எந்த சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் இல்லை: தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி

எந்த சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் இல்லை: தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி
Updated on
1 min read

தமிழகத்தில் வாக்குப்பதிவில் எவ்விதப் பிரச்சினையும் இல்லை. அமைதியாக வாக்குப்பதிவு நடந்து வருவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.

செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

''சட்டம் ஒழுங்கு பிரச்சினை எதுவும் இல்லை. அதிகபட்சமாக பெரிய அளவிலான பிரச்சினைகள் குறித்த தகவல் எதுவும் இல்லை. ஆம்பூரில் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது குறித்து போலீஸ் தடியடி நடந்தது.

அனைத்து விஷயங்களும்  வாக்குச்சாவடிக்கு வெளியே நடந்துள்ளது. மாலையில் அதிகபட்ச பாதுகாப்பு வழங்க வேண்டும் என அதிமுக, திமுக என இருதரப்பும் கேட்டுள்ளனர். தேர்தல் டிஜிபியிடம் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்.

ஏதாவது மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக மாவட்ட எஸ்.பி.யுடன் தொடர்புகொள்ளும் ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.

பெயர் விடுபட்டவர்கள் இப்போது வாக்களிக்க முடியாது. கடந்த 6 மாதமாக வாக்காளர் பட்டியல் பல தடவை வெளியிட்டு உங்கள் பெயர் உள்ளதா? என சோதிக்கச் சொல்லி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்துள்ளோம்.

தேர்தல் வாக்குப்பதிவு கடைசி வாக்காளர் உள்ளவரை நடக்கும். 6 மணிக்குப் பின் நிற்கும் வாக்காளர்கள் அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு நடக்கும். 6 மணிக்கு மேல் எத்தனைபேர் இருந்தாலும் டோக்கன் வழங்கப்படும். அடுத்த நிலவரம் 7.30 மணிக்கு வழங்கப்படும்''.

இவ்வாறு சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in