Published : 14 Sep 2014 12:29 PM
Last Updated : 14 Sep 2014 12:29 PM

ஏ.சி. வாகனம்.. ஏர்கூலர் காற்று: வியக்கவைத்த வெளிநாட்டு நாய்கள் - சென்னை கண்காட்சியில் பார்வையாளர்கள் உற்சாகம்

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ வளாகத்தில் நடந்துவரும் நாய் கண்காட்சியில், உலகின் பல பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட 650 நாய்கள் பங்கேற்றன. ஏ.சி. வசதி கொண்ட சொகுசு வாகனங்களில் நாய்கள் வந்திறங்கியதையும் விதவிதமான அலங்காரங்களில் அவை அணிவகுத்துச் சென்றதையும் மக்கள் ஆச்சரியத்தோடு பார்த்தனர்.

மெட்ராஸ் கேனைன் கிளப் சார்பில் 3 நாட்கள் நடத்தப்படும் நாய் கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் இருந்தும் வகை வகையான நாய்கள் பங்கேற்றுள்ளன. முதல் நாளன்று நாய்களுக்கு பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.

650 நாய்கள் பங்கேற்பு

கண்காட்சியின் 2-வது நாளான சனிக்கிழமை அமெரிக்கா, இங்கி லாந்து, ரஷ்யா, தாய்லாந்து நாடு களில் இருந்தும் நம் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந் தும் 650 நாய்கள் பங்கேற் றன. நாய்கள் அவற்றுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப் பட்ட கூண்டுகளில் அடைக்கப் பட்டு ஏ.சி. வசதியுள்ள சொகுசு வாகனங்களில் பாதுகாப்பாகக் கொண்டுவரப்பட்டன. ஜெர்மன் ஷெப்பர்டு, ஆஸ்திரேலியன் ஷெப்பர்டு, பாக்ஸர், புல்டாக், டாபர்மேன் உட்பட 57 வகையான நாய்கள் இடம்பெற்றன.

சென்னையில் வெப்பம் அதிகம் இருப்பதை கருத்தில் கொண்டு, கண்காட்சி வளாகத்தில் ஆங்காங்கே ஏர் கூலர்கள் வைக்கப்பட்டிருந்தன. வெளிநாட்டு நாய்களை அவ்வப்போது அதன் முன்னே கொண்டு வந்து சூட்டைத் தணித்தனர். அது மட்டுமின்றி, நாய்கள் மீது வாட்டர் ஸ்பிரே அடிக்கடி பீய்ச்சியடிக்கப்பட்டன.

கலர் கலராக முடி, வால்

உயரம், குட்டை, பருமன் என விதவிதமான நாய்கள் கண்காட்சியில் வலம் வந்தன. பல வண்ணங்களில் முடி, வால்கள் அலங்கரிக்கப்பட்ட நிலையில் நாய்கள் அணிவகுத்துச் சென்றது பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தது. நாய்களுக்கு பல்வேறு சிறப்பு போட்டிகள் நடத்தப்பட்டு, திறமையான நாய்களுக்கு பரிசுக் கோப்பைகள் வழங்கப்பட்டன. கண்காட்சியில் நாய்களுக்கான உணவுப் பொருட்கள், மருந்துகள், அழகுசாதன பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.

நாய் கண்காட்சி இன்று (ஞாயிறு) முடிவடைகிறது. இன்றும் சிறப்பு போட்டிகள் நடக்கின்றன. இதில் விலை உயர்ந்த மற்றும் முக்கிய பிரமுகர்கள் வளர்க்கும் நாய்களும் பங்கேற்கின்றன. கடைசியில் 20 நாய்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பு பரிசுகள் அளிக்கப்படவுள்ளன. விழாவில் தமிழக ஆளுநர் ரோசய்யா கலந்துகொள்ள இருக்கிறார்.

நாய் மயங்கியதால் பரபரப்பு

நண்பகல் 12.45 மணி அளவில் அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. நாய்கள் வரிசையாக அணிவகுத்துச் சென்றபோது, கருப்பு நிற நாய் ஒன்று வெயில் தாங்காமல் திடீரென மயங்கி விழுந்தது. அங்கிருந்த கால்நடை மருத்துவக் குழுவினர் உடனடியாக அதற்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். சுமார் அரை மணி நேரம் அவர்கள் முயற்சித்தும் மயக்கம் தெளியவில்லை. இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக ஏ.சி. வசதி கொண்ட வாகனத்தில் அந்த நாய் உடனடியாக கொண்டுசெல்லப் பட்டது. இதனால், சிறிது நேரம் பரபரப்பான நிலை காணப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x