அதிமுக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிக்கு லோக் ஆயுக்தா அமைப்பில் பதவி: உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

அதிமுக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிக்கு லோக் ஆயுக்தா அமைப்பில் பதவி: உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

Published on

தமிழ்நாடு லோக் ஆயுக்தாவுக்கு கோவை மாவட்ட அதிமுக வழக்கறிஞர் அணி செயலர் உட்பட இருவர், நீதித்துறை சாரா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டதற்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.

கரூர் வெங்கமேடு பதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.ராஜேந்திரன்,உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

"இந்தியாவில் பிரதமர், முதல்வர், அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், உயர் அதிகாரிகள் தங்களின் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், ஊழல் செய்தல் ஆகியவற்றை விசாரிக்க லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டங்கள் கடந்த 2013-ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அப்போது ஒவ்வொரு மாநில அரசுகளும் லோக் ஆயுக்தா சட்டத்தை அமல்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

இருப்பினும் தமிழகம் உள்பட சில மாநிலங்களில் நீண்ட காலமாக லோக் ஆயுக்தா அமைப்பு அமைக்கப்படவில்லை. இதையடுத்து லோக் ஆயுக்தா அமைப்பு ஏற்படுத்தாத மாநிலங்கள் விரைவில் லோக் ஆயுக்தாவை அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கெடு விதித்தது. இதையடுத்து தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்த அமைப்பின் தலைவராக உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பி.தேவதாஸ், நீதித்துறை சார்ந்த உறுப்பினர்களாக, மாவட்ட நீதிபதிகளாக இருந்து ஓய்வு பெற்ற கே.ஜெயபாலன், ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும், நீதித்துறை சாரா உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.ராஜாராம், வழக்கறிஞர் கே.ஆறுமுகம் ஆகியோர் ஏப். 1-ல் நியமனம் செய்யப்பட்டனர்.

லோக் ஆயுக்தா தலைவர், உறுப்பினர்களாக 25 ஆண்டுகள் லஞ்ச ஒழிப்பு, பொது நிர்வாகம் மற்றும் கண்காணிப்பு சட்டத்தில் அனுபவம் உள்ளவர்களையே நியமனம் செய்ய வேண்டும். அதேநேரத்தில் லோக் ஆயுக்தா சட்டம் பிரிவு 3 (4)-ல் எந்த ஒரு அரசியல் கட்சிகளுடன் தொடர்பு இருப்பவர்கள், ஆதாயம் தரும் பதவியில் இருப்பவர்களை உறுப்பினர்களாக நியமனம் செய்யக்கூடாது என கூறப்பட்டுள்ளது. லோக் ஆயுக்தாவில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது என்பதற்காக இந்த விதி கொண்டு வரப்பட்டுள்ளது.

தற்போது நீதித்துறை சாரா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் கே.ஆறுமுகம், கோவை மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலராகவும், தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள அதிமுகவில் உறுப்பினராகவும் உள்ளார். அரசியல் தொடர்புள்ளவர்களை லோக் ஆயுக்தா உறுப்பினராக நியமிக்கக்கூடாது என சட்டம் உள்ளபோது இவரது நியமனம் விதிமீறலாகும்.

மற்றொரு நீதித்துறை சாரா உறுப்பினராக ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் எம்.ராஜாராம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினராக பணிபுரிந்தவர். அரசியலமைப்பு சட்டப்பிரிவு 319-ல் மத்திய, மாநில அரசு பணியாளர் தேர்வாணையத்தில் பொறுப்பு வகித்தவர்களை வேறு அமைப்புகளின் உறுப்பினர்களாக நியமிக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இதனால் இவரது நியமனமும் விதிமீறாகும்.

முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க அமைக்கப்பட்ட லோக் ஆயுக்தா அமைப்பின் உறுப்பினர்களாக அரசியல் தொடர்புடையர்களை உறுப்பினர்களாக நியமிக்கும் போது அந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டதற்கான நோக்கத்தை நிறைவேற்றாது.

இதனால் லோக் ஆயுக்தா நீதித்துறை சாரா உறுப்பினர்கள் நியமனம் தொடர்பான அரசாணைக்கு தடை விதித்து, அரசியல் தொடர்பு இல்லாதவர்களை நீதித்துறை சாரா உறுப்பினர்களாக நியமிக்க உத்தரவிட வேண்டும்".

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது. பின்னர் லோக் ஆயுக்தா நீதித்துறை சாரா உறுப்பினர்கள் நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in