

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீஷ் முதல்கட்ட வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் கடந்த 19 ஆம் தேதி முடிவடைந்தது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில், இன்று (மே 23) நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கியது. இதில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் பின்னடவைச் சந்தித்துள்ளார்.
தற்போதைய (11 மணி) நிலவரப்படி திமுக வேட்பாளர் கெளதம சிகாமணி 1,09,939 வாக்குகளோடு முன்னிலை வகிக்கிறார். அதிமுகவின் இரட்டை இலையில் போட்டியிட்ட எல்.கே.சுதீஷ் திமுகவைவிட பாதிக்கும் குறைவாக 51, 564 வாக்குகள் பெற்று பின்தங்கியுள்ளார்.
வேலூர் தவிர்த்து தமிழகம் மற்றும் புதுச்சேரியின் 39 தொகுதிகளில் திமுக கூட்டணி 37 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 2 தொகுதிகளிலும் முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.