் பேச்சு அமைந்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.

முதல்வர் தரப்பில் தயக்கம்

எனினும், இம்மாதிரியான முயற்சிகளால் நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ள 3 எம்எல்ஏக்களும் தங்கள் பக்கம் வந்தாலும் அவர்கள் தினகரனின் ஸ்லீப்பர் செல்லாகவே செயல்பட அதிக வாய்ப்பிருப்பதாகவும், அவர்களை நம்பி எதையும் செய்ய இயலாது என்பதால் அவர்களை தகுதி நீக்கம் செய்வதுதான் சரி என்றும் முதல்வர் பழனிசாமி தரப்பில் பேசப்படுகிறது.

ஆனால், முதல்வரை சரி கட்டக் கூடிய நபர் சட்டத் துறை அமைச்சர் சண்முகம் என்பதால், அவர் மூலம் அதிருப்தி எம்எல்ஏக்கள் சமாதான முயற்சிகளில் இறங்கி யிருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


அதிமுக எம்எல்ஏக்கள் டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் அறந்தாங்கி ரத்தினசபாபதி விருத்தாசலம் கலைச்செல்வன் கள்ளக்குறிச்சி பிரபு அமைச்சர் சண்முகம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author