கமலைக் குறிவைத்து காலணி வீச்சு; இளைஞரிடம் போலீஸார் விசாரணை

கமலைக் குறிவைத்து காலணி வீச்சு; இளைஞரிடம் போலீஸார் விசாரணை
Updated on
1 min read

திருப்பரங்குன்றம் பொதுக்கூட்ட மேடைக்கு வந்த கமல்ஹாசனை நோக்கி இளைஞர் ஒருவர் காலணியை வீசினார். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. காலணி வீசிய இளைஞரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், அரவக்குறிச்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கடந்த 12-ம் தேதி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தில் பேசிய கமல், “இது முஸ்லிம்கள் நிறைய பேர் இருக்கும் இடம் என்பதனால் சொல்லவில்லை. காந்தியார் சிலைக்கு முன்பாக இதனைச் சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே” என்றார்.

கமலின் இந்தப் பேச்சு, சர்ச்சையானது. பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், நடிகைகள் கஸ்தூரி, காயத்ரி ரகுராம், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி  உள்ளிட்டவர்கள் தங்களுடைய கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், கமலின் கருத்து தொடர்பாக ‘இந்தியா நியூஸ் நியூஸ் எக்ஸ்’ தொலைக்காட்சிக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில், ''இந்து என கூறிக் கொள்பவர் தீவிரவாதியாக இருக்க முடியாது. அப்படி தீவிரவாதியாக இருந்தால், அந்த நபர் இந்துவாக இருக்க முடியாது. உலகம் முழுவதும் ஒரே குடும்பம் என்பது இந்துக்களின் ஆழ்ந்த மத நம்பிக்கை. இந்த நம்பிக்கை உடைய ஒருவர் மற்றவர்களை துன்புறுத்தவோ, கொல்லவோ மாட்டார். அவரை இந்துமதம் அனுமதிக்காது'' என்றார்.

இந்து அமைப்புகள் எதிர்ப்பின் காரணமாக கடந்த 2 நாட்களாக பிரச்சாரத்தை ரத்து செய்த கமல்ஹாசன் இன்று திருப்பரங்குன்றம் தொகுதிகுட்பட்ட தோப்பூரில் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் சக்திவேலை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், ''நான் அரவக்குறிச்சியில் பேசியதற்காக என் மீது கோபப்படுகிறார்கள். நான் பேசியது சரித்திர உண்மை .உண்மை கசக்கும். கசப்பே மருந்தாகும். அந்த மருந்தால் வியாதி குணமாகும்'' என்றார்.

பிரச்சாரம் முடிந்த பிறகு திருப்பரங்குன்றம் பொதுக்கூட்ட மேடைக்கு கமல் வந்தார். அப்போது இளைஞர் ஒருவர் மேடையை நோக்கி காலணியை வீசினார். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. காலணி வீசிய இளைஞரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in