Published : 15 Apr 2019 11:08 AM
Last Updated : 15 Apr 2019 11:08 AM

நான்கு யுகங்களைக் கண்ட சுக்ரீஸ்வரர் கோயில்!

திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கிலோ மீட்டர் தொலைவில் சர்க்கார் பெரியபாளையத்தில் அமைந்துள்ளது சுக்ரீஸ்வரர் கோயில். ராமாயண காலத்தில் ஸ்ரீராமருக்கு உதவியாக இருந்த சுக்ரீவன், இங்கு ஈஸ்வரனை பிரதிஷ்டை செய்து வழிபட்டதால்,  மூலவருக்கு சுக்ரீஸ்வரர் என்று பெயர் வந்ததாக தல புராணம் கூறுகிறது. இதற்குச் சான்றாக, இக்கோயிலின்  அர்த்த மண்டப சுவரில், சுக்ரீவன், சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும் புடைப்புச் சிற்பம் உள்ளது. இத்தல இறைவன் `குரக்குத்தளி ஆடுடைய நாயனார்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

இந்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறையின் கீழ்,  பழைய வரலாற்றுச் சிறப்புகள் நிறைந்த, வேலைப்பாட்டுடன் கூடிய கோயில்கள் திருப்பூரில் இரண்டு உள்ளன. இவை, திருமுருகன்பூண்டி திருமுருகநாத சாமி கோயில்,  திருப்பூர் சர்க்கார் பெரியபாளையம் சுக்ரீஸ்வர சாமி கோயில் ஆகும்.

சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோயிலான சுக்ரீஸ்வரர் கோயில், திருப்பூர் அருகில் ஐராவதி(நல்லாறு) நதிக்கு தெற்கிலும், காஞ்சி (நொய்யல்) நதியின் வடக்கிலும் அமைந்துள்ளது.  முந்தைய காலத்தில் முகுந்தாபுரி பட்டணம் என அழைக்கப்பட்ட இக்கோயில் பேரரசர்களால் ஆளப்பட்டதுடன், மிகப் பெரிய வியாபாரத் தலமாகவும் இருந்துள்ளது. கோட்டை, கொத்தளங்களுடன் பெரிய அளவில் கோயில் தலமும், சுற்றுப்புறமும் இருந்துள்ளது.

இக்கோயில் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. எனினும்,  17.28 லட்சம் ஆண்டுகளை கொண்ட கிரதாயுகத்தில் காவல் தெய்வமாகவும், 12.96 லட்சம் ஆண்டுகளை கொண்ட திரேதாயுகத்தில் சுக்ரீவனாலும், 8.64 லட்சம் ஆண்டுகளை கொண்ட துவாபரயுகத்தில் இந்திரனின் வாகனமாக ஐராவதத்தாலும் வணங்கப்பட்டது என்றும், 4.32 லட்சம் ஆண்டுகளை கொண்ட, கலியுகத்தில் தேவர்களாலும், அரசர்களாலும் வணங்கப்பட்டுள்ளது என்று புராண, இதிகாசங்கள் தெரிவிக்கின்றன. இதனாலேயே இக்கோயிலை நான்கு யுகங்களைக் கண்ட கோயில்  என பக்தர்கள் போற்றி வணங்குகின்றனர். பிரமிக்க வைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள இங்கு, மூலவர் சுக்ரீஸ்வரர், லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். வலதுபுறம் ஆவுடை நாயகியாக அம்மன் வீற்றிருக்கிறார். சுற்றுப் பிரகாரங்களில், கன்னி மூல விநாயகர், தட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், பைரவர் சன்னதிகளும், வேறெந்த  சிவன் கோயிலிலும் இல்லாத சிறப்பாக, கருவறைக்கு நேர் எதிரே  பத்ரகாளியம்மன் சன்னதியும் உள்ளது.

நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என பஞ்ச பூதங்களைக் குறிக்கும் வகையில் இக்கோயிலில் பஞ்சலிங்கங்கள் அமைந்துள்ளன. மூலவராக, அக்னி லிங்கம், கோயிலைச் சுற்றிலும் மூன்று லிங்கங்கள், சிவனுக்குப் பிடித்த வில்வ மரத்தின் கீழ் ஐந்தாவதாக, ஆகாச லிங்கம், அமைந்துள்ளதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

இரண்டு நந்திகள்!

