

தீபாவளி பண்டிகையால் தமிழக சந்தைகளில் வெண் பட்டுக்கூடுகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் பட்டுக்கூடு உற்பத்தி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருநெல்வேலி, சேலம், திருப்பூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் 34,793 ஏக்கரில் 21,415 விவசாயிகள் பட்டுத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்யும் பட்டுக்கூடுகளை தருமபுரி, கிருஷ்ணகிரி, பென்னாகரம், பாலக்கோடு, சேலம், கோவை, உடுமலை, வாணியம்பாடி உள்ளிட்ட 14 இடங்களில் செயல்படும் பட்டுக்கூடு விற்பனை அங்காடிகளில் விற்பனை செய்கின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் சாணார்பட்டி, ஒட்டன்சத்திரம், வேடச்சந்தூர், பழனி மற்றும் வத்தலகுண்டு பகுதியில் 2,930 ஏக்கரில் 1,234 விவசாயிகள் பட்டுக்கூடு உற்பத்தி தொழில் செய்கின்றனர்.
கடந்த இரு ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால், மல்பரி செடி சாகுபடி குறைந்து, பட்டுக்கூடு விவசாயம் நலிவடைந்தது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக பரவலாக மழை பெய்து வருவதால் பட்டுக்கூடு உற்பத்தி மீண்டும் அதிகரித்துள்ளது. தற்போது தீபாவளி பண்டிகை நெருங்குவதால், கடந்த ஒரு வாரமாக பட்டுக்கூடுகள் விலை அதிகரித்துள்ளது.
கடந்த வாரம் ரூ.350-க்கு விற்ற ஒரு கிலோ வெண் பட்டுக்கூடு, தற்போது ரூ.370 முதல் ரூ.425 வரை விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக, திண்டுக்கல் பட்டுக்கூடுகள் தரமாகவும், ஒரு பட்டுக்கூட்டில் ரூ. 2,200 மீட்டர் வரை பட்டுநூல் கிடைப்பதால் தமிழகம் மட்டுமில்லாது, கர்நாடக சந்தைகளிலும் திண்டுக்கல் வெண் பட்டுக்கூடுகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் விவசாயிகள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து திண்டுக்கல் பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் வே.சச்சிதானந்தம் கூறும்போது, ‘தீபாவளி பண்டிகை மட்டுமல்லாது, தொடர்ந்து கிறிஸ்துமஸ், ஜனவரியில் தை திருமண முகூர்த்த தினங்கள் அதிகளவு வருவதால், பட்டு ஜவுளி உற்பத்திக்கு அதிகளவு பட்டுக்கூடுகள் தேவைப்படுகிறது. அதனால், இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
இந்த விலை மேலும் உயர வாய்ப்புள்ளது தமிழகத்தில் வெண் பட்டுக்கூடு உற்பத்தியில், திண்டுக்கல் 4-வது இடத்தில் உள்ளது. கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 4,12,934 வெண்பட்டுக் கூடுகள் உற்பத்தியாகி உள்ளது. தற்போது மழை பெய்ததால், வறட்சியால் பராமரிக்கப்படாத தோட்டங்களை விவசாயிகள் பராமரித்துள்ளனர். அதனால், மேலும் பட்டுக்கூடு உற்பத்தி அதிகரிக்கும்’ என்றார்.
சீன இறக்குமதி குறைந்தது
தமிழகத்தில் 432 மெட்ரிக் டன் பட்டு நூல் உற்பத்தி செய்யப் படுகிறது. இவற்றில் வெண்பட்டு மட்டும் 299 மெட்ரிக் டன் தயாரிக் கப்படுகிறது. 100 வெண் பட்டுக் கூடுகளில் இருந்து 90 கிலோ வெண் பட்டுநூல் தயாரிக்கலாம். ஆனால், 100 மஞ்சள் கூடுகளில் இருந்து 60 கிலோ மஞ்சள் பட்டுநூல் மட்டுமே தயாரிக்க முடியும்.
மேலும், மஞ்சள் பட்டுக்கூடுகளை காட்டிலும் வெண் பட்டுக்கூடுகளுக்குதான் கூடுதல் விலை கிடைப்பதால் விவசாயிகள் வெண் பட்டுக்கூடு உற்பத்தி செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்தியாவில் பட்டு தேவை அதிகளவு உள்ளதால், கடந்த காலத்தில் சீனாவில் இருந்து, கூடுதல் பட்டு இறக்குமதி செய்யப்பட்டது. தற்போது பட்டு உற்பத்தி பரவலாக அதிகரித்துள்ளதால், சீன இறக்குமதி குறைந்துள்ளது’ என்று பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் வே.சச்சிதானந்தம் தெரிவித்தார்.