

சென்னை ஜாபர்கான்பேட்டையில் மனைவியை துண்டு துண்டாக வெட்டிய கணவர் உடலை குப்பைத்தொட்டியில் வீசிய சம்பவத்தில் மனைவி சந்தியாவின் தலை கிடைக்காத நிலையில் சவகிடங்கிலிருந்து 5 மாதத்துக்குப்பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சென்னை பள்ளிகரனை குப்பை கிடங்கில் ஜனவரி மாதம் 21- ம் தேதி பெண்ணின் கை, கால்கள் வெட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இது சென்னையில் பரபரப்பாக பேசப்பட்டது. உடல் பாகங்கள் கிடைக்காத நிலையில் போலீஸாரின் தீவிர விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண் யார் என கண்டு பிடித்தனர்.
பெண்ணின் கையிலிருந்த டாட்டூ மூலமாக துப்பு துலங்கியது. பின்னர் அதன்மூலம் அந்தப்பெண் சந்தியா என்கிற துணை நடிகை என்பதும், தூத்துக்குடியில் வசிப்பவர் என்பதும், கணவர் பாலகிருஷ்ணன் சினிமா இயக்குனாராக பணியாற்றுவதும் தெரியவந்தது.
முதலில் மனைவி எங்கே போனார் என தெரியாது என மறுத்த கணவர் பின்னர் தான் மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மனைவியின் நடத்தை சரியில்லாததால் ஒதுங்கியதாகவும், இதனால் பிரச்சினை ஏற்பட்டு பிரிந்து வாழும் நிலையில் பொங்கலுக்காக வீட்டுக்கு அழைத்து பின்னர் கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி உடல் பாகங்களை பல இடங்களில் வீசியதாக தெரிவித்தார்.
பின்னர் அவரது இடுப்பு உள்ளிட்ட மற்ற பாகங்கள் கிடைத்தது. ஆனால் தலை மட்டும் கிடைக்கவே இல்லை. கணவர் சிறைக்கு அனுப்பப்பட்டார். சந்தியாவின் தலையில்லா உடல் பாகங்கள் பிரேத பரிசோதனைக்குப்பின் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 5 மாதங்களுக்குப்பின் சந்தியாவின் தலையில்லா உடல் மூட்டையாக கட்டப்பட்டு இன்று மாலை சந்தியாவின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை பெற மருத்துவமனைக்கு வந்த சந்தியாவின் தாயார் பிரசன்ன குமாரி, தனது மகளை கொடூரமாக கொலை செய்த பாலகிருஷ்ணனுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும், தன்னுடைய இரண்டு பேரப்பிள்ளைகளையும் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
கொலை செய்த பாலகிருஷ்ணனை போலீசார் மீண்டும் காவலில் எடுத்து விசாரணை நடத்தி தன்னுடைய மகளின் மற்ற உடல் பாகங்களையும் கண்டுபிடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். சந்தியாவின் இறுதி நிகழ்ச்சி அவரது சொந்த ஊரான நாகர்கோவில் அருகே ஞாலம் என்னும் ஊரில் நாளை நடைபெற உள்ளது.
சந்தியாவின் தலை கிடைக்காத நிலையில் கொலை செய்யப்பட்டது சந்தியாதான் என்பதை உறுதி செய்வதற்காக டிஎன்ஏ சோதனை நடத்த நீதிமன்ற உத்தரவிற்காக காத்திருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.