இக்கோயிலில் இரண்டு நந்திகள் உள்ளன. முதலில் உள்ள நந்திக்கு கொம்பு, காது இருக்காது. இந்த நந்தி பசுவாக அருகில் உள்ள விவசாய நிலத்துக்கு சென்று மேய்ந்தபோது, ஆத்திரமடைந்த விவசாயி அதன் காதையும், கொம்பையும் அறுத்துள்ளார். மறுநாள் கோயிலுக்குச் சென்று பார்த்தபோது, கற்சிலையான நந்தியின் காதிலிருந்து ரத்தம் வழிந்துள்ளது. அதிர்ச்சியடைந்த விவசாயி, தனது தோட்டத்துக்கு வந்தது நந்தி என்பதை  உணர்ந்து, மன்னிப்பு கேட்டு, வணங்கியுள்ளார். மேலும், தவறுக்கு பிராயச்சித்தமாக, மற்றொரு நந்தி சிலை செய்து பிரதிஷ்டை செய்துள்ளார். அடுத்த நாள்  பழைய நந்தி முன்பும், புதிய நந்தி பின்னாலும் மாறி இருந்துள்ளது. அவரது கனவில் சிவன் வந்து, உறுப்புகள் இல்லை என்றாலும் அதுவும் உயிர்தான், பழைய நந்தி முன்னால் இருக்க வேண்டும், புதியது பின்னால்தான் இருக்கட்டும் என்றும் கூறினாராம். இவ்வாறு இக்கோயிலில் இரண்டு நந்திகள் அமைந்துள்ளன. பிரதோஷ காலங்களில் இரண்டு சிலைக்கும் பூஜை நடத்தப்படுகிறது.

மிளகீஸ்வரர்!

கேரள வணிகர் ஒருவர் எருதுகளின் மீது மிளகு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு குரக்குத்தளி (சிவாலயம்) வழியாக செல்லும்போது, முதியவர் வேடத்தில் வந்த சிவபெருமான், கொஞ்சம் மிளகு கேட்டுள்ளார். கொடுக்க மனமில்லாத வணிகர், ‘மூட்டையில் உள்ளது மிளகு அல்ல, பயறு’ என்று பொய் கூறியுள்ளார்.  முதியவரும் ‘அப்படியே ஆகட்டும்’ என சொல்லிச் சென்றுவிட்டார். பின்னர், எருதுகளின் மேல்  பொதிகளை ஏற்றிக்கொண்டு, திருவாரூர் சென்ற வணிகர், மூட்டையை அவித்துப் பார்த்தபோது, மிளகுக்குப் பதில் பயறாக இருந்துள்ளது. தன்னை சந்தித்த முதியவர் சிவன் என்பதையறிந்த அந்த வணிகர் மனந்திருந்தி, சிவபெருமானை வழிபட்டுள்ளார். இதனால் இங்கு சிவனை ’மிளகீஸ்வரர்’ என்றும்

அழைக்கின்றனர். உடம்பில் மருகு உள்ளவர்கள் இங்கு பிரார்த்தனை செய்து, சிவனுக்கு மிளகை வைத்து பூஜித்து, 48 நாட்கள் அதை சாப்பிட்டு வந்தால்,  மருக்கள் அனைத்தும் மறைந்துவிடுவதாக நம்பிக்கை. இதனால், விழாக் காலங்களில் இப்பகுதி மக்கள் மிளகு இறைத்து, நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இக்கோயிலில் உள்ள மரம் தல விருட்சமாக வணங்கப்படுகிறது. உத்தராயணமும் தட்சிணாயணமும் சந்திக்கும்  வேளையில் சுவாமி மீது சூரிய ஒளி படும் வகையில் கட்டிடக் கலை அமைந்துள்ளது. இக்கோயில் விமானம் சோழர்கள் பாணியில் அமைந்துள்ளது.  திருவாதிரை நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி இறைவனை வழிபடுவது வழக்கம். அதேபோல, நடராஜப் பெருமானுக்கு பாரம்பரியமிக்க பூஜையும் நடைபெறுகிறது.

கொங்கு பகுதியில் சிவன் கோயில்களில் இருக்கும் ‘தீப ஸ்தம்பம்’ இக்கோயிலில் கிடையாது.கோயில் கிழக்கே பார்த்து இருந்தாலும், உள்ளே செல்லும் படிகள் தெற்கு பார்த்து அமைந்துள்ளன. கொங்கு நாட்டில் உள்ள நான்கு சிற்ப ஸ்தலங்களில் இக்கோயிலும்  ஒன்று.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x