

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஓசூர் தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவி ஜோதி போட்டியிடுகிறார்.
இத்தொகுதியின் எம்.எல்.ஏவாகவும், அமைச்சராகவும் இருந்தவர் பாலகிருஷ்ணரெட்டி. கடந்த 1998-ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் வாகனங்கள் மற்றும் பொது சொத்துகள் சேதப்படுத்திய வழக்கில் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனை தற்போது உச்ச நீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,காலியாக உள்ள ஓசூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. பாலகிருஷ்ண ரெட்டி போட்டியிட முடியாது என்பதால் ஓசூர் தொகுதியில் அவருடைய மனைவி ஜோதி போட்டியிடுகிறார். ஜோதிக்கு ஆதரவாக பாலகிருஷ்ண ரெட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இங்கு அமமுக வேட்பாளராக போட்டியிடுபவர் புகழேந்தி. இவர் சார்பில் அவசர வழக்கு ஒன்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பாலகிருஷ்ண ரெட்டி மனைவிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கக் கோரப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு அவசர வழக்காக நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனைவிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யும் பாலகிருஷ்ண ரெட்டி தன்னை வேட்பாளர் போல காட்டிக் கொள்வதாகவும், இதன் காரணமாக வேட்பாளர் யார் என்பதில் மக்களிடையே குழப்பம் ஏற்படுவதாகவும் மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
மேலும், பாலகிருஷ்ண ரெட்டி தனது மனைவியுடன் பிரச்சாரம் மேற்கொண்ட புகைப்பட ஆதாரங்களும் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் மனைவியுடன் கணவர் இருப்பது எந்த வகையில் குற்றமாகும்? என கேள்வி எழுப்பினர். பின்னர் வழக்கின் தீர்ப்பை நாளை ஒத்திவைத்தனர்.