Published : 07 May 2019 01:12 PM
Last Updated : 07 May 2019 01:12 PM

ஸ்டாலின் - சந்திரசேகர் ராவ் சந்திப்பு இல்லை?

திமுக தலைவர் ஸ்டாலினுடன் மே 13-ம் தேதி தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சந்திப்பு நடைபெறாது என திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சந்திப்புக்கான நாளும், நேரமும் முடிவாகவில்லை என சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவும் தெரிவித்துள்ளார்.

2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் தற்போது நடைபெற்று வரும் நிலையில் பாஜகவுக்கு எதிராக திமுக உள்ளிட்ட கட்சிகளை ஒன்றிணைத்து காங்கிரஸ் தேர்தல் களம் கண்டு வருகிறது. தேர்தல் நடைபெறுவதற்குப் பல மாதங்கள் முன்பாகவே, பாஜக, காங்கிரஸ் அல்லாத மாற்று அணியை அமைக்கும் முயற்சியை தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சித் தலைவரும், தெலங்கானா மாநில முதல்வருமான சந்திரசேகர் ராவ் தொடங்கினார்.

சந்திரசேகர் ராவ் கருத்துக்கு, மஜ்லீஸ் கட்சித் தலைவர் அசாசுதீன் ஒவைசி, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் போன்றவர்கள் ஏற்கெனவே ஆதரவு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஸ்டாலின் போன்றவர்களை சந்திரசேகர் ராவ் சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் முழுமையாக முடிவடையும் முன்பாகவே, தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அமைப்பது தொடர்பான முயற்சிகளை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் மேற்கொண்டுள்ளார். கர்நாடக முதல்வர் குமாரசாமியுடன் அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

பின்னர், கேரளா சென்ற அவர், அம்மாநில முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான பினராயி விஜயனை சந்திரசேகர் ராவ் சந்தித்துப் பேசினார். வரும் 13-ம் தேதி அவர் சென்னை வந்து திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்திக்க இருப்பதாக தெலங்கானா முதல்வர் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், சந்திரசேகர் ராவுடனான ஸ்டாலின் சந்திப்பு நடைபெறாது என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 4 சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் தீவிரமாக இருப்பதால் சந்திரசேகர் ராவுடனான சந்திப்பு நடைபெறாது என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல் சந்திரசேகர் ராவின் மகளும், தெலங்கானா ராஷ்டிர சமதி கட்சி எம்.பி.யுமான கவிதாவும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் அவர் தெரிவிக்கையில் ஸ்டாலினுடனான சந்திரசேகர் ராவ் சந்திப்புக்கான நேரமும், நாளும் இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.

1996-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு நடந்ததை போல பாஜக, காங்கிரஸ் அல்லாமல் தென் மாநிலங்களைச் சேர்ந்த ஒருவரை பிரதமர் பதவியில் அமர்த்த வேண்டும் என்ற இலக்குடன் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் காய் நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சந்திரசேகர ராவ் மாநிலக்கட்சிகளின் கூட்டணி அமைக்கவே முயற்சிப்பதாக கூறப்பட்டாலும், அவருக்கு பாஜக ஆதரவுடன் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர் அமைக்க விரும்பும் அணி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கே சாதகமாக அமையும் என்றும் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

அதுபோலவே, திமுக தலைவர் ஸ்டாலினும், தேர்தலுக்கு முன்பே ராகுல் காந்தி தான் அடுத்த பிரதமர் என்பதை உறுதிபட தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x