Published : 24 May 2019 08:13 PM
Last Updated : 24 May 2019 08:13 PM

4 முறை தேர்தலில் நின்றும் ஒருமுறைகூட வெற்றிபெறாத எல்.கே.சுதீஷ்

3 மக்களவைத் தேர்தல், 1 சட்டப்பேரவை தேர்தலில் நின்றும் ஒருமுறைகூட எல்.கே.சுதீஷ் வெல்லவில்லை.

17-வது மக்களவை பொதுத்தேர்தலில் தமிழகத்தில் கடும் விமர்சனத்துக்கு உள்ளான இரண்டு கட்சிகள் பாமகவும், தேமுதிகவும். காரணம் பாமக ஆளுங்கட்சியை கடுமையாக விமர்சித்து தினம் தினம் அறிக்கை விடுப்பது, எதிர்ப்பரசியல் நடத்தியது.

அதிமுக ஊழலை புத்தகமாகப் போட்டு பாமக வெளியிட்டது. திராவிடக் கட்சிகளுடன் இனி எந்நாளும் கூட்டணி இல்லை என அறிவித்தது. மேற்சொன்ன காரணங்களால் பாமக அரசியல் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்த அனைவரும் கடும் விமர்சனம் செய்ய ஆரம்பித்தனர்.

தேமுதிக 2011-ம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்து 29 இடங்களை வென்று எதிர்க்கட்சியாக அமர்ந்தது. ஜெயலலிதாவுடன் நேரடியாக மோதலில் ஈடுபட்டதால் கூட்டணி முறிந்தது. அதன் பின்னர் திமுகவைவிட அதிமுகவை கடுமையாக எதிர்த்தார் விஜயகாந்த்.

2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி என தனியாக நின்றார் விஜயகாந்த். அதிமுகவை எதிர்ப்பதில் கடும் தீவிரம் காட்டி வந்தது தேமுதிக. இந்நிலையில் திடீரென அதிமுக கூட்டணியில் தேமுதிகவும், பாமகவும் இணைந்தது கடும் விமர்சனத்துக்குள்ளானது.

தேமுதிகவுக்கு அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. வடசென்னை, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், திருச்சி ஆகிய தொகுதிகளில் தேமுதிக போட்டியிட்டது. கள்ளக்குறிச்சியில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணியை எதிர்த்து தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் போட்டியிட்டார்.

ஒருவேளை மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் கூட்டணி அமைச்சரவை அமைந்தால் அமைச்சர் ஆகும் வாய்ப்பு கூட இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டது. தமிழகத்தில் கூட்டணிக் கட்சிகள் பலத்துடன் அதிமுக அணி போட்டியிட்டது.

ஆனால், தேர்தல் முடிவில் போட்டியிட்ட அனைவரும் தோல்வியடைந்தனர். அதிமுகவில் தேனியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மட்டும் வென்றார். தேமுதிக போட்டியிட்ட இடங்களில் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் எதிரணி வென்றுள்ளது.

எல்.கே சுதீஷ் கள்ளக்குறிச்சியில் வாங்கிய வாக்குகள் 3 லட்சத்து 21 ஆயிரத்து 794. திமுக வேட்பாளர் கவுதம சிகாமணி 7 லட்சத்து 21 ஆயிரத்து 713 வாக்குகள். வித்தியாசம் 4 லட்சம் வரை. எல்.கே.சுதீஷ் திமுக கூட்டணிக்குச் செல்லும் வாய்ப்பைத் தவிர்த்து அதிமுக கூட்டணிக்குச் சென்றார்.

எல்.கே.சுதீஷ் இதுவரை போட்டியிட்ட தேர்தலில் ஒன்றில்கூட வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2006-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட்டபோது குடியாத்தம் தொகுதியில் எல்.கே.சுதீஷ் போட்டியிட்டார். தேர்தலில் தோற்றுப்போன அவருக்கு மூன்றாம் இடம் கிடைத்தது.

2009-ல் 15 ஆவது மக்களவைத் தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டார். அதில் திமுக வேட்பாளர் ஆதிசங்கர் வென்றார். மூன்றாம் இடம் வந்த சுதீஷ் பெற்ற வாக்கு 1 லட்சத்து 32 ஆயிரத்து 223.

2014-ல் 16-வது மக்களவை பொதுத்தேர்தலில் பாஜக தலைமையிலான அணியில் தேமுதிக, மதிமுக, பாமக என மெகா கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. இதில் எல்.கே.சுதீஷ் தொகுதி மாறி சேலத்தில் போட்டியிட்டார். மோடி அலையில் வெல்வார் என எதிர்பார்த்த நிலையில் ஜெயலலிதா அலையால் அடித்துச் செல்லப்பட்டார்.

சேலம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பன்னீர்செலவம் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று வென்றார். இம்முறையும் மூன்றாவது இடம் பெற்றார் எல்.கே.சுதீஷ்.

இம்முறை 17-வது மக்களவைத் தேர்தலில் மீண்டும் கள்ளக்குறிச்சியில் போட்டியிட்டு மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் தோற்றுப்போனார்.

2011-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 40 தொகுதிகளில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் அந்தத் தேர்தலில் எல்.கே.சுதீஷ் போட்டியிடவில்லை, போட்டியிட்டிருந்தால் ஒருவேளை வென்றிருப்பார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x