Last Updated : 29 Apr, 2019 09:10 AM

 

Published : 29 Apr 2019 09:10 AM
Last Updated : 29 Apr 2019 09:10 AM

மக்களின் ரசனையை உணர்வதே முக்கியம்!- சினிமா வெற்றிக்கு வழிகாட்டும் திருப்பூர் சுப்பிரமணியம்

பிரதமரிடம் பேச நேர்ந்தாலும், தலைநிமிர்ந்து தைரியமாக பேச வேண்டும் என்பதே என் கொள்கை. நம் உழைப்பில் நாம் வாழும்போது  எதற்காகவும், யாருக்காகவும் அச்சப்பட வேண்டியதில்லை. கூர்மையான நாக்கு கொண்டவன் என்றே என்னை சினிமா வட்டாரத்தில் அழைப்பார்கள்.  ரூ.100 கோடி  வசூல் என்று பொய்யாக வெற்றி விழா கொண்டாடும் நட்சத்திர நாயகர்களைப் பார்த்து, `நீங்கள் மற்றவர்களை ஏமாற்றவில்லை. உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்கிறீர்கள். உங்களுக்கு வாழ்வளித்த சினிமாவையும் ஏமாற்றுகிறீர்கள்’ என்று கடுமையாக சாடியிருக்கிறேன் என்கிற திருப்பூர் சுப்பிரமணியம், கொங்கு மண்டலப் பகுதியில் மட்டும் 56 திரையரங்குகளைப் பொறுப்பெடுத்து நடத்துகிறார்.

திருப்பூரில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட, 8 திரைகள் கொண்ட ஸ்ரீசக்தி சினிமாஸ்  நிறுவனத்தின் தலைவர். 646 திரைப்படங்களை வெளியீடு செய்த அனுபவம் மூலம் பலருக்கு வழிகாட்டியாக இருப்பவர். 100 ரூபாய் கடன் பெற முடியாமல் கல்லூரிக்குப் போகமுடியாதவர், இன்று திரைப்படங்கள் தயாரிக்க பல கோடி ரூபாய் ஃபைனான்ஸ்  வழங்கும் நிலைக்கு உயர்ந்திருக்கிறார்.

இதய வீணை!

“திரைப்படம் வெளியிடுகிற முதல் முயற்சி தோல்வியடைந்த பிறகு, ‘இதய வீணை’ என்ற படத்தை ரூ.1,750-க்கு வாங்கி, அதே யூனிவர்சல் தியேட்டரை வாடகைக்கு எடுத்து மூன்று காட்சிகள் திரையிட்டோம். அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி, ஒரே வாரத்தில் ரூ.3,600 லாபம் கிடைத்தது. நான் மாதம் முழுவதும் வேலை செய்தாலும் அப்போது ரூ.500-தான் சம்பளம்  கிடைக்கும். எதை எனக்குப் பிடித்த பொழுதுபோக்காக வைத்திருந்தேனோ, அதுவே எனக்கு ஒரு நிரந்தரத் தொழிலாக மாறும் நிலை வந்தது.

பகல் முழுக்க வேலை செய்துவிட்டு இரவில் தினம் தியேட்டருக்குப் போய், வசூல் நிலவரங்களைக் கவனிப்பேன். படம் முடிந்து மக்கள் வெளியே வரும்போது, நானும்  கூட்டத்தோடு கூட்டமாக கலந்துவிடுவேன். மக்கள் எதை ரசித்தார்கள், எதை வெறுத்தார்கள் என்பதையெல்லாம கவனித்து, அடுத்தடுத்த படங்களைத் தேர்வு செய்தேன்.

திரையரங்கை வாடகைக்கு எடுத்து, படங்களை வெளியிட்டதற்கு  நல்ல பலன் கிடைத்தது. ஊரின் மையப் பகுதியில் இடம் வாங்கி திரையரங்கம் கட்டி, பராமரிக்க அன்றைய தேதியில் ரூ.25 லட்சத்துக்கு மேல் செலவாகும். அவ்வளவு பணமும் என்னிடம் இல்லை. மக்கள் ரசிக்கும் படத்தைத் தேர்வு செய்து, வெளியீட்டு உரிமை வாங்குவதற்கு குறைந்த முதலீடே போதுமானதாக இருந்தது.

மகாகவி காளிதாஸ்!

