Published : 18 Apr 2019 11:38 AM
Last Updated : 18 Apr 2019 11:38 AM

நான் ஒரு பைசா கூட கொடுக்கவில்லை; தூத்துக்குடியில் நிச்சயம் ஜெயிப்பேன்: தமிழிசை உறுதி

சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தமிழக பாஜக தலைவரும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன் வாக்களித்தார். அவர் தனது கணவர் சவுந்தரராஜன் மற்றும் மகன் என குடும்ப சகிதமாக வந்து வாக்களித்தார்.

வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், "அனைவரும் வாக்களித்து இந்தத் தேர்தல் திருநாளைக் கொண்டாட வேண்டும். மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. வாக்களித்து விட்டு நான் போட்டியிடும் தூத்துக்குடி தொகுதிக்குச் செல்ல இருக்கிறேன். அங்கே நான் நிச்சயமாக வெற்றி பெறுவேன். அதிமுக - பாஜக கூட்டணி தோழமைக் கட்சிகளின் அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெறுவர். மோடியை மீண்டும் பிரதமராக்க அனைத்து மக்களும் ஆதரவு தந்து கொண்டிருக்கின்றனர்.

வாக்குச்சாவடி ஏற்பாடுகள் நன்றாக இருக்கிறது. சரியாக நிர்ணயிக்கிறார்கள்" என தமிழிசை தெரிவித்தார்.

தூத்துக்குடியில் ரெய்டு காரணமாக பதற்றமான சூழல் நிலவுகிறதே என, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தமிழிசை, "ரெய்டு என்றால் அதிகாரிகள் சும்மா வரமாட்டார்கள். தகவலின் அடிப்படையில் தான் வந்திருக்கின்றனர். அங்கு ஏற்கெனவே பணப்பட்டுவாடா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மக்களே அதனை சொல்கின்றனர். பாமர மக்களுக்கு நிரந்தரமான உதவியைச் செய்ய வேண்டும் என நான் நினைக்கிறேன்.

நிரந்தரமான வேலைவாய்ப்பு , நிரந்தரமான வாழ்வாதாரத்தை ஏற்படுத்த நினைக்கிறேன். சிலர், தற்காலிகமாக உதவி செய்து விட்டு வாக்குகளைப் பெற விரும்புகின்றனர். அவர்கள் வைத்திருக்கும் பணத்தை விட, மக்களுக்கு கொடுக்கும் பணம் மிகக்குறைவு என்பதே என் கவலை.

நான் ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. ஆனால், மக்கள் எனக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஏனென்றால் நான் அன்பு, அதரவு, நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறேன். மற்றவர்கள் பணத்தைக் கொடுத்திருக்கிறார்கள், நான் என் குணத்தைக் கொடுத்திருக்கிறேண். வெற்றியோடு திரும்புவேன்" என தமிழிசை தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x