

தமிழக அரசு ஊழியர்கள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரிவோருக்கான அகவிலைப்படியை 9 சதவீதத்திலிருந்து, 12 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அகவிலைப்படி உயர்வு குறித்து தமிழக அரசு நிதித்துறை வெளியிட்ட அரசாணையில், ''முழு நேரமாகப் பணிபுரிந்து அகவிலைப்படியைப் பெற்று வரும் தமிழக அரசு ஊழியர்களுக்கு, அகவிலைப்படி 9 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.
அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்பில் பணிபுரியும் ஊழியர்கள் உள்ளிட்டோருக்கும் இது பொருந்தும்.
இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அகவிலைப்படி 7 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்போது அகவிலைப்படி மீண்டும் 3 சதவீதம் ஏற்றி முன் தேதியிட்டு பலன் கிடைக்கும் வகையில் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.