Last Updated : 29 Apr, 2019 12:00 AM

 

Published : 29 Apr 2019 12:00 AM
Last Updated : 29 Apr 2019 12:00 AM

கோவையில் பெண் ஊழியர்களை தாக்கி தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.2 கோடி நகைகள் கொள்ளை: குற்றவாளியைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைப்பு

கோவையில் பட்டப்பகலில், பெண் ஊழியர்களை தாக்கி தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள 812 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கோவையில் திருச்சி சாலை ராமநாதபுரம் சந்திப்பு அருகே உள்ள ஒரு வணிக வளாகத்தின் முதல் தளத்தில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தங்க நகை அடகுக்கான கடன், தொழில் தொடங்க கடன் ஆகியவை இங்கு வழங்கப்படுகின்றன. நேற்று முன்தினம் (27-ம் தேதி) போத்தனூரைச் சேர்ந்த ரேணுகாதேவி(28), செல்வபுரத்தைச் சேர்ந்த திவ்யா(23) ஆகிய ஊழியர்கள் பணியில் இருந்தனர். அன்று மாலை 4 மணிக்கு 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், முகத்தை கர்சீப்பால் கட்டிக் கொண்டு நிதி நிறுவனத்துக்கு வந்தார்.

திவ்யா, ரேணுகாதேவி ஆகியோரை திடீரென தாக்கிய அந்த நபர், அவர்களை மிரட்டி சாவியை எடுத்து, லாக்கரில் இருந்த நகைகள், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றார். தாக்குதலில் நிலைகுலைந்த ஊழியர்கள் மயங்கினர். பின்னர் மாலை சுமார் 5.30 மணிக்கு மயக்கம் தெளிந்து, சம்பவம் தொடர்பாக நிறுவன அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த மாநகர காவல் ஆணையர் சுமித் சரண், குற்றப்பிரிவு துணை ஆணையர் பெருமாள் மற்றும் ராமநாதபுரம் போலீஸார் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். ரேணுகாதேவி சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், 812 பவுன் நகை, ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டதும், கொள்ளைபோன நகையின் மதிப்பு ரூ.2 கோடி எனவும் தெரியவந்தது. 2-வது நாளாக நேற்றும் சம்பவ இடத்தை போலீஸார் ஆய்வு செய்தனர். மர்ம நபர் ரயில் மூலம் கேரளாவுக்கு தப்பிச் சென்று இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

இதுகுறித்து மாநகர குற்றப்பிரிவு துணை ஆணையர் பெருமாள் கூறும்போது, ‘‘மயக்க மருந்து உபயோகப்படுத்தி கொள்ளை நடைபெறவில்லை. ஊழியர்களை தாக்கியதால்தான் கொள்ளையடித்துள்ளனர். மர்ம நபரை கண்டறிந்து கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன’’ என்றார்.

காவலாளி கிடையாது

மாநகர போலீஸார் கூறும்போது, ‘‘நிதி நிறுவனங்கள், ஏடிஏம் மையங்களில் பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமரா வைக்க வேண்டும், காவலாளிகளை நியமிக்க வேண்டும் என முன்னரே அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் வந்து அடகு வைக்கும் இடம், லாக்கர் ஆகிய பகுதிகளில் மட்டும் கண்காணிப்பு கேமரா உள்ளது. அந்த இளைஞர் தாக்குதல் நடத்திய பகுதிகளில் கண்காணிப்பு கேமரா இல்லை.

இந்நிறுவனத்தில் காவலாளியும் நியமிக்கப்படவில்லை. ஆண் பணியாளர் பணியிடம் நிரப்பப்படாமல் நீண்ட நாட்களாக காலியாக உள்ளது. தங்க நகை, பணம் அதிகளவில் புழங்கும் இடத்தில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் அலட்சியமாக இருந்துள்ளனர். கொள்ளையர்கள் தாக்கியதால் எச்சரிக்கை அலாரத்தையும் ஒலிக்க செய்ய முடியவில்லை என ஊழியர்கள் தெரிவித்தனர். மர்மநபர் டிப்டாப்பாக வந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்’’ என்றனர்.

இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் பற்றி நன்கு அறிந்தவர்தான் இச்சம்பவத்தில் ஈடுபட்டிருக்கக்கூடும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இந்நிதி நிறுவனத்தில், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கத்தை அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளனர். கொள்ளைச் சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுடன் நகையை அடமானம் வைத்த பொதுமக்கள் கடை முன்பு திரண்டு வந்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x