Last Updated : 11 Apr, 2019 11:02 AM

 

Published : 11 Apr 2019 11:02 AM
Last Updated : 11 Apr 2019 11:02 AM

தரம் பிரிக்கப்படுமா குப்பை?

உள்ளாட்சி அமைப்பின் முதன்மையான பணியே  சுகாதாரப் பணியாகும். ஒரு நகரத்தின் மதிப்பை உயர்த்துவதில் முன்னிலை வகிப்பதும் சுகாதாரப் பணிகளே. தேவையான இடங்களில் குப்பைத் தொட்டி வைப்பது, கொட்டப்படும் குப்பையை தேங்கவிடாமல் உடனுக்குடன் அகற்றுவது ஆகியவையே திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் முக்கியப்  பணிகளாகும். நாள்தோறும் அதிகரிக்கும் மக்காத குப்பைக்கிடங்கில் கொட்டப்பட்டு,  நிலத்தடி நீர்மட்டத்தை பாதிக்கிறது.

எனவேதான், மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட அனைத்து  உள்ளாட்சி அமைப்புகளிலும், தரம் பிரித்து, குப்பை சேகரித்தல் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. என்றாலும், இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படுகிறதா என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை. நிலத்தடி நீர் பாதிப்புகளைத் தடுக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான, தொழில் துறையில் இரண்டாவது பெரிய நகரமான  கோவையில்  20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். மொத்தமுள்ள 100 வார்டுகளில் 4.50 லட்சத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள்  உள்ளன. ஏறத்தாழ 3,500 வீதிகளில்  தினமும் சுமார் 950 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இந்தக் குப்பை, மாநகராட்சிக்கு சொந்தமாக வெள்ளலூரில் உள்ள 650 ஏக்கர் பரப்பு குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் நகரில் சேகரிக்கப்படும் குப்பையின் அளவு அதிகரித்துக்கொண்டே  வருகிறது. பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்துவதால், இங்கு கொட்டப்படும் குப்பையின் அளவைக்  குறைக்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து, வெள்ளலூர்  கிடங்குக்கு வரும் குப்பையின் அளவைக் குறைக்கும் வகையில்,  மாநகராட்சி சார்பில் வார்டு அளவிலேயே பொதுமக்களிடமிருந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரித்து, மக்கும் குப்பையைக் கொண்டு உரம் தயாரிக்கும் பணியை மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது.

இதன்படி, வாரந்தோறும் புதன்கிழமை தவிர்த்து மற்ற 6  நாட்களில் மக்கும் குப்பையை  சேகரிக்கவும்,  புதன்கிழமை மட்டும் மக்காத குப்பையை சேகரிக்கவும் திட்டமிடப்பட்டு, கடந்த  ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும், இந்த திட்டம் முழுமையாக இல்லை என்கிறார் வெள்ளலூர் குப்பைக் கிடங்கு எதிர்ப்புக் குழு ஒருங்கிணைப்பாளரும், சமூக ஆர்வலருமான டேனியல் ஏசுதாஸ்.

“மாநகராட்சி முழுவதும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரிக்கும் திட்டம் முழு அளவில் செயல்பாட்டுக்கு வரவில்லை. ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட சில பகுதிகளில் மட்டுமே குப்பை முழு அளவில் தரம் பிரித்து சேகரிக்கப்படுகிறது. நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில் சிலவற்றில் மட்டுமே  குப்பை தரம் பிரித்து சேகரிக்கப்படுகிறது. மீதமுள்ள பகுதிகளில் குப்பை தரம் பிரித்து சேகரிப்பது இன்னும் முழுமையாக செயல்பாட்டுக்கு வரவில்லை.

குறிப்பாக, ஆவாரம்பாளையம், பீளமேடு, விளாங்குறிச்சி சாலை, பீளமேடு புதூர், பயனீர் மில் சாலை, சேரன் மாநகர், ஹோப் காலேஜ், சிங்காநல்லூர், கணபதி, தண்ணீர்பந்தல், குனியமுத்தூர், குறிச்சி, உக்கடம் உள்ளிட்ட  முக்கியப் பகுதிகளில்கூட குப்பையை தரம் பிரித்து சேகரிக்கும் திட்டம் முழுஅளவில் செயல்பாட்டுக்கு வரவில்லை.

மாநகரம் முழுவதும் குப்பையைத் தரம் பிரித்து சேகரிக்கும் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த மாநகராட்சி முயற்சிக்க வேண்டும். மாநகராட்சியின் 23-வது வார்டுக்கு உட்பட்ட ஆர்.எஸ்.புரம் பகுதியில், வார்டு அளவில் குப்பையை  தரம் பிரித்து, உரம் தயாரிக்கும் ‘சூன்யா திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. அனைத்து வார்டுகளிலும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்” என்றார்.

விரைவில் முழுமையாக செயல்படுத்தப்படும்!

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “வெள்ளலூர் குப்பைக் கிடங்குக்கு கொண்டுவரப்படும் குப்பையின் அளவைக்  குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக,  வார்டு வாரியாக தரம் பிரித்து,  குப்பை சேகரிப்புத் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சேகரமாகும் குப்பையை,  தரம் பிரித்துத்தான் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். மேலும்,  இது  தொடர்பாக அவர்களிடம் உறுதிமொழிப்  படிவமும் பெறப்பட்டுள்ளது.  சில பகுதிகளில் பொதுமக்கள், தங்கள் வீடுகளில் சேகரமாகும் குப்பையை தரம் பிரித்து வழங்குகின்றனர். மேலும், தரம் பிரித்துதான் குப்பையை சேகரிக்க வேண்டும் என்று மாநகராட்சி சுகாதாரப் பிரிவு ஊழியர்கள் மற்றும் துப்புரவுத்  தொழிலாளர்களிடமும் வலியுறுத்தி உள்ளோம். இந்த திட்டம் விரைவில் முழு அளவில் நடைமுறைக்கு கொண்டுவரப்படும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x