

மகனின் வெற்றி - தோல்விதான் தந்தையின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்ற நிலை மதுரை, தேனி ஆகிய இரு தொகுதிகளிலும் உள்ளதால், இடைத்தேர்தலை மிஞ்சும் வகையில் இத்தொகுதிகளில் தேர்தல் களம் விறுவிறுப்பு அடைந்துள்ளது.
ஒவ்வொரு தேர்தலிலும் ‘வாரிசு அரசியல்’ விமர்சனம் திமுக மீது மட்டுமே வைக்கப்படும். இந்த முறை திமுகவுக்கு இணையாக அதிமுகவிலும் வாரிசுகள் வேட்பாளர்களாகக் களம் இறக்கப்பட்டுள்ளனர்.
தேனியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன்ரவீந்திரநாத் குமாரும், மதுரையில் முன்னாள் மேயர் விவி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏவின் மகன் ராஜ்சத்யனும் குறிப்பிடத்தக்கவர்கள்.
மகனுக்கு ‘சீட்’ பெறுவதற்காகவே ராஜன் செல்லப்பா, கட்சித்தலைமையிடம் போராடி தனது புறநகர் மாவட்ட செயலாளர் அதிகாரத்துக்கு உட்பட்ட திருமங்கலம், உசிலம்பட்டி, சோழவந்தான் சட்டப்பேரவைத் தொகுதிகளை விட்டுக் கொடுத்துள்ளார்.
இந்த 3 தொகுதிகளை உள்ளடக்கி, தற்போது மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் உருவாக்கப்பட்டு, அதன் மாவட்டச் செயலாளராக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த மாவட்டம் பிரிப்பு, அரசியல்ரீதியாக ராஜன் செல்லப்பாவுக்கு, இறங்குமுகம்தான்.
மகன் வெற்றியின் மூலம் அதை ஈடுகட்டலாம் என அவர் அரசியல் கணக்குப் போடுகிறார். வெற்றி பெற்றால் ராஜன் செல்லப்பா நினைத்தபடி கட்சியில் தன் செல்வாக்கை அதிகரிக்கலாம். தோல்வி அடைந்தால் கட்சியிலும், அரசியலிலும் அவருக்கு பின்னடைவாக அமையும்.
அதனால், மகனின் வெற்றியை ராஜன் செல்லப்பா கவுரவப் பிரச்சினையாகக் கருதுவதால், எதிர்க்கட்சியினரை சமாளிப்பது, சமுதாய அமைப்புகள், கூட்டணிக் கட்சியினரை அனுசரித்துச் செல்வது என கச்சிதமாகச் செயல்பட்டு வருகிறார். வார்டு வாரியாக நிர்வாகிகளை உற்சாகப்படுத்துகிறார்.
தேனியில் போட்டியிடும் ஓபிஎஸ் மகனுக்கு பக்கபலமாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இருக்கிறார். தினசரி பிரச்சாரம் முதல், தேர்தல் வியூகங்கள் வகுப்பது வரை அவரே பார்த்துக்கொள்கிறார். இதனால் ஓ.பன்னீர்செல்வம் கவலையின்றி, தமிழகம் முழுவதும் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்து வருகிறார்.
தன்னுடன் ‘தர்மயுத்தத்தில்’ பங்கேற்ற சிட்டிங் எம்.பி.க்களுக்கு சீட் பெற்றுத் தராமல் தனது மகனுக்கு சீட் பெற்றது அவரது ஆதரவாளர்களிடம் அதிருப்தி ஏற்படுத்திய நிலையில், மகனின் வெற்றி ஓ.பன்னீர்செல்வத்துக்கு அவசியமாக உள்ளது.
ஓ.பன்னீர்செல்வம் தரப்பை வீழ்த்த, அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் களமிறங்கினாலும், ஓபிஎஸ் தரப்பு அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பணியாற்றி வருகிறது.திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் நிற்கிறார். இவர் தமிழகத்தில் பல ஆண்டுகளாக அரசியல் களம் கண்டவர்.
ஆனால், ரவீந்திரநாத்குமார் தற்போதுதான் முதன்முறையாக ஓபிஎஸ் மகன் என்ற அங்கீகாரத்துடன் களமிறங்கி உள்ளார்.மகன் தோல்வி அடையும் பட்சத்தில் கட்சியிலும், சொந்தமாவட்டத்திலும் தனது செல்வாக்கு சரியும் என்பதால், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தேனி தொகுதியில் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த இரு தொகுதிகளிலும், மகனின் வெற்றி - தோல்விதான் தந்தையின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்றநிலை உள்ளதால், இடைத்தேர்தலை மிஞ்சும் வகையில் இந்ததொகுதிகளில் தேர்தல் களம் விறுவிறுப்பு அடைந்துள்ளது.