Last Updated : 06 Apr, 2019 12:00 AM

 

Published : 06 Apr 2019 12:00 AM
Last Updated : 06 Apr 2019 12:00 AM

திமுகவுடன் மதிமுகவை இணைக்க திட்டமா?- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

மதிமுகவை திமுகவுடன் இணைக்கப் போவதாகவும் அடுத்த பொதுச் செயலாளர் பதவியை வைகோவுக்கு அளிக்கப் போவதாகவும் வரும் செய்திகள் உண்மையா என்பதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி:

கடந்த 15 நாட்களாக பிரச்சாரம் செய்து வருகிறீர்களே, மக்களின் மனநிலை எப்படி உள்ளது?

மத்திய பாஜக அரசையும், மாநில அதிமுக அரசையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதுதான் மக்களின் மனநிலை. அதில் எங்களைவிட மக்கள் ஆர்வமாகவும் தீவிரமாகவும் இருக்கிறார்கள். பொதுக் கூட்டங்களில் மட்டுமின்றி, நடைபயிற்சியில், திண்ணைப் பிரச்சாரத்தில், தெருமுனை வாக்கு சேகரிப்புகளில் மக்களின் மனநிலை துல்லியமாக வெளிப்படுகிறது.

அதிமுகவும் வலுவான கூட்டணி அமைத்துள்ளதால் போட்டி கடுமையாகத் தானே இருக்கும்?

போட்டி இல்லாமல் தேர்தல் களம் இல்லை. திமுக தலைமையிலான மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணி என்பது கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய பாஜக ஆட்சியையும், மாநிலத்தில் ஊழல்மயமான அதிமுக அரசையும் அகற்ற வேண்டும் என்ற இலக்குடன் பல போராட்டக் களங்களில் இணைந்து நிற்கும் கூட்டணி. ஆனால், அதிமுக கூட்டணி என்பது பாஜகவின் வருமானவரி, சிபிஐ சோதனை மிரட்டலால் உருவான கூட்டணி. நேற்றுவரை அதிமுகவை எங்களைவிட படுமோசமாக விமர்சித்தவர்கள், வெறும் தேர்தல் ஆதாயத்துக்காகவும், பிற சலுகை களுக்காகவும் கூட்டணி சேர்ந்திருப்பதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.

பாமக, தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வர திமுக விரும்பியதா?

திமுக கூட்டணியும் அதில் உள்ள கட்சிகளும் தங்கள் வலிமை, கட்டமைப்பு, தற்போதைய தேர்தல் சூழல் இவற்றை உணர்ந்து பங்கீடு செய்துகொண்ட கட்சிகள். இதில் புதிதாக இணைந்த கொங்கு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி போன்றவையும் உண்டு. இதைத்தாண்டி வேறு எதிர்பார்ப்புகள் கொண்டவர்களிடம் கூட்டணி அமைப்பதில் திமுக ஆர்வம் காட்டவில்லை.

கொள்கை வாரிசுகளுக்குதான் தேர்தலில் வாய்ப்பு தரப்பட்டுள்ளது என நீங்கள் கூறினாலும், அதனால் குடும்பப் பின்னணி இல்லாத கொள்கையாளர்கள் பாதிக்கப்பட மாட்டார்களா?

திமுக வேட்பாளர்கள் 20 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். இதில் குடும்பப் பின்னணி இல்லாத கொள்கையாளர்கள்தான் அதிகம். அதுபோலவே, குடும்பப் பின்னணி கொண்டவர்களும் இந்த இயக்கத்தை தலைமுறை தலைமுறையாக தாங்கிப் பிடிக்கின்ற கொள்கையாளர்கள்.

திமுகவில் உங்களைத் தவிர உதயநிதி ஸ்டாலின்தான் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்கிறார். கருணாநிதிக்கு ஸ்டாலின் போல, ஸ்டாலினுக்கு உதய நிதியா?

திமுகவின் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலே தரப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் இந்தக் கூட்டணியின் வெற்றிக்காக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்கின்றனர். அவர்களில் உதயநிதியும் ஒருவர். ஆனால், சினிமா நட்சத்திரமான அவர் மட்டும்தான் உங்கள் பார்வைக்குத் தெரிகிறார்.

முஸ்லிம் சிறுபான்மையின வாக்குகளில் கணிசமானவை இந்த முறை தினகரன் கட்சிக்கு போகக் கூடும், இதனால் திமுக கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுவது பற்றி?

மோடி தலைமையிலான பாசிச பாஜக ஆட்சியில் சிறுபான்மையினரின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது. அவர்களின் நலன் காப்பதில் எப்போதும் உறுதியாக இருக்கின்ற இயக்கம் திமுக. அதைத் தேர்தல் பிரச்சாரத்திலும் காண முடிகிறது. மோடி ஆட்சியை விரட்டும் சக்தி, திமுகவுக்குத்தான் உண்டு என்பதை சிறுபான்மையினர் உணர்ந்திருக்கிறார்கள். தேர்தல் முடிவுகளில் அது தெரியவரும்.

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முதன்முதலில் முன்மொழிந்தீர்கள். ஆனால் உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், ஆந்திரம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் காங்கிரஸால் கூட்டணி அமைக்க முடியவில்லை. இதனால் காங்கிரஸின் வெற்றி வாய்ப்பு பாதிக்காதா?

பல மாநிலங்களிலும் மாநிலக் கட்சிகள் வலிமையாக உள்ளன. அந்தந்த மாநில நிலைமைக்கேற்ப முடிவுகள் எடுக்கப்படுகின்றன. காங்கிரஸுடன் கூட்டணி அமைக்காத கட்சிகளும்கூட, பாஜக எதிர்ப்பிலும், மோடி மீண்டும் பிரதமராகும் ஆபத்துக்கு இடம் தந்துவிடக்கூடாது என்பதிலும் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கின்றன.

