Published : 13 May 2019 06:24 PM
Last Updated : 13 May 2019 06:24 PM

கொல்லிமலை மலைவாழ் மக்கள் அறியாமையைப் பயன்படுத்தும் குழந்தை விற்பனை கும்பல்: மாதர் சங்கம் அரசுக்கு கோரிக்கை

கொல்லிமலை மலைவாழ் மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி குழந்தைகளை தத்தெடுத்து வியாபாரம் செய்துள்ளதாக மாதர் சங்கம் உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது.

தமிழகத்தை உலுக்கிய ராசிபுரம் குழந்தைகள் விற்பனை, சட்டவிரோத தத்தெடுப்பு குற்றச்சாட்டில் இதுவரை 9க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குழந்தை கடத்தலில் முக்கிய விஷயமாக கொல்லிமலை மலைவாழ் மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி அதிக அளவில் குழந்தைகள் கடத்தி விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து உண்மை அறிய கொல்லிமலைக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலத் துணை செயலாளர் எஸ்.கீதா, இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கண்ணன், மாதர் சங்க நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள்  குழுவாகச் சென்றனர்.

அவர்கள் சேகரித்த தகவல்கள் குறித்து அளித்த அறிக்கை வருமாறு:

''நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியில் குழந்தை கடத்தல் மற்றும் விற்பனை நடைபெற்று வருவது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பல ஆண்டுகளாக.

அரசு மருத்துவமனை செவிலியர் மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் ஆகியோர் இதர அரசு நிர்வாகத்தின் உதவியுடன் குழந்தைகளை விற்பனை செய்து வந்துள்ளதாகப் புகார் எழுந்துள்ள அடிப்படையில் கொல்லிமலை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருவர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பாக ஒரு குழு கொல்லிமலைக்குச் சென்று விசாரித்தது.

விசாரணையில் கிடைத்த விவரங்கள்

மலைவாழ் மக்கள் காலம்காலமாக 2 குழந்தைகளுக்கு மேல் பிறந்தால் குழந்தை இல்லாத தங்கள் உறவினர்களுக்கு அக்குழந்தைகளை தத்துக் கொடுப்பது வழக்கமாக உள்ளது. சிலர் மஞ்சள் தண்ணீர் ஊற்றி சடங்குகள் சம்பிரதாயங்கள் செய்து தத்துக்கொடுத்து விடுவார்களாம்.

பெரும்பாலும் இரண்டு குழந்தைகளுக்குப் பிறகு மூன்றாவது பெண் குழந்தையாகப் பிறந்தால் அக்குழந்தைகளை ஏன் வளர்க்க வேண்டும் என்று கேட்கிறார்கள். 90 சதவீதம் பெண் குழந்தைகளும் 10 சதவீதம் ஆண் குழந்தைகளும் தத்து கொடுக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான மக்கள் கூறுவது பெண் குழந்தைகள் என்பதனால் வளர்ப்பதில் சிரமம் எனவும், ஆண் குழந்தை என்றால் சொத்து வேண்டும் எங்கே செல்வோம் எனவும் கூறுகிறார்கள். இவ்வாறு வேண்டாம் என்று, குழந்தைகளை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இலவசமாகக் கொடுக்கும் வழக்கமும்  இருந்து வந்துள்ளது.

இதில் குழந்தை விற்பனை கும்பல் வந்த பிறகுதான் பெற்றோர்களுக்கு 5,000 முதல் 95 ஆயிரம் வரை பணம் கொடுத்துவிட்டு குழந்தைகளை வாங்கிச் சென்றுள்ளனர். பின் பல லட்சங்களுக்கு அக்குழந்தைகளை விற்பனை செய்துள்ளனர்.

