

விசிக பிரமுகர் காரில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவனை கார்ட்டூன் மூலமாக கிண்டல் செய்துள்ளது தமிழக பாஜக
பெரம்பலூர் அருகே பேரளி சுங்கச்சாவடி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் காவல்துறை ஏடிஎஸ்பி ரங்கராஜன் தலைமையிலான போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது போலீஸாருக்கு ரகசிய நபர் ஒருவர் மூலம் காரில் பணம் கடத்தப்படுவதாகத் தகவல் கிடைத்தது. இதில் காரின் பதிவு எண் (TN-31BU-0585) உள்ளிட்ட விவரங்களை அவர் தெரிவித்திருந்தார். அந்த கார் வந்த போது, நிறுத்தி சோதனை செய்தனர். அதில் பணம் எதுவும் இல்லை. மாறாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிகள், துண்டுகள் சில இருந்தன.
பின்னர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு காரைக் கொண்டு வந்து தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது காரின் கதவுகளின் உள் பகுதியிலும் பயணிகள் அமரும் சீட்டுக்கு அடியிலும் கட்டுக்கட்டாகப் பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தனர். பணம் மொத்தம் ரூ.1 கோடியே 99 லட்சத்து 77 ஆயிரத்து 500 இருந்தது.
இது செய்தியாக வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரின் கதவுகளில் எப்படி இவ்வளவு பணத்தை மறைத்தார்கள் என்று பலரும் ஆச்சர்யப்பட்டனர். மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சம்பந்தப்பட்டவர்கள் என்பதாலும், காரில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட இடம் திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்டது என்பதாலும் அக்கட்சியும் சர்ச்சையில் சிக்கியது.
இச்செயலை தமிழக பாஜக தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் கார்ட்டூன் மூலம் கிண்டல் செய்துள்ளது. இதில் ஸ்டாலின் - திருமாவளவன் இருவரும் கையில் கார் கதவுடன் இருப்பது போலவும், அக்கதவு லாக்கர் போல் வடிவமைக்கப்பட்டு இருப்பது போலவும் அக்கார்ட்டூன் இடம் பெற்றுள்ளது.
அக்கார்ட்டூனைப் பகிர்ந்து “செய்தி - வி.சி.க. நிர்வாகியின் காரில் மறைத்து வைக்கப்பட்ட ₹2.10 கோடி பறிமுதல். உங்களை 'புதிய கார் கதவு இரும்புப்பெட்டி அறிமுக விழா'வுக்கு வரவேற்கிறோம். இப்படிக்கு ஸ்டாலின் மற்றும் திருமாவளவன்” என்று தெரிவித்துள்ளது தமிழக பாஜக.