

தேனியில் போட்டியிடும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன், ‘தலைவர்’ கெத்தில் வலம் வருவதால், ‘கை’க்கு எட்டும் தொலைவில் வெற்றி வாய்ப்பு இருந்தும், அவரது செயல்பாடுகள் கரை சேருவாரா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாக திமுக கூட்டணிக் கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தேனி மக்களவைத் தொகுதியில் ஓ. பன்னீர்செல்வம் மகன் பி. ரவீந்திரநாத் குமார், அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதனால் தேனி நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளது.
ஈவிகேஎஸ். இளங்கோவன் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர், தமிழக காங்கிரஸ் பொதுச் செயலாளர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர், மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை இணை அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர். ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோதும் , இல்லாதபோதும் அவரை துணிந்து விமர்சனம் செய்தார்.
இந்த தேர்தலில் ஈரோட்டில் போட்டியிட விரும்பிய அவருக்கு தேனி தொகுதி ஒதுக்கப்பட்டது. சமீபத்தில் தேனியில் பிரச்சாரம் செய்த முதல்வர் பழனிசாமி, இளங்கோவனை இறக்குமதி வேட்பாளர் எனக் கடுமையாக விமர்சனம் செய்தார். ஆனால், அதற்கு ஈவிகேஎஸ். இளங்கோவனிடம் இருந்து சரியான பதிலடி வரவில்லை.
ஆரம்பத்தில் இளங்கோவனின் பிரச்சாரத்தில் இருந்த வீச்சு, தற்போது இல்லை. அதிமுகவின் அடிப்படை வாக்கு வங்கியை ரவீந்திரநாத்குமாரும், தங்கதமிழ்ச் செல்வனும் பிரிக்கும்பட்சத்தில் இளங்கோவன் எளிதாக வெற்றிபெறலாம் என்று திமுக கூட்டணி கட்சியினர் கணக்குப் போட்டிருந்தனர். ஆனால், தற்போது தங்கதமிழ்செல்வனுடன் உள்ள எஸ்டிபிஐ கட்சியினர் தேனி தொகுதியில் உள்ள முஸ்லிம் வாக்காளர்களையும் தங்கள் வசம் ஈர்ப்பதால் அமமுகவின் வாக்கு வங்கி திமுகவையும் பாதிக்கும் நிலை உள்ளது.
தேனி தொகுதி பொறுப்பாளராக முகாமிட்டுள்ள அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், ஓபிஎஸ். மகன் ரவீந்திரநாத் குமாரை வெற்றி பெற வைக்காமல் திரும்ப மாட்டேன் என்று சபதம் ஏற்காத குறையாக தொகுதியில் வலம் வருகிறார்.
ரவீந்திரநாத் வெற்றிபெற்றால் மத்திய அமைச்சராவார், தேனி தொகுதி தேசிய அளவில் முக்கியத்துவம் பெறும், ஈவிகேஎஸ்.இளங்கோவன் தேர்தல் நாள் வரைதான் தேனியில் இருப்பார், பிறகு வாடகை வீட்டை காலி செய்துவிட்டுச் சென்றுவிடுவார் என பேசி வருகிறார். ஆனால், ஈவிகேஎஸ்.இளங்கோவன் தரப்பினர் கூட்டணி பலம், பிளவுபடும் அதிமுக வாங்கி வங்கியால் வெற்றி நிச்சயம் என்ற மிதப்பில் இருப்பதாகவும், மேலும் ஈவிகேஎஸ்.இளங்கோவன், தான் ஒரு தமிழகம் அறிந்த ‘தலைவர்’ என்ற கெத்துடன் வலம் வருவதால், எல்லா இடங்களுக்கும் பிரச்சாரம் செல்வதில்லை என்றும், மேலோட்டமாகவே பிரச்சாரம் செய்வதாகவும், காலையில் பிரச்சாரத்துக்கு வருவதே இல்லை என்றும் திமுக கூட்டணி கட்சி யினர் ஆதங்கப் படு கின்றனர்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியினர் வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘‘ஈவிகேஎஸ்.இளங் கோவன், மாலை நேர பிரச்சாரத்துக்கு மட்டும் செல்வதற்கு காரணம் ஒன்று வெயில், மற்றொன்று, தேனி தொகுதி கிராமங்களை அடிப்படையாக கொண்டது, பெரும் பாலானவர்கள் தினக்கூலி வேலைக்குச் செல்பவர்கள். அவர்கள் மாலை நேரத்தில்தான் வீட்டில் இருப்பர். அதனால், காலையில் நிர் வாகிகளைச் சந்தித்து ஆலோசனை செய்து மாலையில் பிரச்சாரம் செய்கிறார். உசிலம் பட்டி, சோழவந்தான் பகுதியில் மட்டும் 2 முறை பிரச்சாரத்துக்குச் சென்றுள்ளார். மோடி, ஓபிஎஸ் எதிர்ப்பு, விலைவாசி உயர்வு, கேபிள் டிவி, ஜிஎஸ்டி, பண மதிப்பு இழப்பு மற்றும் அந்தந்தப்பகுதி பிரச்சினைகளைப் பேசுகிறார். இளங்கோவனின் இயல்பான பேச்சு, தோரணையே அப்படித்தான். மற்றபடி அவரிடம் தலைக்கனம் இல்லை, என்றனர்.