Published : 11 May 2019 03:35 PM
Last Updated : 11 May 2019 03:35 PM

குட்கா முறைகேடு வழக்கு; தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லாவிடம் சிபிஐ விசாரணை

குட்கா முறைகேடு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரிகள் பலரும் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது தேர்தல் டிஜிபி அஷுதோஷ் சுக்லாவையும் விசாரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று 2011 முதல் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் வாயில் போட்டு மெல்லும் புகையிலைப் பொருட்களை உற்பத்தி செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து 2013-ல் குட்கா மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் தடை செய்யப்பட்டன. ஆனால், தடை செய்யப்பட்ட பிறகும் கூட தனியார் நிறுவனம், கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு லஞ்சம் கொடுத்து தங்கள் வர்த்தகத்தை சட்ட விரோதமாகத் தொடர்ந்ததாக அம்பலமானது.

குட்கா முறைகேடு குறித்த விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் அதில் முறையாக விசாரணை நடக்காததால் திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை கேட்டு வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து கடந்த ஏப்ரல் 26 அன்று குட்கா முறைகேட்டை சிபிஐ விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து சிபிஐ குட்கா விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்தது. இதனையடுத்து இன்று காலை சிபிஐ சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி, புதுச்சேரி, பெங்களூரு, மும்பை, குண்டூர் உள்ளிட்ட 35 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டது. குட்கா தயாரிப்பு நிறுவனத்தின் இயக்குநர்கள், மற்றும் பிற அரசு ஊழியர்கள், விற்பனை வரித்துறை அதிகாரிகள், சுங்க மற்றும் கலால் வரித்துறை அதிகாரிகள், உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் வீடுகளில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, தமிழ்நாடு டிஜிபி டி.கே. ராஜேந்திரன், முன்னாள் டிஜிபி ஜார்ஜ், உதவி ஆணையர் மன்னர் மன்னன், வில்லிபுரம் டிஎஸ்பி ஷங்கர், ஆய்வாளர் சம்பத் குமார், உணவு மற்றும் மருந்துத்துறையைச் சேர்ந்த அதிகாரிகளான செந்தில் முருகன், டாக்டர் லஷ்மி நாராயணன், இ.சிவகுமார், மத்திய கலால் வரித்துறை அதிகாரிகள் ஆர்.குல்சார் பேகம் ஆர்.கே.பாண்டியன், சேஷாத்ரி, விற்பனை வரித்துறையைச் சேர்ந்த பன்னீர் செல்வம், குறிஞ்சி செல்வம், கணேசன், ஜேஎம் நிறுவனத்தின் பிரமோட்டர்கள் மற்றும் இயக்குநர்களான ஏ.வி.மாதவராவ், உமா சங்கர் குப்தா, ஸ்ரீநிவாஸ் ராவ் ஆகியோர் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் குட்கா குடோன் உரிமையாளர் மாதவ்ராவ் உட்பட 7 பேர் முதலில் கைது செய்யப்பட்டனர். இதில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரிகள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் ஆணையர் ஜார்ஜ், தினகரன், ஜெயக்குமார், வரதராஜு, அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது உதவியாளர் உள்ளிட்ட பலர் விசாரிக்கப்பட்டார்கள்.

தற்போது தேர்தல் பிரிவு டிஜிபியாக இருக்கும் அசுதோஷ் சுக்லாவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டதன் அடிப்படையில் அவர் கடந்த 8-ம் தேதி ஆஜரானதாகவும், தான் இந்த சம்பவம் நடந்த நேரத்தில் தேர்தல் நடந்த நேரத்தில் இடைக்கால காவல் ஆணையராக இருந்ததால் தேர்தல் பாதுகாப்புப் பணியில் மட்டுமே கவனம் செலுத்தினேன் இதுகுறித்து எனக்கு தெரியாது என அவர் விசாரணையில் கூறியதாக தெரிகிறது.

அவர் ஆஜரானது குறித்து டெல்லி சிபிஐ வட்டாரம் உறுதிப்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x