

திமுகவின் முக்கிய பெண் பிரமுகர் ஒருவர் அதிருப்தியில் உள்ளதாகவும், விரைவில் வேறு கட்சியில் இணைய உள்ளதாகவும் திமுக வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.
கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் முக்கிய பெண் அமைச்சராகவும், திமுக முன்னாள் துணைப் பொதுச்செயலாளருமான எஸ்.பி.சற்குணபாண்டியனின் மருமகள்தான் சிம்லா முத்துச்சோழன். வடசென்னையில் ஆர் கே நகர் தொகுதியில் பலமுறை அதிமுகவை தோற்கடித்தவர் மாமியார் சற்குணப்பாண்டியன்.
அவர் உடல் நலக்குறைவால் மரணமடைய அவரது இடத்தில் அவரது மருமகள் சிம்லா முத்து சோழனை 2016 பொதுத்தேர்தலில் ஜெயலலிதா ஆர் கே நகரில் போட்டியிட்டபோது அவரை எதிர்த்து நட்சத்திர வேட்பாளராக போட்டியிட்டார் சிம்லா முத்து சோழன்.
30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதாவிடம் சிம்லா முத்து சோழன் தோற்றுப் போனாலும் முந்தைய ரெக்கார்டை ஜெயலலிதாவால் முறியடிக்க முடியவில்லை குறுகிய காலத்தில் ஆர்கே நகரில் சிம்லா முத்துச்சோழன் பிரபலமானார்.
அவர் கனிமொழியின் ஆதரவாளர் பட்டியலில் இருந்ததாக திமுகவில் கூறுவார்கள்.
பின்னர் சமீபகாலமாக ஸ்டாலின் தலைமையின் கீழ் அவரது ஆதரவாளராக மாறியதாகவும் திமுக வட்டாரத்தில் பேச்சு உண்டு.
இதனிடையே ஜெயலலிதா மரணத்துக்குப் பின் நடந்த ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தனக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என சிம்லா முத்து சோழன் முயற்சிக்க இம்முறை மருது கணேஷுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
பின்னர் அந்த தேர்தலும் தள்ளிவைக்கப்பட்டு இரண்டாம் முறையாக ஆர்கே நகர் இடைத்தேர்தல் நடந்த பொழுது மீண்டும் மருது கணேஷுக்கே வாய்ப்பளிக்கப்பட்டது.
இதில் திமுக வழக்கமான வாக்கையும் இழந்து படுதோல்வியை சந்தித்தது. டிடிவி தினகரன் வெற்றி பெற்றார்.
தனக்கான வாய்ப்பு கிடைக்கும் என்று சிம்லா முத்து சோழன் பொறுமை காத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் வட சென்னையில் சிம்லா முத்துச்சோழன் விருப்ப மனு அளித்திருந்தார்.
தனக்கு கண்டிப்பாக வடசென்னையில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் நினைத்திருந்தார்.
இந்நிலையில் வட சென்னையில் ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதியை திமுக வேட்பாளராக அறிவித்தது. இது சிம்லா முத்துச்சோழனுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்தது.
மறுபுறம் தனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் தேர்தல் பொறுப்பாளர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அதுவும் மருது கணேஷுக்கு ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் வேட்பாளரும் மரியாதைக்குக்கூட வந்து பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது. விரக்தி அடைந்த சிம்லா முத்துச்சோழன் திமுகவில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒருவேளை தலைமை கண்டுக்கொள்ளாதபட்சத்தில் வெளியேறி மாற்றுக்கட்சியில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நேரத்தில் வழக்கமாக திமுகவுக்குத்தான் மற்ற கட்சியினர் தற்போது வந்து கொண்டிருக்கின்றனர்.
ஆனால் திமுகவின் பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த, ஜெயலலிதாவை எதிர்த்து நின்ற பெண் பிரமுகர் திமுகவில் இருந்து விலகுவது சற்று வித்தியாசமாகத்தான் பார்க்கப்படுகிறது.