Published : 10 Apr 2019 05:12 PM
Last Updated : 10 Apr 2019 05:12 PM

அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் கைது விவகாரம்: பொன் மாணிக்கவேல், டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முகமணி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் மனித உரிமை மீறல் குறித்து விளக்கம் அளிக்க சிலைக்கடத்தல் தடுப்பு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல், டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள சோமஸ்கந்தர் ஐம்பொன் சிலை சேதம் அடைந்ததையொட்டி புதிய சிலை செய்வதற்கு பொதுமக்களிடம் இருந்து நன்கொடை பெறப்பட்டது. இப்படி பெறப்பட்ட 8.7 கிலோ தங்கத்தில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக ஐ.ஜி.யாக இருந்த பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் ஏற்கெனவே 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அறநிலையத்துறை முன்னாள் ஆணையரான வீரசண்முகமணியை மார்ச் 15-ம் தேதி சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர்.

இந்த வழக்கில் இன்று ஜாமீன் கோரி வீரசண்முகமணி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் கடும் அதிருப்தி தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, விசாரணை நடத்தாமல் விளம்பரத்திற்காக கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு கண்டனம் தெரிவித்தார்.

மேலும், சந்தேகத்திற்கிடமானவர்களை அழைத்து விசாரிப்பதற்குப் பதிலாக, நேரடியாக கைது செய்து பத்திரிகை, ஊடகங்களில் வெளியிடுவதைப் பார்க்கும்போது, விளம்பரத்திற்காக செயல்படுவதுபோல் தோன்றுவதாக அதிருப்தி தெரிவித்தார்.

இனிவரும் காலங்களில் வழக்கமான நடைமுறையை பின்பற்றி விசாரணை நடத்தவும் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு அறிவுறுத்தினார். பலமுறை இதுபோன்ற சர்ச்சையில் சிக்கியுள்ள சிலைக்கடத்தல் தடுப்பு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு தற்போது மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தான் கைது செய்யப்பட்டதும், நடத்தப்பட்ட விதமும் மனித உரிமை மீறல் என மாநில மனித உரிமை ஆணையத்துக்கு முன்னாள் ஆணையர் வீரசண்முகமணி புகார் தெரிவித்திருந்தார்.

அவரது மனுவில், ''சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு தன்னை விசாரணைக்கு அழைத்த போது ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான என்னை, தொடர் குற்றச்செயல்களில் ஈடுப்பட்டவர்களைப் போல் இழுத்துச் சென்றனர். அதிகாலையில் பல்துலக்கக் கூட விடவில்லை. என்னை ஒரு தப்பி ஓடும் குற்றவாளிபோல் அவர்கள் நடத்தினர்.

உடல் நிலை சரியில்லை என தெரிவித்தபோதும் அதுகுறித்து காதில்கூட வாங்கிக்கொள்ளவில்லை. எனது குடும்பத்தாருக்கு குறைந்தபட்சம் எனது மனைவியிடம் தகவல் தெரிவித்துவிட்டுச் செல்லலாம் என்றபோதும் போலீஸார் அனுமதிக்கவில்லை. என்னை வலுக்கட்டாயமாக ஒரு ஆட்டோவில் திணித்து அழைத்துச் சென்றனர்.

ஒருவரைக் கைது செய்யும் முன் கடைபிடிக்கப்படும் அடிப்படை சட்ட விதிகளைக்கூட அவர்கள் கடைபிடிக்கவில்லை. எதற்காக கைது என்பதைக்கூட தெரிவிக்கவில்லை. பல குற்றச்செயலகளில் ஈடுபட்ட குற்றவாளி பிடிபட்டால் எப்படி நடந்துகொள்வார்களோ அதுபோன்று நடந்துகொண்டனர்.

பின்னர் ஒரு காவலர் தனது மனைவிக்கு போன் செய்து கிண்டியில் உள்ள சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு அழைத்துச் செல்வதாகத் தெரிவித்தார். ஆனால் என்னை கும்பகோணத்துக்கு அழைத்துச் சென்று மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி ரிமாண்ட் செய்தனர். என்னிடம் சிறு விசாரணை கூட நடத்தப்படவில்லை.

என் கைது குறித்து எனது குடும்பத்தாருக்குக்கூட தெரிவிக்க அனுமதிக்காத போலீஸார், திருச்சி மத்திய சிறையில் அடைக்கும்போதும், கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போதும் ஊடகங்களை அழைத்து என்னைக் குற்றவாளி போல் சித்தரித்து செய்தி கொடுத்தனர்.

அதன்பின்னர் 15 நாட்கள் காவலுக்குப் பின் உயர் நீதிமன்றப் பிணையில் நான் வெளியில் வந்தேன். சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் அடிப்படையில்  தன்னிடம் எந்த விளக்கத்தையும் கேட்காமல் மனித உரிமை மீறலில் ஈடுபட்டனர். அடிப்படையாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ள வழிகாட்டுதல்களைக்கூட சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர் தனது கைதின்போது பின்பற்றவில்லை'' என தெரிவித்துள்ளார்.

புகாரை ஏற்ற மனித உரிமை ஆணையம், ஓய்வுபெற்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரியைக் கைது செய்வதற்கான உச்ச நீதிமன்றம் வகுத்த நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா? என்பது குறித்தும் வீரசண்முகமணியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பது குறித்தும் 4 வாரத்தில் தமிழக டிஜிபியும், சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலும் பதிலளிக்க உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x