எஸ்.ஐ. தேர்வு வழக்கில் போலி அறிக்கை தாக்கல்; காவல் அதிகாரிகள் மீது உயர் நீதிமன்றம் கோபம்: விசாரித்து அறிக்கை அளிக்க கமிஷனருக்கு உத்தரவு

எஸ்.ஐ. தேர்வு வழக்கில் போலி அறிக்கை தாக்கல்; காவல் அதிகாரிகள் மீது உயர் நீதிமன்றம் கோபம்: விசாரித்து அறிக்கை அளிக்க கமிஷனருக்கு உத்தரவு
Updated on
3 min read

உயர் நீதிமன்றத்தில் போலி அறிக்கை அளித்த சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய அதிகாரிகளுக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தது. இது தொடர்பான விசாரணையில் சீருடைப் பணியாளர் ஆணைய அதிகாரிகளின் விளக்கத்தை நிராகரித்து அவர்கள் மீது விசாரணை நடத்த காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம், கடந்த 2018-ம் ஆண்டு கைவிரல் ரேகை பிரிவில் உதவி ஆய்வாளர் பணிக்கு நடத்திய தேர்வில் ஒரு கேள்விக்கு சரியான விடை எழுதிய தனக்கு மதிப்பெண் வழங்கவில்லை எனக்கூறி, இரண்டாம் நிலை காவலர் அருணாச்சலம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஐஐடி பேராசிரியர் மூர்த்தி என்பவர் மூலம் விடை சரிபார்க்கப்பட்டதில் அது தவறான விடை என பதிலளிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் சீருடைப் பணியாளர் தாக்கல் செய்த ஆவண அடிப்படையில் மனுதாரர் எழுதிய விடை தவறு எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், ஐஐடியில் மூர்த்தி என்ற பெயரில் எவரும் இல்லை எனவும், இந்த அறிக்கை போலி எனவும் கூறி அருணாச்சலம் தரப்பில் முறையிடப்பட்டது. இதனால் அதிர்ச்சி தெரிவித்த நீதிபதி, இதுசம்பந்தமாக விரிவான பதில் மனு தாக்கல் செய்ய சீருடைப் பணியாளர் தேர்வாணைய ஐஜி தாமரைக் கண்ணனுக்கு உத்தரவிட்டார்.

வழக்கில் மீண்டும் சீருடைப் பணியாளர் ஐஜி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல கேள்விகளுக்கு விடையில்லை என நீதிபதி அதிருப்தி அடைந்தார்.

பேராசிரியர் மூர்த்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மூர்த்தி, ஐஐடி பேராசிரியர் இல்லை. கேந்திர வித்யாலயா பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்றதாகவும், மூர்த்தியிடம், ஒரு கேள்விக்கு விடை கேட்டு வாட்ஸ் அப் மூலம் குமார் தொடர்பு கொண்டதால் பதில் அளித்ததாகவும் தெரிவித்தார்.

பின்னர் ஜி.வி.குமார், ஒரு நாள் தனது கட்சிக்காரர் மூர்த்தியை சீருடைப் பணியாளர் அலுவலகத்துக்கு வரச் சொல்லி சில வெற்றுக் காகிதங்களில் கையெழுத்து வாங்கி மூர்த்தியை ஒரு ஐஐடி பேராசிரியராக ஜோடித்து இந்த வழக்கில் சிக்க வைத்துள்ளார். தற்போது மூர்த்தியைக் கைது செய்யத் தேடுகின்றனர். அவர் மீதான எஃப்.ஐ.ஆர்.-ஐ ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.

ஐஜி தாமரைக் கண்ணனை ஏமாற்றிய விவகாரத்தில் ஆலோசகர் குமார் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் பதிலளித்தார். ஆலோசகர் ஒருவர் ஐ.ஜி-யை ஏமாற்றியுள்ளார் என்பது வெட்கக்கேடானது (shameful) என்று தெரிவித்து, போலி அறிக்கையைத் தாக்கல் செய்து நீதிமன்றத்தை ஏமாற்றியுள்ளதாகவும் கூறி, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ஐஜி மீது தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுப்பதாக உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் அரசு தாக்கல் செய்த அனைத்து ஆவணங்களும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்த நீதிபதி, ஆலோசகர் குமார் மோசடி செய்துள்ள நிலையில், விடை சரிபார்த்தார் என்பதற்காக மட்டும் மூர்த்தியைத் துன்புறுத்தும் நோக்கில் காவல்துறை செயல்பட்டால் நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது என்றும், கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்த நீதிபதி விசாரணையை 5-ம் தேதிக்கு (இன்று) தள்ளிவைத்தார்.

இந்நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவரான திரிபாதி வழக்கை கவனிப்பதற்காக ஆஜராகியிருந்தார். தேர்வாணையம் தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜரானார்.

