

அதிமுக, பாஜகவைத் தோற்கடிப்போம் என 8 வழிச்சாலையை எதிர்க்கும் விவசாயிகள் சேலத்தில் சூளுரை மேற்கொண்டனர். அத்துடன் விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களையும் வீடுவீடாகச் சென்று விநியோகிக்கத் தொடங்கியுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் பசுமை வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், சேலம் அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த ராமலிங்கபுரத்தில் ''பசுமை வழிச்சாலைத் திட்டத்தை ரத்து செய்யும் வேட்பாளருக்கு மக்களவைத் தேர்தலில் வாக்களிப்போம்'' என்று வலியுறுத்தும் துண்டுப் பிரசுரங்களை வீடு வீடாகச் சென்று விநியோகித்து, இன்று பிரச்சாரத்தைத் தொடங்கினர்.
'சேலம் மாவட்ட உழவர் உற்பத்தியாளர் பேரியக்கம்' என்ற பெயரில் அதன் தலைவர் கந்தசாமி, செயலாளர் நாராயணன், பொருளாளர் சிவகாமி, ஒருங்கிணைப்பாளர் லதா உள்பட சுமார் 20 பேர், ராமலிங்கபுரத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வீடுகள், கடைகள் உள்ளிட்ட இடங்களுக்கு மக்களைச் சந்தித்து, துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து பிரச்சாரம் மேற்கொண்டனர்.
'ஜனநாயகத்தைக் காக்க அனைவரும் வாக்களிப்போம்' என குறிப்பிட்டு விநியோகிக்கப்பட்டு வரும் அந்த துண்டுப் பிரசுரத்தில், ''விவசாயத்தையும், விவசாயிகளையும், கடல், வனம் போன்ற இயற்கை வளங்களையும், சுற்றுச்சூழலையும் அழித்து, கார்ப்பரேட் சூறையாடலுக்கு திட்டமிடும் பாஜக, அதற்கு துணை போகும் அதிமுக கட்சிகளைத் தோற்கடிப்போம்.
8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்து, சேலம், தருமபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்ட விவசாய நிலங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவித்து சட்டம் இயற்ற முன்வரும் வேட்பாளர்களுக்கு வாக்களிப்போம்.
8 வழிச்சாலை அறிவிப்பால் ஓராண்டாக, மனமுடைந்து, மன உளைச்சலுக்கு ஆளாகி, மண்ணையும், தண்ணீரையும், இயற்கையையும், வாழ்க்கையையும் பாதுகாக்கப் போராடிய 250-க்கும் மேற்பட்டவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெற உறுதியளிக்கும் வேட்பாளர்களுக்கு வாக்களிப்போம்.
சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள் மீதான சூறையாடலுக்கு எதிராக, ஏழை விவசாயிகள், கிராமப்புற வறியவர்களின் ஒன்றுபட்ட போராட்டத்தை வலுப்படுத்துவோம். இதற்கு ஆதரவானவர்களுக்கு வாக்களிப்போம்'' என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.