Last Updated : 15 May, 2019 08:31 AM

 

Published : 15 May 2019 08:31 AM
Last Updated : 15 May 2019 08:31 AM

சூரிய ஒளி கூடார உலர்த்தி: விளைபொருட்கள் மதிப்பு கூட்டும் புதிய தொழில்நுட்பம்

விளைபொருட்களின் மதிப்பைக் கூட்டும் `சூரிய ஒளி கூடார’  உலர்த்தியைப் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை விவசாயி களிடம் கொண்டு சேர்த்து வருகிறது கோவை மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறை.

விளைபொருட்களை அப்படியே விற்பதைக் காட்டிலும், அதன் மதிப்பைக் கூட்டி விற்பனை செய்வதால், விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைக்கும். 

உதாரணமாக, தேங்காய்க்கு சந்தையில் ரூ.12 விலை கிடைக்கிறது என்றால், அதை காயவைத்து, கொப்பரையாகவோ அல்லது கொப்பரையைப் பிழிந்து தேங்காய் எண்ணெ யாகவோ மதிப்பு கூட்டி விற்பனை செய்தால், விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.

பெரும்பாலான விவசாயிகள் திறந்தவெளி யில் உலர்கலன்கள் அமைத்து, தேங்காயை காயவைத்து, கொப்பைரைகளாக மாற்றி வருகின்றனர். தேங்காயை நன்றாக வெயிலில் உலர்த்தி கொப்பரையாக மாற்ற ஒரு வாரமாகிறது. மேலும், அதிக ஆட்களும் தேவைப்படுகின்றனர்.

விளைபொருட்களைப் பொறுத்தவரை,  அறுவடைக்கு பின் எவ்வளவு விரைவாக சந்தைப்படுத்துகிறோமோ, அதற்கு ஏற்ற பலனையும் உரிய நேரத்தில் பெற முடியும்.

இதைக் கருத்தில் கொண்டு, வேளாண்மை பொறியியல் துறை, விளைபொருட்களை மதிப்பு கூட்டிய பொருட்களாக மாற்ற ‘சூரிய ஒளி கூடார உலர்த்தி’ என்ற புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி, அந்த தொழில்நுட்பம் விவசாயிகள் மத்தியில்  சென்றடைய வழிவகை செய்து வருகிறது.

இதுகுறித்து கோவை மாவட்ட வேளாண்மைப்  பொறியியல் துறை செயற் பொறியாளர் எஸ்.சோமசுந்தரம், உதவி செயற் பொறியாளர் எஸ்.ரேணுகாதேவி ஆகியோர் கூறும்போது, “தேசிய வேளாண்மை உற்பத்தித் திட்டத்தின் கீழ், கோவை மாவட்டத்தில் மானியத்துடன் கூடிய சூரிய ஒளி கூடார உலர்த்திகளை விவசாயிகள் மற்றும் விவசாயக் குழுவினருக்கு அமைத்துத் தருகிறோம். விவசாயக் குழுக்கள்  ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டவை.

சூரிய ஒளி  உலர்த்தி, 400 சதுர அடி முதல்

1,000 சதுர அடி பரப்பு வரை அமைத்துத் தரப்படுகிறது. முதலில், தேர்வு செய்யப்பட்ட களத்தில் தரையிலிருந்து ஒரு அடி உயரத்தில் தளம்  அமைத்து, அதில் 0.15 மீட்டர் உயரத்துக்கு மணல் போட்டு, பின்னர் அதன் மீது 0.15 மீட்டர் உயரத்துக்கு கான்கிரீட் தளம் அமைக்கப்படும். தொடர்ந்து,  அதன் மேல் 24 மில்லிமீட்டர்  கனமுள்ள கடாப்பா கற்கள் பதிக்கப்படும். சுற்றிலும், செங்கல் மூலம் சுமார் ஓரடி உயரத்துக்கு சுற்றுச்சுவர் அமைத்து, இறுதியாக 6 மில்லிமீட்டர் அளவுள்ள ‘பாலிகார்பனேட் சீட்’  போர்த்தி கூடாரம் அமைக்கப்படுகிறது.  இதுவே, சூரிய ஒளி கூடார உலர்த்தி.

சூரிய ஒளி கூடார உலர்த்தி அமைக்க  சிறு, குறு விவசாயிகள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின விவசாயிகள் மற்றும் பெண்களுக்கு 60 சதவீதமும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு 50 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது.

கூடாரத்தின் பரப்புக்கேற்ப 60 சதவீதம் மானியம் அல்லது ரூ.3.50 லட்சம், இதில் எது குறைவோ,  அந்த தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதேபோல, கூடாரத்தின் பரப்புக்கேற்ப 50 சதவீதம் மானியம் அல்லது ரூ.3 லட்சம் இதில் எது குறைவோ அந்த தொகை  விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

இந்த உலர்த்தியை விவசாயிகள் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு அமைத்து, அதற்கேற்ற மானியம் பெற்றுக் கொள்ளலாம். இதன்படி 400 முதல் 600 சதுர அடி பரப்பில் உலர்த்தி அமைப்பதற்கு, ஒரு  சதுர அடிக்கு ரூ.794 செலவாகும். 600 முதல் 800 சதுர அடி பரப்பில் உலர்த்தி அமைப்பதற்கு,  ஒரு சதுர அடிக்கு ரூ.789-ம்,  800 முதல் 1,000 சதுர அடி பரப்பில் உலர்த்தி அமைப்பதற்கு ஒரு சதுர அடிக்கு ரூ.743-ம்  செலவாகும். இவற்றில் ஜிஎஸ்டி-யும் அடங்கும்.