விஜய் நாராயண், ''சென்னை பல்கலைக்கழக ஆலோசகராக இருந்த ஜி.வி.குமார் தான் தேர்வாணைய ஆலோசகராக உள்ளார். அவர் பரிந்துரையின் பேரிலேயே பேராசிரியர் மூர்த்தியை அறிக்கை அளிக்க நியமித்தோம். பல்கலைக்கழகத் தேர்வாணையம்  பரிந்துரைத்த 18 பேரை ஏற்க மறுத்தாலேயே மூர்த்தியிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

அவரது முகநூலில் கூட ஐஐடியில் பணி புரிவதாகத் தான் குறிப்பிட்டுள்ளார். இந்த மோசடி தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆலோசகர் ஜி.வி.குமார் கைது செய்யப்படுள்ளார்'' என்று தெரிவித்தார்.

ஜி.வி.குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ''தனி அறையில் வைத்து வெற்றுக் காகிதங்களில் கையெழுத்து பெற்று தனது கட்சிக்காரரை சென்னை காவல்துறை கைது செய்துள்ளது'' என குற்றம் சாட்டினார்.

அப்போது நீதிபதி சுப்ரமணியம், போலிச் சான்று மோசடி தொடர்பாக என்ன விசாரணை நடைபெற்றது என கேள்வி எழுப்பியதுடன், அரசு பணியாளர் தேர்வுகளில் வினாத்தாள் தயாரிப்பது தவிர மற்ற அனைத்து நடைமுறைகளிலும் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்றும், மோசடியில் ஈடுபட்டவர்கள் அனைவருக்கும் கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மேலும், அரசு அலுவலகங்கள், காவல்துறை ஆகியவற்றில் வேலை கிடைக்க வேண்டுமானால் இடைத்தரகர்களால் தான் முடியும் என்ற எண்ணம் மக்களிடம் நிலவுவதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கு மதியம் ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் மதியம் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு:

அரசு தாக்கல் செய்த போலி ஐஐடி பேராசிரியர் அறிக்கையை பெற்று அருணாச்சலம் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட உத்தரவு திரும்பப் பெறப்படுகிறது.

வழக்கு தொடரக் காரணமாக இருந்த கேள்வியே தவறு என அரசு தலைமை வழக்கறிஞர் கூறியுள்ளார். எனவே அதற்கான மதிப்பெண் 2 ஆயிரத்து 388 தேர்வர்களுக்கும் வழங்க வேண்டும். அதன் பின்னர் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த வேண்டும்.

அறிக்கை பெறும் பணி குமாருக்கு ஒதுக்கப்பட்டது குறித்தும், மூர்த்தியிடம் அறிக்கை பெற்றதற்கோ தேர்வாணையத் தலைவருக்கோ தொடர்பு இல்லை என்றும், அதனால் நீதிமன்ற அவமதிப்புக்கு உட்படமாட்டார் என்றும் அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால், இந்த விவகாரங்கள் வெளிச்சத்துக்கு வந்த பிறகு அதுகுறித்து கண்டுகொள்ளாமல் அவர் இருக்க முடியாது. இந்த மோசடி அறிக்கைக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமை தலைவர் என்ற முறையில் அவருக்கு உள்ளது. இதில் தேர்வாணைய அதிகாரிகள், புரோக்கர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவல்துறை அதிகாரிகள் அல்லது தேர்வாணையத்தில் பணியில் உள்ளவர்கள் உதவி இல்லாமல் உறுப்பினர் செயலர் பொறுப்பில் இருக்கும் ஐ.ஜி. அந்தஸ்தில் உள்ள ஒருவரின் அலுவலகத்துக்கு யாரும் நுழைய முடியாது என்பதை மறுக்க முடியாது.

இப்படி இருக்கும் நிலையில், தேர்வெழுதியவர்களின் விடைத்தாள்கள் மாற்றப்பட்டிருக்காது என்பதற்கான என்ன உத்தரவாதம் உள்ளது. அருணாச்சலம் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ச உத்தரவை திரும்பப் பெறுகிறேன். ஆனால் நீதிமன்றத்தை ஏமாற்றிய விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தெரிவிக்கும் வரை தேர்வாணையத் தலைவர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை கைவிட முடியாது.

வேண்டுமென்றால் தலைவருக்குப் பதிலாக உறுப்பினர் செயலர் மீதான வழக்காக மாற்றிக் கொள்ளலாம். ஆனால் எதிர்காலங்களில் முறைகேடு நடைபெறாது என்பதை தேர்வாணையத் தலைவர் உறுதிப்படுத்த வேண்டும். போலி அறிக்கை முறைகேடு குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் விசாரணை செய்து ஏப்ரல் 22-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

அப்படி விசாரணை செய்யும்போது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தில் இருப்பவர்களையும் விசாரிக்க வேண்டும். சென்னை மாநகர காவல் ஆணையர் மீது முழு நம்பிக்கை உள்ளது. முறையாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்வார் என நம்புகிறது.

விடை குறித்த அறிக்கை அளித்த பேராசிரியர் மூர்த்தி காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும், விசாரணைக்கு அழைக்கும்போதெல்லாம் செல்வதாகவும் கூறுவதால் அவரைக் கைது செய்யக்கூடாது. ( வாய்மொழி உத்தரவு மட்டுமே)

இந்த விவகாரத்தில் கைதான ஆலோசகர் குமார், காவல்துறை தன்னை துன்புறுத்தக் கூடாது என்றும், ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையில் தன்னிச்சையான விசாரணை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பின்னர் பரிசீலிக்கப்படும் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in