திமுகவுடன் மதிமுக இணையப் போவதாகவும் வைகோவுக்கு அடுத்த பொதுச் செயலாளர் பதவி வழங்கப் போவதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறதே, இது எந்த அளவுக்கு உண்மை?

அண்ணன் வைகோ, திராவிட இயக்கத்தின் போர்க்குரலாக திகழ்பவர். திராவிடத்துக்கு எதிரான வஞ்சக சக்திகளை வீழ்த்துவது ஒன்றையே தனது இலக்காகக் கொண்டு செயல்படுகிறார். தனது தலைவரான கருணாநிதியிடம் தெரிவித்ததுபோல, திமுகவுக்கும் எனக்கும் தோள்கொடுத்து உதவுகிறார். மதிமுக தோழர்களும் அதே உணர்வுடன் செயல்படுகின்றனர். இதுதான் உண்மை நிலை. மற்றவை உங்கள் யூகங்கள்.

கருணாநிதி இல்லாத திமுகவை நிர்வகிப்பதில் என்னென்ன பிரச்சினைகளை சந்திக்கிறீர்கள்?

கருணாநிதிக்கு இணையான ஒருவர் இந்திய அரசியலிலேயே கிடையாது. எந்தச் சூழலையும் சமாளிக்கின்ற ஆற்றல் அவருக்கு உண்டு. அவரிடம் கற்ற, பெற்ற பயிற்சியின் வாயிலாக நான் மட்டுமல்ல, திமுகவின் நிர்வாகிகளும் தொண்டர்களும் எல்லாப் பிரச்சினைகளையும் சமாளிக்கிறோம். இருந்தாலும், தட்டிக் கொடுக்கவும், சுட்டிக்காட்டவும் கலைஞர் இல்லையே என்ற ஏக்கம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

காவிரி, நெடுவாசல், மீத்தேன் உள்ளிட்ட பல பிரச்சினைகள் திமுகவால் ஏற்பட்டவை என்று ஆளுங்கட்சியினர் சொல்லும் குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில்?

கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருப்பவர்கள் இன்னமும் எதிர்க்கட்சி மீதே பழிபோட்டு தப்பித்துக் கொள்ளலாம் என நினைக்கின்றனர் என்றால் அவர்களின் நிர்வாக லட்சணம் என்ன என்பதை புரிந்துகொள்ளலாம்.

5 கோடி பேருக்கு மாதம் ரூ.6 ஆயிரம் வழங்குவது சாத்தியம்தானா? அது, சாத்தியம் எனில் கடந்த 5 ஆண்டுகால மோடி ஆட்சியில் பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளது என்றுதானே பொருள்?

நாட்டின் பொருளாதாரத்தை நிலையான தன்மைக்கு கொண்டு வந்தது மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிதான். அந்த வளர்ச்சியை சீரழித்து, ஒரு சில கார்ப்பரேட் நிறு வனங்களுக்கு மட்டுமே சாதகமாக செயல் பட்டதுதான் மோடி அரசு. ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, ஒரு சிலரின் கைகளில் சிக்கியுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்டாலே, வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள வர்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை சாத்தியப்படுத்த முடியும்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகும் இவ்வளவு காலம் அதிமுக அரசு நீடிப்ப தால் உங்களுக்கு வருத்தம் இல்லையா?

ஒரு தலைவரின் மரணத்தையோ, அதனால் ஏற்படும் அரசியல் சிக்கல்களையோ சாதகமாக்கிக்கொண்டு ஆட்சிக்கு வரவேண்டும் என ஒருபோதும் நினைத்ததில்லை. ஜனநாயக களத்தில் வெற்றி பெற்று, முறையாக ஆட்சிக்கு வரவேண்டும் என்பதே திமுகவின் உறுதியான நிலைப்பாடு. அதனால்தான், கொல்லைப்புற நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

தமிழகத்தில் திமுக கூட்டணி பெரும்பாலான இடங்களை வெல்லும் எனக் கூறும் கருத்துக் கணிப்புகள், தேசிய அளவில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்கிறதே?

பொதுவாக கருத்துக்கணிப்புகள் சாதகமாக இருந்தாலும், எதிராக இருந்தாலும் திமுக அதற்கு பெரிய அளவில் முக்கியத்துவம் தருவதில்லை. இந்தியாவின் தென்பகுதியான தமிழகத்தில் வீசக்கூடிய அலை, நாடு முழுவதும் வீசும் என்பதே உண்மை நிலவரம்.

சட்டம் வரும் வரை காத்திருக்காமல் திமுக வேட்பாளர்களில் 33 சதவீதம் பெண்களுக்கு வாய்ப்பு அளித்திருக்கலாமே?

சட்டரீதியாக நிறைவேற்றப்படும்போது தான் உண்மையிலேயே பெண்களுக்குரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும். சாதி, மத ஏற்றத்தாழ்வுகள் போலவே, பாலின ஏற்றத்தாழ்வும் நிலவும் சமூகத்தில், பெண் களுக்கான தொகுதிகள் சட்டப்பூர்வமாக வரையறுக்கப்பட வேண்டும் என்பதில் திமுக உறுதியாக உள்ளது.

எந்த ஒரு மதத்தின் உணர்வுகளையும் புண்படுத்துவது திமுகவுக்கு ஏற்றதல்ல, ஏற்றுக்கொள்ளவும் முடியாது. எந்த மதத்தின் வழிபாட்டு தலத்தையும் கடவுளையும் இழிவுபடுத்தி பேசுவது தவறு என்பதே என் கருத்து.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x