சூரிய ஒளி கூடார உலர்த்தி அமைக்க விவசாயிகள் செய்யும் முதலீட்டை, குறைந்தது 1.5 ஆண்டுகளில் திரும்பப் பெற்றுவிட முடியும். பின்னர், தொடர்ச்சியாக வருவாய் கிடைக்கும்.

கோவை வட்டத்தில் தொண்டாமுத்தூர், சூலூர், பொள்ளாச்சி வட்டத்தில் கோதவாடி, கம்பாளப்பட்டி, ஜக்கார்பாளையம், சூலக்கல், மண்ணூர், புளியம்பட்டி, நல்லட்டிபாளையம், வடசித்தூர் ஆகிய 10 இடங்களில் சூரிய ஒளி கூடார உலர்த்திகள் அமைக்கப்பட்டு, விவசாயிகள் பயன்பாட்டில் உள்ளன. இதை அமைப்பது, பயன்படுத்துவது குறித்தெல்லாம் விவசாயிகளுக்கு பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

கூடுதல் வருவாய் ஈட்ட வாய்ப்பு!

விவசாயிகள் தனியாகவோ, குழுவாகவோ இவ்வகை உலர்த்தியை அமைத்துக் கொள்ளலாம். தங்களது தேவைக்குப்போக,  மற்ற விவசாயிகளுக்கு வாடகைக்கு கொடுப்பதன் மூலமும் வருவாய் ஈட்டலாம்.

வழக்கமான நடைமுறையில் தேங்காயை உலர்த்த 7 நாட்கள் ஆகும் என்றால், சூரிய ஒளி கூடார உலர்த்தியின் மூலம் ஒன்றரை நாட்களில் தேங்காயை உலர்த்திவிட முடியும். கூலி ஆட்கள் செலவும் மீதமாகும்.

அதாவது, வழக்கமான நடைமுறையில் நாளொன்றுக்கு 4 கூலியாட்கள் தேவைப்படுவர். ஒருவருக்கு சுமார் ரூ.300 கூலி அளிக்க வேண்டியிருக்கும். சூரிய ஒளி கூடார முறையில் தேங்காயை உலர்த்தும்போது, ஒரு தொழிலாளி இருந்தால் போதுமானது. இதன் மூலம் தினமும் ரூ.900 வரை சேமிக்கலாம்.

அதேபோல, திறந்த வெளி களத்தில் திடீர் மழை பெய்யும்போது, தேங்காய்கள் ஈரமாகி, விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்தும். மழை பெய்யும்போது, தேங்காய்களை மூடிவைக்க ஆட்கள் இல்லாத நிலையில், முற்றிலுமாக அவை நனைந்துவிடும். இதனால், பூஞ்சாணத்  தொற்று ஏற்படும். இதைத் தவிர்க்க விவசாயிகள் ‘சல்ஃபர்’ என்ற வேதிப்பொருளைப் பயன்படுத்துகின்றனர். இது உடல் நலனுக்கு  தீங்கு விளைவிக்கும். மேலும், 10 சதவீதம் வரை விளைபொருட்களும் வீணாகும்.

சூரிய ஒளி கூடார உலர்த்தியில் இந்த பிரச்சினைக்கு இடமில்லை. உயர் வெப்பம்  பயன்படுத்துவதால், விளைபொருள் வீணாவது தவிர்க்கப்படுகிறது. மழையால் எவ்விதப்  பாதிப்பும் ஏற்படாது.

பொதுவாக, தேங்காயை கொப்பரையாக மாற்றுவதற்கு ஒன்றரை நாட்களாகும் என்றால், மழைக் காலத்தில் 3 நாட்கள் பிடிக்கும். எப்படிப்  பார்த்தாலும், சூரிய ஒளி உலர்த்தி முறை  விவசாயிகளுக்கு மிகுந்த பயன் தரத்தக்கது. மேலும், முழுக்க இயற்கை முறையில், தரமான மதிப்பு கூட்டிய பொருட்களையும் பெற முடியும். அதனால், சந்தையிலும் நல்ல விலை கிடைக்கும். விவசாயிகள் கூடுதல் வருவாயும் பெறலாம்.

இதேபோல, உலர்த்தியின் உள்ளே பழங்களை உலர்த்துவதற்கும், தனித்தனி  அடுக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில், திராட்சை, வாழைப் பழங்களை உலர்த்தி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய வாய்ப்புள்ளது. இது விவசாயிகளுக்கு மேலும் பயனுள்ளதாக இருக்கும்.  எள், கடலை போன்றவற்றையும் இதில் உலர்த்த முடியும்” என்றனர்.

பன்மடங்கு வெப்பம்!

இந்த சூரிய ஒளி கூடார உலர்த்தியின் உள்ளே, தேங்காய், கொப்பரை மட்டுமின்றி, கடலை, எள், வாழை, திராட்சை உள்ளிட்ட பல்வேறு விளைபொருட்களையும் உலர்த்த முடியும். விளைபொருட்களை கூடாரத்துக்குள் பரப்பிவைத்தால், கூடாரத்தின் மீது போர்த்தப்படும் பாலிகார்பனேட் சீட் சூரிய வெப்பத்தை உறிஞ்சி, வழக்கமாக கிடைக்கும் வெப்பத்தைக் காட்டிலும், பன்மடங்கு வெப்பத்தை அளிக்கும். அந்தக் கூடாரமே வெப்பம் மிகுந்த கலன்போல இருக்கும். இந்த முறையில், சூரிய ஒளி ஆற்றல் பன்மடங்கு கிடைப்பதால், உள்ளிருக்கும் விளைபொருட்கள் வேகமாக உலர்ந்துவிடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x