வேலைக்காரரின் வீட்டு உணவை சாப்பிட்டதால் ஆத்திரம்: வாக்குவாதத்தில் தந்தையை குத்திக்கொன்ற மகன்

வேலைக்காரரின் வீட்டு உணவை சாப்பிட்டதால் ஆத்திரம்: வாக்குவாதத்தில் தந்தையை குத்திக்கொன்ற மகன்
Updated on
2 min read

சென்னை ஜெஜெநகரில் பழமண்டி வைத்திருக்கும் தந்தை வேலைக்காரர் வீட்டிலிருந்து கொண்டுவந்த உணவை சாப்பிட்டதால் கோபமடைந்த மகன் தந்தையுடன் வாக்குவாதம் செய்து குத்தி கொலை செய்தார்.

சென்னை, பாடி, மதுரை வீரன் தெருவில் வசித்தவர் தமிழ்செல்வன்,(56) இவர் வீட்டின் கீழ் தளத்தில் சொந்தமாக வாழைப்பழ மண்டி வைத்து வியாபாரம் செய்து வந்தார். இதுதவிர தள்ளுவண்டியில் வியாபாரம் செய்ய ஆட்களை வேலைக்கு வைத்து தினமும் அவர்கள் பழ வியாபாரம் செய்து வந்தனர். இதில் பழம் விற்பனையைப் பொருத்து தள்ளுவண்டி பணியாளர்களுக்கு சம்பளம் போன்று கொடுத்துவிடுவார்.

தமிழ்ச் செல்வன் சாதாரண நிலையிலிருந்து உயர்ந்ததால் எளிமையாக இருப்பார். முதலாளி வேலைக்காரன் என்கிற கௌரவம் பார்க்கமாட்டார். தன்னிடம் வேலை செய்யும் ஆட்களிடம் நெருங்கி பழகுவார். இது அவரது இளைய மகன் சூரியபிரகாஷுக்கு கௌரவக்குறைச்சலாக இருந்துள்ளது.

நேற்று வழக்கம்போல் பழமண்டியில் இருந்த தமிழ்ச்செல்வன் தன்னிடம் தள்ளுவண்டி வியாபாரம் செய்யும் வேலைக்காரர் ஒருவர் வீட்டிலிருந்து கொண்டுவந்த உணவை வாங்கி சாப்பிட்டுள்ளார். இதை சூரியபிரகாஷ் பார்த்துவிட்டார். கடுமையான ஆத்திரமடைந்த அவர் வேலைக்காரர்கள் எதிரிலேயே தந்தையை திட்டியுள்ளார்.

பதிலுக்கு தந்தையும் மகனை திட்டியுள்ளார். வாக்குவாதம் வலுத்துள்ளது. அக்கம் பக்கத்தினர் சமாதானம் செய்து அனுப்பியுள்ளனர். கடையை மூடிவிட்டு மேலே வீட்டுக்கு சென்றுள்ளனர் இருவரும். அங்கு சாப்பிட்டப்பின் மீண்டும் மகன் சூர்ய பிரகாஷுக்கும் தந்தை தமிழ் செல்வனுக்கும் அதே பிரச்சினையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியநிலையில் கடும் ஆத்திரத்தில் இருந்த இளையமகன்  சூர்யபிரகாஷ் (27) ஆத்திரத்தில் வாழைப்பழம் வெட்டும் கத்தியை எடுத்து தந்தை தமிழ்செல்வனின் மார்பில் குத்தியுள்ளார்.

இதில் குத்து நேராக இதயத்தில் பாய தந்தை சம்பவ இடத்திலேயே விழுந்து உயிரிழந்தார். சூரியபிரகாஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சத்தம் கேட்டு வீட்டிலிருந்தவர்கள் வந்துப்பார்த்தபோது தமிழ்ச்செல்வன் பிணமாக கிடப்பதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து வந்த போலீஸார் தமிழ்செல்வனின் உடலைக்  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடும்பத்தாரின் வாக்குமூலத்தைப் பெற்று கொலை வழக்குப் பதிவு செய்தனர்.

தலைமறைவாக இருந்த சூரியபிரகாஷை இன்று அதிகாலையில் போலீஸார் கைது செய்தனர். விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட சூரியபிரகாஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆத்திரத்தால் பெற்ற தந்தையையே மகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது மகன் மற்றும் தந்தையை கொன்ற மகன்

இதேப்போன்று இன்னொரு மகனும் தந்தையை கொலை செய்துள்ளார். மகனை கொலை செய்து சிறைக்குச் சென்றவர் ஜாமீனில் எடுத்த தந்தையையும் கொலை செய்து சிறைக்குச் சென்றார்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை அடுத்த காம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தனபால். சொந்தமாக பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் கார்த்திகேயன், இவருக்கு திருமணமாகி 3 மாதத்தில் கைக்குழந்தை உள்ளது.

மனைவியை சந்தேகப்பட்டு அடித்து உதைத்த கார்த்திகேயன் ஒரு கட்டத்தில் சந்தேகத்தால் தனது 3 மாத ஆண் குழந்தையை கொலை செய்தார். போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கடந்த ஜனவரி மாதம், மகன் சிறையிலடைக்கப்பட்ட நிலையில் தந்தை தனபால் முயற்சி எடுத்து வழக்கறிஞர்களை வைத்து ஜாமீனில் எடுத்தார். கடந்த வாரம் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியில் வந்தார் கார்த்திகேயன்.

இந்நிலையில் வழக்கம்போல் பெட்டிக்கடை வியாபாரத்தை முடித்த தனபால் பெட்டிக்கடையை மூடிவிட்டு, கடை வாசலில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மகன் கார்த்திகேயன் தான் கொண்டுவந்த கோடாரியால் தூங்கிக்கொண்டிருந்த தந்தை தனபாலின் தலையை துண்டித்து கொலை செய்தார்.

பின்னர் கோடாரியுடன் போலீஸாரிடம் சரணடைந்தார். கொலைக்கான காரணம் தெரியாத நிலையில், சரணடைந்த கார்த்திகேயனிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மூன்று மாத கைக்குழந்தையான தனது மகனைக்கொன்ற கார்த்திகேயன் கஷ்டப்பட்டு ஜாமீனில் எடுத்த தந்தையையும் வெட்டிக்கொலை செய்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in