

டார்ச் இருந்தாலும் பார்வைக் கோளாறு என்று ஃபானி புயல் குறித்த கமலின் கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் பதில் தெரிவித்துள்ளார்.
தென் வங்கக் கடலில் உருவான ஃபானி புயல், நேற்று முன்தினம் ஒடிசாவில் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 200 கி.மீ. முதல் 245 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதன்காரணமாக ஒடிசாவின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
இப்புயல் தாக்கும் முன்னரே, மக்களை வெளியேற்றியது ஒடிசா அரசு. புயலுக்குப் பிறகு நிவாரணப் பணிகளையும் துரிதப்படுத்தி வருகிறது. மேலும், இப்புயல் உருவானது முதலே இந்திய வானிலை ஆய்வு மையம் துல்லியமாக கணித்து இடைவிடாமல் தகவல்களை தந்ததால் பெருமளவு உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக ஐ.நாவும் பாராட்டு தெரிவித்துள்ளது.
ஃபானி புயலை ஒடிசா மாநிலம் எதிர்கொண்ட விதத்தை கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டினார். இது தொடர்பாக, “இது போன்ற ஒரு இயற்கைப் பேரிடரை எப்படிக் கையாள வேண்டும் என்பதற்கு ஒடிசா ஒரு சிறந்த உதாரணம். ஒடிசா அரசுக்கு வாழ்த்துகள்.எந்த ஒரு சுயமரியாதையுள்ள அரசாங்கத்தும் இது ஒரு கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். தமிழ்நாடு இன்னும் கஜா புயலை நினைவில் வைத்துள்ளது. இங்கே அதிகாரத்தில் இருப்பவர்களின் மிகப்பெரிய மோசமான செயல்பாடு அது” என்று தெரிவித்தார்.
கமலின் இக்கருத்தை கடுமையாகச் சாடியுள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன். இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில், “நம்மஊர் கமல் ஒடிசா முதல்வரை மட்டுமே பாராட்டுகிறார். புயல் நிவாரணம் சூப்பர் என்கிறார்? இதிலுமா மோடி வெறுப்பு? புயல் வரும் பாதையை துல்லியமாகக் கணித்து எச்சரிக்கை அளித்த ISRO. களத்தில் முப்படை பேரிடர் மீட்பு குழு. புயல் வரும் முன்பே 1000 கோடி நிவாரணம். டார்ச் இருந்தாலும் பார்வைக் கோளாறு” என்று தெரிவித்துள்ளார் தமிழிசை.