சிவாஜி நடித்த மகாகவி காளிதாஸ் திரைப்படம்  வெளியானபோது, பெரிய தோல்வியைத் தழுவியது. சில ஆண்டுகளுக்குப் பிறகு அதை குறைந்த விலைக்கு வாங்கி, தியேட்டரில் ரிலீஸ் செய்தேன். மக்கள் ரசனை மாறியிருந்த காரணத்தால் அந்தப்படம் வெற்றிகரமாக ஓடி ரூ.15 லட்சம் லாபம் கொடுத்தது. தோல்விப் படம் என்று ஒதுக்கி வைத்திருந்த திரைப்படம், வருமானத்தை அள்ளித் தந்தது.

நான் பகுதி நேரமாக திரைப்படங்களை வாங்கி வெளியிடுவதைப் பற்றி அறிந்த முதலாளி சதாசிவம், அக்கறையுடன் அறிவுரை வழங்கினார். ‘திரைத் துறை மோசமானது. அங்கே போனால் உருப்பட முடியாது. ஏமாற்றுகிறவர்கள் அதிகம்’ என்பது போன்ற பல பொதுவான விஷயங்களை நினைவூட்டினார். ‘எல்லா தொழிலிலும் இருக்கிற நன்மை தீமைகள், சினிமாவிலும் இருக்கு. நீங்க தோல்வி அடைந்த மனிதர்களைப் பத்தி சொல்றீங்க. வெற்றியடைந்த மனிதர்களின் பட்டியலை என்னால தரமுடியும்?’ என்று பதில் சொன்னேன்.

சினிமாவில் வதந்திகள் அதிகம் என்பார்கள். உண்மையில் சினிமாவைப் பற்றிய வதந்திகள்தான் மிக அதிகமாக இருக்கின்றன. திருப்பூரில் ஏற்றுமதி தொழிலில் ஏமாற்றுகிறவர்களும், ஏமாறுகிறவர்களும் சினிமாவைவிட நூறு மடங்கு அதிகம். அதற்காக அந்தத் தொழிலைக் குறை சொல்ல முடியுமா? லாப-நஷ்டம் என்பது எல்லா தொழிலுக்கும் பொருந்தும். மற்ற தொழில்களில் தனி மனித ஒழுக்கத்தை சிதைக்கும் பலவீனங்களை நாம் தேடிப்போக வேண்டும். ஆனால், திரைத் துறையில் அவை நம்மைத் தேடி வரும். அவ்வளவுதான் வேறுபாடு. நாம் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தால், எந்தத் தொழிலிலும் உறுதியாக வெற்றியடைய முடியும்.

ஒரு சி.பி.ஐ.யின் டைரி குறிப்பு!

வேலையை ராஜினாமா செய்துவிட்டு, திரைப்பட விநியோகஸ்தராக சினிமா வெளியீட்டில் முழுமையாக  இறங்கினேன். இரண்டாம் ரிலீஸ், மூன்றாம் ரிலீஸ் என்பதிலிருந்து அடுத்த வளர்ச்சியாக,  மலையாள புதுப் படங்களைத் தமிழக உரிமை வாங்கி வெளியிட்டேன். டப்பிங்  செய்யப்படாத,  மம்முட்டி நடித்த ‘ஒரு சி.பி.ஐ.யின் டைரி குறிப்பு’  படம் ரூ.10 லட்சம் லாபம் கொடுத்தது. அதுவரை மலையாளப்  படங்கள் என்றாலே, ஆபாசமான படங்கள் என்ற பிம்பம் இருந்த நிலை மாறத் தொடங்கியது. பிறகு, ஆங்கிலப் படங்களை மொழிமாற்றம் செய்து வெளியிட்டேன்.

அப்போதுதான், ஒப்பந்தம் போடுவதற்கு நிறுவனத்தின் பெயர் அவசியம் என்றே தெரியும். ‘சக்தி பிலிம்ஸ்’ என்று மனதில் தோன்றிய பெயரைக்  குறிப்பிட்டேன். என் நிறுவனத்தின் பெயரைச் சொன்னால், வணிகம் செய்ய அனைவரும் நம்பிக்கையோடு முன்வர வேண்டுமென்கிற லட்சியத்தோடு உழைக்கத் தொடங்கினேன்.

சினிமா வர்த்தக வட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உருவாக்க முனைப்புடன் வேலைசெய்தேன். கணக்கு சரியாக அளித்து, உரிய நேரத்தில் பணத்தை ஒப்படைப்பேன். இதனால் பெரிய தயாரிப்பாளர்கள், எனக்கு வெளியீட்டு உரிமையை விரும்பி வழங்கினர்.

