Published : 06 Sep 2014 09:03 AM
Last Updated : 06 Sep 2014 09:03 AM

தமிழக நெடுஞ்சாலைத் துறையில் மெகா மோசடி?- ஊழல் நடந்திருப்பதாக ஒப்பந்ததாரர் பரபரப்பு புகார்

தமிழக நெடுஞ்சாலைத்துறை சார்பில் தகவல் பலகைகள் அமைத்ததாக ஏமாற்றி பல கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழக நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளில் எச்சரிக்கை பலகைகள், பெயர்ப் பலகைகள் ஆகியவற்றை அமைத் ததாகவும், சாலையோர தடுப்பு, சாலைகளுக்கு மத்தியில் அமைந் துள்ள தடுப்பு ஆகியவற்றை அமைத்ததாகவும் மோசடி செய்து சுமார் 3 கோடி ரூபாய் ஊழல், கையாடல் செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் மீது புகார் எழுந்துள்ளது.

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் கணேசன் என்பவர்தான் இந்த புகாரை எழுப்பியுள்ளார்.

மேலும், இந்தப் புகாரை கடந்த ஜனவரி மாதம் தமிழக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் முதன்மைச் செயலர் பார்வைக்கு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறினார்.

இதுபற்றி கணேசன் கூறியதாவது:

சென்னை கத்திபாரா, கோயம்பேடு, பாடி, ஏர்போர்ட், சப் வேஸ் ஆகிய பகுதிகளில் சாலைகளை அமைத்தல், பெயர்ப் பலகை மற்றும் எச்சரிக்கை பலகைகளை அமைத்தல் ஆகிய பணிகளை ‘நஹாய்’ என்று அழைக்கப்படும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மேற்கொண்டது. 2012-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி அனைத்து பணிகளையும் முடித்து மாநில நெடுஞ்சாலைத் துறை வசம் ஒப்படைத்தது.

ஓராண்டு நிறைவடையாத நிலையில் பாடி, கத்திபாரா, கோயம்பேடு ஆகிய பகுதிகளில் சாலையோர தடுப்பு, சாலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள தடுப்பு ஆகியவற்றை அமைத்ததாக சுமார் 3 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. ‘நஹாய்’ ஒப்படைத்த சாலைக்கும், அதில் நிறுவப்பட்ட பொருட்களுக்கும் பல ஆண்டுகள் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பணியின் தரத்தால் பாதிப்பு ஏற்படுமாயின் அதை ‘நஹாய்’ நிர்வாகம் நிவர்த்தி செய்து தர வேண்டும். ஆனால், சம்பந்தமில்லாமல் ஒரு டெண்டர் விடப்பட்டு சுமார் 3 கோடி ரூபாய் வீணாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அந்தப் பணிகள் மேற்கொள்ளப்படாமலே இந்த பணம் எங்கேயோ சென்றிருக்கிறது. மேலும், டெண்டர் நடத்தியதிலும் மோசடி செய்யப்பட்டுள்ளது. அதாவது, கோயம்பேடு, கத்திபாரா, பாடி ஆகிய மூன்று இடங்களில் பணிகளுக்கான டெண்டர் அறிவிப்பு 2013-ம் ஆண்டு ஏப்ரல் 22, 23 மற்றும் 25 ஆகிய தேதிகளில் வெளியாகியுள்ளது. இந்தப் பணிகளின் டெண்டருக்கு விண்ணப்பிக்க இறுதி தேதி நாள் 2013 ஜூன் 14 ஆகும். டெண்டர் அறிவிப்பு வெளியான அன்றைய தினமே இந்த பணிகளின் டெண்டர் கோரும் விண்ணப்பங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் இறுதி தேதிக்கு முந்தைய நாளான 13.06.2013 அன்றுதான் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இதை தேசிய தகவல் மையம் மூலம் பெறப்பட்ட கடிதம் உறுதி செய்கிறது.

குறிப்பிட்ட சிலரைக் கடந்து டெண்டர் விவரம் மற்றும் விவகாரம் வெளியே சென்றுவிடக் கூடாது என்பதற்காக இந்த செயல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், இந்த பணிகளுக்காக 2013-ம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதியிட்டு ஒரே நாளில் 6-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கையெழுத்திட்டு டெண்டர் அறிவிப்புக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தமிழக நெடுஞ்சாலைத் துறையில் நடந்துள்ள ஊழலுக்கான ஒரு சான்றுதான் இது.

இதுபோன்று தமிழகம் முழுக்க ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் மிகப்பெரும் ஊழல் நடந்திருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. நடுநிலையான குழுவை அமைத்து இந்த விவகாரத்தை விசாரித்தால் அதிகாரிகள் சிலர் செய்த மொத்த ஊழலும் வெளிவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பாடி, கத்திப்பாரா, கோயம்பேடு ஆகிய பகுதிகளை நிர்வகிக்கும், சென்னை மண்டல மாநில நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவின் கண்காணிப்பு பொறியாளர் முத்துசாமியிடம் இதுபற்றி கேட்டபோது, ‘இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. உயர் அதிகாரிகளிடம் பேசுங்கள்’ என்று தொடர்ந்து பேச மறுத்துவிட்டார்.

நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் இடைப்பாடி பழனிச்சாமியிடம் இதுபற்றி பேச முயன்றும் அவரது உதவியாளர் கிரிதரனிடம்தான் பேச முடிந்தது. அவர், ‘தனது நோக்கம் நிறைவேறவில்லை என்ற கோபத்தில் சிலர் இதுபோன்ற பொய்ப் புகார்களை கிளப்பலாம். தனது துறை நடவடிக்கைகள் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதில் அமைச்சர் கவனமாக உள்ளார். கண்டிப்பாக அந்த குற்றச்சாட்டில் உண்மையிருக்கவும், ஊழல் நடந்திருக்கவும் வாய்ப்பில்லை. ஒருவேளை குற்றச்சாட்டு நிரூபணமானால் கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x