

ஃபானி புயல் வலுவடைந்து அதிதீவிர புயலாக மாறியது. சென்னையிலிருந்து 570 கி.மீ தொலைவில் நிலைக்கொண்டுள்ள புயல் ஒடிசா கரை நோக்கி நகர்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி
“ஃபானி புயல் இன்று அதிகாலை அதிதீவிர புயலாக வலுப்பெற்று தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் சென்னையிலிருந்து சுமார் 570 கி.மீ தொலைவில் நிலைக்கொண்டுள்ளது.
இது தொடர்ந்து வலுப்பெற்று வடமேற்கு திசையில் நாளை மாலைவரை நகர்ந்து அதன்பின்னர் வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து ஒடிசா கடற்கரை நோக்கிச் செல்லக்கூடும்.
பலத்தக் காற்றைப் பொருத்தவரை குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் வடதமிழக கடலோர பகுதிகளில் இன்று மணிக்கு 30 முதல் 45 கி.மீ.வேகத்திலும் சமயத்தில் 50 கி.மீ வேகத்திலும் பலத்தக் காற்று வீசக்கூடும்.
மீனவர்கள் இன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கும், நாளை தென்மேற்கு வங்கக்கடல் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கும் செல்லவேண்டாம். தென்மேற்கு வங்கக்கடல், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மே.2-ம் தேதிவரை கொந்தளிப்பாக காணப்படும்.
மழைக்கான வாய்ப்பு வட தமிழகத்தில் லேசானதுமுதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வெயிலின் தாக்கம் புயல் கடந்தப்பிறகுதான் தெரியவரும். மே.3-ம் தேதி ஒடிசா கடற்கரையில் கரையைக்கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்தியக் கடலில் ஏப்ரல் மாதங்களிலும் புயல் உருவாகும் வாய்ப்பும் உண்டு. இரண்டு சீசன் உண்டு. இனி கோடை மழை குறித்து முன் கூட்டியே சொல்லமுடியாது. வங்கக்கடல் காற்றழுத்த நிலை, உள் மாவட்டங்களில் உள்ள காற்றின் நிலையைப்பொருத்தே அதுப்பற்றி கணித்து கூற முடியும்.’’
இவ்வாறு அவர் கூறினார்.