திரைத் துறையில் தொடந்து நிலையான வெற்றியைத் தக்க வைத்துக்கொள்ள, நானே சில கட்டுப்பாடுகளை எனக்கு வகுத்துக் கொண்டேன். என்னிடம் இருக்கும் பணத்தில் 25 சதவீதம்  அளவே முதலீடு செய்து புதிய முயற்சிகளில் ரிஸ்க் எடுப்பேன்.  அத்தகைய முயற்சிகளில் போடுகிற பணம் திரும்ப வராது என்கிற மனநிலையில், துணிச்சலான முடிவுகளை எடுப்பேன். அதில் பெரிய லாபம் கிடைத்தால், அடுத்தமுறை 50 சதவீதம் ரிஸ்க் எடுத்துப் பார்க்கலாம் என்று நான் ஒருபோதும் முயற்சி செய்தது இல்லை.நான் கவனித்தவரையில், ஆசையின் படிக்கட்டுகளில் ஆர்வமாக ஏறி 100 சதவீதம் ரிஸ்க் எடுப்பவர்கள்கூட சினிமாவில் இருக்கிறார்கள். ஒரே நாளில் தெருவுக்கு வந்தவர்கள், பெரும்பாலும் இந்த வகையை சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

ராசி!

திரைத் துறையில் அதிக மூடநம்பிக்கைகள் உண்டு. எனக்கு அதில் எல்லாம் கொஞ்சமும் நம்பிக்கை இல்லை. நம்முடைய வேலையை நாம் ஒழுங்காக செய்தால், எல்லாம் நன்மையாகவே நடக்கும். முன்பு 100 பெட்டிகளுக்கு மேல் பிரிண்ட் போட்டு, அவற்றில் ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்களைக் குறிப்பார்கள். எல்லோரும் ராசியான எண் உள்ள படப்பெட்டிகளை எடுக்க ஆர்வம் காட்டுவார்கள். நான் கடைசி ஆளாகப்  போய், என்ன பெட்டி இருக்கிறதோ, அதை எடுத்துக் கொள்வேன். எல்லா பெட்டியிலும் ஒரே படம்தான் இருக்கும். எட்டாம் நம்பர் பெட்டி எடுத்தால், படம் நன்றாக ஓடாது என்று நம்புபவர்களைப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கும்.

அதேபோல, திரைப்பட விநியோகஸ்தராக கொங்குப் பகுதியைத் தவிர்த்து, தமிழகத்தின் வேறு பகுதிகளுக்கான விநியோக உரிமையை நான் வாங்கியதில்லை. நல்ல வசூல் கொடுத்த பல வெற்றிப் படங்களின் ஒட்டுமொத்த தமிழக ரிலீஸ் உரிமையைக்கூட எனக்கு வழங்க தயாரிப்பாளர்கள் முன்வந்திருக்கிறார்கள். நாம் செய்கிற தொழில் நம் கண்ணுக்கு முன்னால் இருக்க வேண்டும் என்பது என்னுடைய கொள்கை.

திருநெல்வேலியில் படத்தை ரிலீஸ் செய்துவிட்டு, அங்குள்ள திரையரங்கில்  எத்தனை பேர் படம் பார்த்தார்கள் என்று  திருப்பூரில் இருந்தபடி கவலைப்பட விரும்பியதில்லை. அதேபோல, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சினிமா தியேட்டர் நடத்தும் வாய்ப்பு எத்தனையோ முறை தேடிவந்தும், உறுதியாக ஏற்க மறுத்திருக்கிறேன். கோவையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் மட்டுமே என்னுடைய தொழிலை இதுநாள்வரை செய்துவருகிறேன்.

பெரிய நடிகர்கள் என்னை அழைத்து, திரைப்படத்துக்கு கால்ஷீட் கொடுக்க முன்வந்திருக்கிறார்கள். ஏ.வி.எம். மெய்யப்ப செட்டியார், எல்.வி. பிரசாத் போன்ற ஜாம்பவான்களை முன்மாதிரியாக கொண்டுதான் நான் திரைத் துறைக்கு வந்தேன். ஆனாலும், படம் தயாரிக்க சென்னையில் இருப்பது அவசியம். கோடிக்கணக்கில் முதலீடு போட்டு படம் தயாரிக்கும்போது, நான்  தொழில் நடக்கும் இடத்தில் இல்லாமல் வேறொரு ஊரில் இருந்தால் ஏமாற்றப்படுவது உறுதி. சினிமாத்துறையில்  கொங்குப் பகுதியை மையமாக வைத்தே இயங்கிய எனக்கு,  சென்னைக்கு இடம்பெயரும் சூழல் உருவாகவே இல்லை. அதனால்,  படத் தயாரிப்பில் மட்டும் ஈடுபடாமல் தவிர்த்துவிட்டேன்.

