மாமுல் கேட்டு தொந்தரவு: பார் உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை- ஆய்வாளர் இடமாற்றம்

மாமுல் கேட்டு தொந்தரவு: பார் உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை- ஆய்வாளர் இடமாற்றம்
Updated on
1 min read

தன்னிடம் அதிக மாமுல் கேட்டு தொழில் நடத்தவிடாமல் தொல்லை தருவதாக மாமல்லபுரம் டிஎஸ்பி மற்றும் ஆய்வாளர் மீது புகார் தெரிவித்து தீக்குளித்த பார் உரிமையாளர் உயிரிழந்ததை அடுத்து ஆய்வாளர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

கேளம்பாக்கம் பகுதியில் டாஸ்மாக் கடை அருகே பார் உரிமத்தை அதிமுக பிரமுகரிடம் இருந்து மேல் வாடகைக்கு எடுத்து நடத்தி வந்தவர் நெல்லையப்பன் (36). இந்நிலையில், பார் வாடகையை அதன் உரிமையாளர் தொடர்ந்து அதிகரித்து வந்ததாலும், போலீஸார் கட்டாய மாமூல் கேட்டு தொந்தரவு தந்ததாலும் தன்னால் பாரை தொடர்ந்து நடத்த முடியாமல் நெல்லையப்பன் கடன் தொல்லையால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பார் வாடகை அதிகரிப்பு தொடர்பாக மாமல்லபுரம் டிஎஸ்பி அலுவலகத்தில் நெல்லையப்பன் கடந்த மே.28 அன்று புகார் அளிக்க வந்துள்ளார். ஆனால் போலீஸார் புகாரை வாங்க மறுத்ததாக கூறப்படு கிறது.

இதனால், டிஎஸ்பி அலுவலகம் முன்பு உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.  மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

தீக்குளிப்புக்கு முன் நெல்லையப்பன் அவரது முகநூல் பக்கத்தில் வீடியோ காட்சி ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் டாஸ்மாக் கடைகளில் பார் நடத்தும் நேரடி உரிமம் பெற்றவர்களின் நெருக்கடியாலும், திருப்போரூர் காவல்ஆய்வாளர் மற்றும் மாமல்ல புரம் டிஎஸ்பி ஆகியோரின் கட்டாய மாமூல் வசூலாலும் கடன் தொல்லையில் சிக்கி அவதிப்படுவதாக பதிவிட்டிருந்தார்.

கடன் தொல்லையால் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பிஅலுவலகம் அல்லது மாமல்லபுரம் டிஎஸ்பி அலுவலகத்தின் முன்னால் தற்கொலை செய்துகொள்ள முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

தீவிர சிகிச்சையில் இருந்த நெல்லையப்பன் மாஜிஸ்ட்ரேட்டிடம் தனது மரணம் குறித்து வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்நிலையில் நெல்லையப்பன் மரணத்தை அடுத்து திருப்போரூர் ஆய்வாளர் கண்ணனை காவல் கட்டுப்பாட்டறைக்கு மாற்றி  மாவட்ட எஸ்பி சந்தோஷ் ஹதிமானி உத்தரவிட்டார்.

மேலும் மாமல்லபுரம் டிஎஸ்பி அலுவலகத்தில், ஏடிஎஸ்பி நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார். போலீஸார் மாமுல் தொல்லை பார் உரிமையாளர் உயிரையே பறித்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in