இந்தியாவையே ஏலம் விடவேண்டியதுதானே?- சீமான் காட்டம்

இந்தியாவையே ஏலம் விடவேண்டியதுதானே?- சீமான் காட்டம்
Updated on
1 min read

இந்தியாவையே ஏலம் விடவேண்டியதுதானே, அம்பானியும் அதானியும் ஆளட்டும் என்று சீமான் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கரும்பு விவசாயி சின்னம் தெளிவாக இல்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டிய நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

''நாங்கள் கூட்டம் நடத்தம் இடம் கேட்டால், எந்த சந்தில் ஆட்கள் வரமாட்டோர்களோ அங்கே நடத்திக்கொள்ளுங்கள் என்பார்கள். அதையும் மீறிதான் நாங்கள் மேலெழுந்து வருகிறோம்.

எங்களின் வளர்ச்சியைத் தடுக்க வாக்களிக்கும் இயந்திரத்தில் கரும்பு விவசாயி சின்னத்தை மங்கலாக்குகின்றனர். இது திட்டமிட்ட மறைப்பு. தேர்தல் ஆணையமே ஒரு நாடகக் கம்பெனிதான்.

சோதனை என்ற பெயரில் வணிகர்கள் துன்புறுத்தப்படுகின்றனர். பணப்பட்டுவாடா என்று கூறி தேர்தலை ரத்து செய்யும்போது அதைத் தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காதது ஏன்? துரைமுருகன் வீட்டில் மட்டுமே சோதனை நடத்தியது ஏன்? மற்ற தலைவர்கள் வீட்டில் பணம் இல்லையா? ஏன் மற்ற இடங்களில் நடவடிக்கை எடுக்கவில்லை?

வாக்குக்குப் பணம் கொடுப்பது குற்றம்; ஓராண்டு சிறைத் தண்டனை என்கிறீர்களே, இதுவரை சிறைக்குச் சென்றவர்கள் எத்தனை பேர்? தேர்தலுக்கு காசு கொடுக்கும் வேட்பாளருக்கு 10 ஆண்டுகள் தேர்தலில் நிற்கத் தடை என்று அறிவிக்கலாமே!

கல்வி, மருத்துவம், குடிநீர் விநியோகம், போக்குவரத்து அனைத்தையுமே தனியார்தான் சிறப்பாக நடத்துவார்கள் என்று என் அரசு நம்பினால், தேர்தல் எதற்கு? இந்தியாவையே ஏலத்துக்கு விடவேண்டியதுதானே..

அதானி ஓர் ஐந்து ஆண்டுகள் ஆளட்டும். அம்பானி ஆளட்டும், ஏன் வரிசையில் நின்று ஓட்டு அளிக்க வேண்டும்? வேட்பாளர்கள் வெற்றியைப் பெறுகிறார்களா, வாங்குகிறார்களா?

என் நாட்டில் இருக்கும் வளங்களையெல்லாம் ஏற்றுமதி செய்துவிட்டு, வெங்காயம், பருப்பை இறக்குமதி செய்கிறார்கள். இதனால் வாக்காளர்களுக்கு ஜனநாயகத்தின் மீது வெறுப்புதான் வரும். அந்தச் சிந்தனை வரவிடாமல் மயக்க, சாதி, மத உணர்வைத் தூண்டுவது, மதுவை ஊற்றிக் கொடுப்பது, திரைக் கவர்ச்சியில் மயக்கிப் போடுவது என  இளைஞர்களைச் சிந்திக்கவே முடியாமல் செய்கிறார்கள்'' என்றார் சீமான்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in