மனைவி சொல்லே மந்திரம்!

படம் எடுக்கிற பல தயாரிப்பாளர்களுக்கு ஆரம்பத்திலிருந்தே ஃபைனான்ஸ் செய்து வந்திருக்கிறேன். இதுதான் இருப்பதிலேயே அதிக ரிஸ்க் இருக்கும் வேலை. நான் ஒருவருக்கு கடன் கொடுக்க முடிவெடுத்தால், அவர்களுடைய பின்னணியை நன்றாக ஆராய்ந்த பிறகே கொடுப்பேன். ஆரம்பத்தில், மற்றவர்களிடம் பணத்தை பெற்று, தயாரிப்பாளர்களுக்கு ஃபைனான்ஸ் செய்தேன். கடன் வாங்கியவர்கள் சொன்னபடி தராமல் போனால், நான் அனைவருக்கும் பதில் சொல்லும் நிலைக்கு ஆளானேன். என் தொழிலில் எப்போதும் தலையிடாத என் மனைவி, முதல்முறையாக தலையிட்டு எச்சரிகை செய்தார்.  ‘100 ரூபாய் சம்பாதித்தாலும் பரவாயில்லை. மற்றவர்களுக்கு கைகட்டி பதில் சொல்லும்படி தொழில் செய்ய வேண்டாம்’ என்றார். மனைவியின் சொல்லைத் தட்டாமல், அப்போதே  பணத்தை உரியவர்களிடம் ஒப்படைத்தேன். அன்றிலிருந்து  கையிலிருக்கும் பணத்திலிருந்தே ஃபைனான்ஸ் செய்து வருகிறேன். மனைவியின் இந்த எச்சரிக்கை என்னை பல  சிக்கலில் இருந்து விடுவித்து, தலைநிமிர்ந்து வாழ துணைபுரிந்தது.

என்னிடம் வணிகம் செய்யும் யாரும், நஷ்டமடையக் கூடாது  என்பதில் கவனமாக இருப்பேன். `மற்றவர்களை நஷ்டப்படுத்தி வரும் லாபம் நிலைக்காது’ என்பது என் நம்பிக்கை. என்னிடம் படம் வங்கிய ஒரு தியேட்டர் உரிமையாளர் நஷ்டமடைந்தால், அதை ஈடுகட்டும்விதமாக தொடர்ந்து அவர்களைத் தேடிப்போய் வர்த்தகம் செய்வேன். பிறருடைய வெற்றியில்தான் நம்முடைய வெற்றி நிலைத்து நிற்கிறது. மற்றவர்களுக்கு நல்லது நினைத்த எனக்கு கஷ்டம் வந்தபோது பலர் தேடிவந்து உதவி செய்திருக்கிறார்கள்.

நாட்டாமை!

திரைத் துறையின் பல்வேறு சங்கங்களில் பொறுப்புகளை ஏற்று செயல்படுவதில் எனக்கு எப்போதும் தனி ஆர்வம் உண்டு. ‘பொன்னான நேரத்தை வீணடிக்கிறாய்’ என்று பலர் எச்சரித்து இருக்கிறார்கள். எந்தத் தொழிலால் நாம் பலன் அடைந்திருக்கிறோமோ, அந்தத் தொழில் வளர்ச்சியடைய நம்மால் முடிந்த பங்களிப்பை வழங்க வேண்டும். தொழில் பாதுகாப்பை உருவாக்க, அனைவரும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம். அதற்கான  அமைப்பு சக்தியாக சங்கங்கள் இருக்கின்றன. பொதுப் பணிகளில் ஈடுபடும்போது சமரசம் இல்லாமல்,  பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க,  அமைப்பின் பொறுப்பில் இருப்பவர்கள் வழிசெய்ய வேண்டும்.

நாட்டுக்கொரு நல்லவனா... தளபதியா?