தத்துக் கொடுக்கும் சட்டம் நடைமுறையில் இருந்தும் அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் குழந்தைகள் விற்பனை நடைபெற்றுள்ளது. குழந்தை வேண்டாம் என்றால் கருக்கலைப்பு செய்து கொள்ளவும் முன்வருவதில்லை. காரணம் கடவுள் கொடுத்த குழந்தையை அழிக்கக்கூடாது. யாருக்காவது தத்துக் கொடுத்தால் ராணி போல வளர்த்துக் கொள்வார்கள் என்று கொடுத்து விடுவோம் என்கின்றனர் மலைவாழ் மக்கள்.

கிராம செவிலியர்கள் கர்ப்பிணிப் பெண்களைப் பதிவு செய்து முறையாகக் கண்காணிப்பது, குழந்தை பிறப்பு வரை பதிவு செய்து பிறப்பைப் பதிவு செய்வது என்று நடைமுறையிலும் பலவீனம் உள்ளது.

பள்ளியில் கூட பிறப்புச் சான்று மலைவாழ் மக்களிடம் பத்தாம் வகுப்பு வரை கட்டாயப்படுத்தப்படுவதில்லை என தகவல் கிடைத்துள்ளது. அரசு நிர்வாகமும் சுகாதாரத் துறையில் கவனம் இல்லாமல் அலட்சியமான போக்குடன் செயல்பட்டுள்ளது.

இதுபோன்ற காரணங்களினால் போதிய விழிப்புணர்வு இல்லாமல் வசதி இல்லாத காரணத்தால் ஏழை மலைவாழ் மக்களின் மனநிலையை அறிந்து இடைத்தரகர்கள் உள்ளே நுழைந்து பணத்தைக் கொடுத்து குழந்தைகளை வாங்கி விற்பனை செய்துள்ளனர்.

விற்கப்பட்ட குழந்தைகளின் தற்போதைய நிலை என்ன என்பது இதுவரை யாருக்கும் தெரியாது. இப்படி ஏராளமான அதிர்ச்சியான விஷயங்கள் கொல்லிமலை பகுதியில் குழந்தை விற்பனையில் உள்ள தகவல்கள்.

ஆனால் தற்போது இருவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மட்டுமே குற்றவாளிகளாக இருக்க வாய்ப்பில்லை. இவர்களுக்குப் பின்னால் ஒரு வலைப்பின்னல் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே வேண்டாத குழந்தைகளை, வளர்க்க முடியாத குழந்தைகளை அரசுத் தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் ஒப்படைக்க வைப்பதோ, சட்டரீதியான தத்து கொடுக்க உதவுவதோ, கருத்தடை செய்து கொள்ள விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதோ அரசின் அடிப்படைக் கடமையாகும்.

தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது .இவ்விசாரணை முறையாக துரிதமாக நடக்க வேண்டியது அவசியமாகும். மேலும் இதுவரை விற்கப்பட்ட குழந்தைகளின் தற்போதைய நிலை குறித்தும் ஆய்வு செய்திட வேண்டும்.

கிராம சுகாதார செவிலியர்கள் முறையாக கர்ப்பிணிப் பெண்களைப் பதிவு செய்வது, குழந்தை பிறக்கும் வரை கண்காணித்துப் பதிவுசெய்து ஆவணப்படுத்த வேண்டும். தொட்டில் குழந்தைகள் திட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும். பிறப்புச் சான்றிதழ் உடனடியாக வழங்கும் ஏற்பாடு நடைமுறைப்படுத்த வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை தமிழக அரசும் சுகாதாரத்துறையும் கண்காணித்திட வேண்டும். அதிர்ச்சி அளிக்கக்கூடிய குழந்தை விற்பனை விஷயத்தில் தமிழக அரசு, தமிழக முதல்வர், சுகாதாரத் துறை துரிதமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மலைப்பகுதியில் இது குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மக்களிடம் செய்யவேண்டும். பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த பிரச்சாரங்களை எடுத்துச் சொல்ல வேண்டும். பள்ளிகளில் பெற்றோர்-ஆசிரியர் இணைப்பு கூட்டங்கள் நடத்தி விழிப்புணர்வு கருத்துக்கள் சொல்லப்பட வேண்டும்''.

இவ்வாறு மாதர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x