

குருபூஜை விழாக்களில் பங் கேற்பதை அரசியல் தலைவர்கள் தவிர்க்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் வலியுறுத்தியது. மேலும், புதிதாக குருபூஜை விழாக் களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினர் காதர்பாட்சா என்ற வெள்ளைச் சாமி (திமுக), 2012 ஆக. 31-ம் தேதி மேலராமநாதியில் உள்ள அவரது வீட்டில் கொலை செய்யப் பட்டார். காவடிப்பட்டு கிராமத்தில் உள்ள காதர்பாட்சாவின் மணிமண்டபத்தில் 2014, ஆக. 31-ம் தேதி 2-ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நடத்த அனுமதி கேட்டு கமுதி காவல் நிலையத்தில் மனு கொடுக்கப்பட்டது. சட்டம்- ஒழுங்குப் பிரச்சினையைக் காரணம் காட்டி அனுமதி அளிக்க காவல் ஆய்வாளர் மறுத்துவிட்டார். காவல் ஆய்வாளரின் உத்தரவை ரத்து செய்து, நினைவு நாள் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கக் கோரி காதர்பாட்சாவின் மகன் கே.வி. ராமலிங்கம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என். கிருபாகரன் வியாழக் கிழமை பிறப்பித்த உத்தரவு: தமிழகத்தில் புதிதாக எந்தவொரு குருபூஜை விழா நடத்தவும் தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது. குருபூஜை விழாக்களில் அரசியல் தலைவர்கள் பங்கேற்பதால் அதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி குருபூஜை விழா நடைபெறும் இடங்களுக்குச் செல்வதை அரசியல் தலைவர்கள் தவிர்க்க வேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்துகிறது. நீதிமன்றத்தின் கோரிக்கையை ஏற்று அரசியல் தலைவர்கள் செயல்படுவார்கள் என்று நீதிமன்றம் எதிர்பார்க்கிறது. பொதுமக்களுக்கு சேவை செய்யவே அரசியல் கட்சிகள் இருக்கின்றன என்பதை கட்சிகள் நினைவில் கொள்ள வேண்டும்.
காதர்பாட்சா என்ற வெள்ளைச் சாமியின் நினைவு நாள் கடைப்பிடிப்பதை போலீஸார் தடுக்கவில்லை. கட்டுப்பாடுகள் மட்டுமே விதித்துள்ளனர். ரத்த உறவுகள் அஞ்சலி செலுத்த போலீஸார் அனுமதி வழங்கி உள்ளனர். கமுதி பகுதியில் நடைபெற்ற கடந்த கால நிகழ்வுகள் அடிப்படையில், சட்டம்- ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கத்தில் நினைவு நாள் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்து போலீஸார் உத்தரவிட்டுள்ளனர். இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று நீதிபதி உத்தரவிட்டார்.
போதும்…இது போதும்…
நீதிபதி தனது உத்தரவில், ‘போதும்., இது போதும். குருபூஜை என்ற பெயரில் தமிழக மக்கள் என்னென்ன பாடுபடு கின்றனர் என்பது நன்கு தெரியும். குருபூஜை போன்ற கொண்டாட்டங்கள் இனிமேலும் தொடர்ந்தால், தமிழகத்தில் அமைதி மற்றும் ஒருமைப்பாடு கெடுவது நிச்சயம். புதிதாக குருபூஜைக்கு அனுமதி கேட்கும் முயற்சிகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.