ஒருமுறை ரஜினி நடித்த ‘நாட்டுக்கொரு நல்லவன்’ திரைப்படம் வெளியான இரண்டு வாரத்தில்,  ‘தளபதி’ படம் வெளியிட விளம்பரம் செய்தார்கள். அப்போது, பெரிய நட்சத்திரங்கள் நடித்த படங்கள் ரிலீஸான மூன்று வாரம் கழித்தே, அதே நடிகரின் படம் ரிலீஸாக வேண்டும் என்று விதி இருந்தது. நான் ரஜினியிடமும், படத்தின் தயாரிப்பாளரிடமும், ‘நீங்கள் விதியை மீறி படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம்’ என்று சொன்னேன். தீபாவளி வெளியீடு என்பதால் தள்ளிவைக்க முடியாது என்றது தயாரிப்பாளர் தரப்பு.  பாதிப்படைகிற ‘நாட்டுக்கொரு நல்லவன்’ படத் தயாரிப்பாளர் ஒப்புதல் கொடுத்தால் மட்டுமே, தளபதி படத்துக்கு அனுமதி என்று கறாராக சொல்லிவிட்டேன். ஒப்புதல் கடிதம் கொடுத்த பிறகே தளபதி படம் ரிலீஸானது.

அந்த நிகழ்வுக்கு அடுத்த நாள், ‘உங்களை சந்திக்க வேண்டும். வீட்டுக்கு வாங்க’ என்று அழைப்புவிடுத்தார் ரஜினி. ‘பெரிய நடிகர், பெரிய தயாரிப்பு நிறுவனம்’னு தெரிஞ்சும் நியாயமா நடந்துக்கிட்டீங்க. நாம நண்பர்களா இருப்போம்’னு கைகொடுத்தார். 25 வருடங்களாக  அந்த நட்பு, அதே நியாயத்தின் அடிப்படையில் தொடர்கிறது. இப்படி ஏராளமான நிகழ்வுகளைச் சொல்லமுடியும்.

திரைத் துறை தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க,  மூன்று முதலமைச்சர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் வாய்ப்பு கிடைத்தபோது,  ஒருங்கிணைந்த சினிமா வளர்ச்சிக்கான தேவைகளை வலியுறுத்தினேன். அனைத்து தரப்பு மக்களையும் மகிழ்விக்கிற சினிமா,  என்றைக்குமே அழியாத தொழில். 24 மணி நேரமும் திரைப்படங்களை ஒளிபரப்பும் தொலைக்காட்சிகள்,  திருட்டி விசிடி பிரச்சினை, அதிகமான டிக்கெட் கட்டணம், மத்திய, மாநில அரசுகளின் கடுமையான வரிவிதிப்பு, இணையதளங்களின் உழைப்பு திருட்டு என பல்வேறு பிரச்சினைகள் காலந்தோறும் இருந்துகொண்டே உள்ளது. எல்லா பிரச்சினைகளையும் கடந்து  திரைப் படங்களும்  வந்துகொண்டே இருக்கின்றன. மக்கள் ரசித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

எனக்குப் பிறகு, இந்தத் தொழிலில் ஈடுபடுகிற என் இரண்டு மகன்களும், என்னைவிட சிறப்பாக வர்த்தகம் செய்கிறார்கள்.  மும்பையில் இருக்கும் அதிநவீன திரையரங்குகள்போல திருப்பூரில்

ஹைடெக் தியேட்டர் கட்டி,  வெற்றிகரமாக தொழில் செய்கிறார்கள். விரைவில் கோவையில் 8 அரங்குகள் கொண்ட நவீன திரையரங்கம் திறக்கப்போகிறோம். இரண்டாம் தலைமுறை வந்தபிறகும், ‘சினிமா மோசமான தொழில்’ என்ற வதந்தியை, வார்த்தை மாறாமல் சொல்கிறவர்களும்  இருக்கிறார்கள்.

ஒழுக்கமாகவும், மக்களின் ரசனையை உணர்ந்தும் தொழில் செய்தால், சினிமாவைவிட சிறந்த தொழில் வேறு இல்லை என்பது என்  40 ஆண்டுகால திரையுலக அனுபவம்” என்று நம்பிக்கை வார்த்தைகள் கூறுகிறார் திருப்பூர் சுப்பிரமணியம். 67 வயதைக் கடந்த பிறகும்,  திரைத் துறையில் எந்தப் பிரச்சினை என்றாலும், அனைவரையும் அரவணைத்து வழிநடத்த முதல் ஆளாக நிற்கிறார் இவர். நடுநிலைமையாளர் என்ற நற்பெயர்தான் இவரது விலைமதிப்பில்லாத சொத்து!

அடுத்த வாரம்... அடுத்த சாம்ராஜ்யம்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x