Published : 15 Apr 2019 11:37 AM
Last Updated : 15 Apr 2019 11:37 AM

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி இடைத்தேர்தல்; சட்டப்பேரவைக்கு செல்ல இருக்கும் வேட்பாளர் யார் ?

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை தொகுதி, மறுசீரமைப்பில் புதிதாக உருவாக்கப்பட்டது. இந்த தொகுதியில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரத்து 878 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில், ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 26 ஆயிரத்து  685, பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 24 ஆயிரத்து 190, மூன்றாம் பாலின வாக்காளர்கள் 3 பேர். கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டப் பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் பழனியப்பனும், திமுக சார்பில் முல்லைவேந்தனும் போட்டி யிட்டனர். முல்லைவேந்தனைவிட சுமார் 10 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்ற பழனியப்பன் அன்றைய அதிமுக ஆட்சியில் உயர் கல்வித் துறை அமைச்சர் ஆனார்.

2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் பழனியப்பனும், திமுக சார்பில் பிரபு ராஜசேகரும் போட்டியிட்டனர். பாமக தனித்துப் போட்டியிட்டது. அக்கட்சி சார்பில் சத்தியமூர்த்தி போட்டியிட்டார்.

இந்த தேர்தலிலும் பழனியப்பன் சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். ஆனால், டிடிவி தினகரன் அணிக்கு ஆதரவாக நின்ற நிலையில் பழனியப்பன் தகுதி நீக்கம் செய்யப்பட்டு எம்எல்ஏ பதவியை இழந்தார். 

இதனால், இத்தொகுதியில் தற்போது இடைத் தேர்தல் நடக்கிறது.

இந்த தொகுதியில் வன்னியர் சமூக வாக்கு 35 சதவீதமும், ஆதி திராவிடர் மற்றும் அருந்ததியர் சமூக வாக்கு 30 சதவீதமும், கொங்கு வேளாளர் சமூக வாக்கு 15 சதவீதமும் உள்ளது. மீதமுள்ள 20 சதவீதத்தில் போயர், ரெட்டியார், செட்டியார், சிறுபான்மையினர் உள்ளிட்டோர் அடங்குவர்.

தற்போது இங்கு திமுக சார்பில் வழக்கறிஞர் மணி, அதிமுக சார்பில் கோவிந்தசாமி, அமமுக சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதுதவிர, நாம் தமிழர் சதீஷ், மக்கள் நீதி மய்யம் நல்லதம்பி ஆகிய வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

மக்களின் எதிர்பார்ப்பு

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி யில் வாணியாறு இடது கால்வாயை நீட்டிப்பு செய்து மேலும் 20 ஏரிகளுக்கு தண்ணீர் வழங்கி விவசாயத்துக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால், கால்வாய் நீட்டிப்பு செய்வதில் வனத்துறை அனுமதி பெறுவதில் சிக்கல் நிலவுகிறது. இதுதவிர, அணைக்கு பல ஆண்டுகளாகவே போதிய நீர்வரத்து இல்லை. இருப்பினும் அனைத்து வேட்பாளர்களுமே இந்த திட்டத்தை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.

தொகுதி நிலவரம்

கடந்த சட்டப் பேரவை தேர்தலில் அதிமுக-வுக்கு 74 ஆயிரம் வாக்குகளும், பாமக வேட்பாளருக்கு 61 ஆயிரம் வாக்குகளும் கிடைத்துள்ளன.  தற்போது அதிமுக அணியில் பாமக இணைந்துள்ளது. எனவே, முந்தைய வாக்குகளை கூட்டி, சேதாரங்களை கழித்தாலும்கூட 1 லட்சத்து 10 ஆயிரம் வாக்குகளுக்கு குறையாமல் பெற்று விடலாம் என்ற கணக்குடன் தொகுதியில் வலம் வந்து கொண்டிருக்கிறார் அதிமுக வேட்பாளர் கோவிந்தசாமி.  இரு அரசுகள் மீதான கோப தாபங்களும் வலுவான திமுக கூட்டணியின் வாக்குகளும், அரசு  ஊழியர்கள் மற்றும் சிறுபான்மையினர் வாக்குகளும் சேர்ந்து தன்னை கண்டிப்பாக கரை சேர்த்து விடும் என்பது திமுக வேட்பாளர் மணியின் நம்பிக்கை. இதுதவிர, தொகுதியை பலப்படுத்த திமுக தலைவர் ஸ்டாலின் 2 கட்ட பிரச்சாரம் முடித்துச் சென்றுள்ளார்.

பாப்பிரெட்டிப்பட்டியில் அமமுக வெல்ல வேண்டும் அல்லது குறைந்தபட்சம் அதிமுக-வை தோற்டிக்கவாவது செய்ய வேண்டும் என்ற இலக்குடன் பணியாற்றி வருகிறார் அக்கட்சி வேட்பாளர் டி.கே.ராஜேந்திரன். முன்னாள் அமைச்சரும், அமமுக-வின் தலைமை நிலையச் செயலாளருமான பழனியப்பனுக்கு, இந்த தொகுதியில் அதிமுக-வை தோற்கடிக்க வேண்டும் என்பது இலக்கு.

எட்டுவழிச் சாலை விவகாரம்

சேலம்-சென்னை இடையே அமைய இருந்த எட்டு வழிச்சாலை இந்த தொகுதி விவசாயிகளையும் பாதிக்க இருந்தது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவால் திட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், திட்டத்தை நிறைவேற்ற முயன்ற கட்சிகள் மீண்டும் அரசியல் அதிகாரத்துக்கு வரும்போது திட்டத்தை கையில் எடுக்க வாய்ப்புள்ளது எனக் கருதும் விவசாயிகள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான மன நிலையில் உள்ளனர்.

இருப்பினும், ஒவ்வொரு வேட்பாளரும் தங்களது சில சாதனைகள், வாக்குறுதிகளை முன்வைத்து வாக்காளர்களிடம் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். திமுக, அதிமுக, அமமுக வேட்பாளர்கள் இடையேதான் இத்தொகுதியில் பிரதான போட்டி நிலவுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x